பிரான்சு தேசிய காற்பந்து அணி
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி (France national football team; French: Équipe de France)), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் பிரான்சின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும். இது பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பினால் தேர்வு செய்யப்படுகிறது. இக்கூட்டமைப்பு யூஈஎஃப்ஏ-வின் உறுப்புச் சங்கங்களில் ஒன்றாகும். இத்தேசிய அணியினர் வழமையாக நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலான ஆடைகளை உடுத்தி விளையாடுவர்; இம்மூன்று நிறங்களுமே பிரெஞ்சு தேசியக் கொடியின் நிறங்களாகும். உலக அளவில், பிரெஞ்சு நாட்டின் எந்தவொரு விளையாட்டு அணியும் லெ புளூஸ் (நீல நிறத்தவர்) என்று அறியப்படுகின்றனர்; அனைத்து, பிரெஞ்சு விளையாட்டு அணிகளும் நீல நிற சீருடைகளை அணிவதால் இப்பெயர் ஏற்பட்டது. பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி முதன்முதலில் 1904-ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியில் விளையாடியது. இதன் தன்னக விளையாட்டரங்கம், பாரிஸ் நகரிலிலுள்ள பிரான்சின் விளையாட்டரங்கம் (Stade de France) ஆகும். பிரான்சு அணியானது, ஒரு முறை உலகக்கோப்பை காற்பந்து, இருமுறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி, இரண்டு பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் கால்பந்துப் போட்டியையும் வென்றிருக்கிறது. 2001-ஆம் ஆண்டில் பிபா கூட்டமைப்புகளின் கோப்பையை வென்றதனால், அர்கெந்தீனாவுக்குப் பிறகு, ஃபிஃபாவின் மூன்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோப்பைகளில் ஒரே நேரத்தில் நடப்பு-வாகையர்களாக இருந்த பெருமைக்கு உரித்தானவர்கள் ஆயினர். அருகில் இருக்கும் நாட்டவரான, இத்தாலியுடன் வெகுகாலமாக தொடர்ந்துவரும் போட்டித்தன்மையைக் கொண்டிருக்கின்றனர். மேலும், பெல்ஜியம், பிரேசில், இங்கிலாந்து, செருமனி மற்றும் எசுப்பானியா ஆகிய நாடுகளுடனும் பெருத்த போட்டித்தன்மையைக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி, மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் சிறப்பான அணியைக் கொண்டிருந்தது; 1950-களில், 1980-களில் மற்றும் 1990-களில் இருந்த அணியினரால் பல்வேறு கோப்பைகளும் விருதுகளும் வெல்லப்பட்டது. முதன்முறையாக நடத்தப்பட்ட 1930 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில், பிரான்சும் ஒன்றாகும். உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளின் குழு நிலைகளில் ஆறுமுறை வெளியேற்றப்பட்டிருப்பினும், இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.[2] 1958-ஆம் ஆண்டில், ரேமண்ட் கோபா மற்றும் ஜஸ்ட் ஃபோன்டெய்ன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அணி உலகக்கோப்பையில் மூன்றாம் இடத்தில் முடித்தது. 1984-ஆம் ஆண்டில், மூன்று முறை பாலோன் தி'ஓர் விருது வென்ற மிச்செல் பிளாட்டினியால் வழிநடத்தப்பட்ட பிரான்ஸ் அணி யூரோ 1984 போட்டியில் கோப்பையை வென்றது. 1998-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளை பிரான்சு நடத்தியது. அணித்தலைவராக திதியர் தெஸ்சாம்சு இருந்தார். ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் விருது பெற்ற ஜீனடின் ஜிதேன் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்தார். அந்த உலகக்கோப்பையை வென்றதன் மூலம், உலகக்கோப்பையை வென்ற எட்டு நாடுகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ 2000 கோப்பையை வென்ற பிறகு, முதன்முறையாக பிஃபா உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன்பின்னர், இரண்டு ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பையையும் (2001, 2003), உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடமும் (2006) பெற்றிருக்கிறது. குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia