கீச்சான் மீன்
![]() ![]() கீச்சான் (Terapon jarbua) என்பது டெராபான்ட்டைடீ குடும்பத்தைச் சேர்ந்த, அக்டினோட்டெரிகீயை மீன் வகையாகும். இது இந்தோ பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இது காணப்படும் பகுதிக்குள் ஒரு முக்கியமான வணிக இனமாக உள்ளது. மேலும் இது மீன்காட்சி சாலை வர்த்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. விளக்கம்கீச்சான் ஒரு நடுத்தர அளவிலான மீனாகும். இது தட்டையான நீள்வட்ட உடலைக் கொண்டுள்ளது. இதன் வாய் சாய்வாக உள்ளது, தாடைகள் சம நீளம் கொண்டவை. இது கூம்பு வடிவ, சற்றே வளைந்த பற்களைக் கொண்டுள்ளன. வெளிப்புற வரிசைகளில் உள்ள பற்கள் மிகவும் பெரிதாக பட்டைகளாக அமைந்துள்ளன. குட்டி மீன்களின் மேல் வாயில் பற்கள் உள்ளன. ஆனால் பல பெரிய மீன்களுக்கு இவை இருப்பதில்லை. முதுகுத் துடுப்பில் 11 அல்லது 12 முட்கள் மற்றும் 9 முதல் 11 கதிர்கள் உள்ளன, முதுகுத் துடுப்பு முட்கள் பகுதி வலுவாக வளைந்திருக்கும், நான்காவது முதல் ஆறாவது முட்கள் மிக நீளமானவை. குத துடுப்பில் 3 முட்களும், 7 முதல் 10 மென்மையான கதிர்கள் உள்ளன.[4] இவற்றின் உடல் வெள்ளி நிறமாக உள்ளது. உடலில் 3 அல்லது 4 கிடைமட்டக் கோடுகள் உள்ளன. அவை உடலின் முதுகில் இருந்து பின்பகுதியில் வால் துடுப்பு வரை நீளும். வால் ஒவ்வொரு மடலிலும் கருப்பு முனையுடன் கோடுகளுள்ளன. இந்த மீன்கள் 13 சென்டிமீட்டர்கள் (5.1 அங்குலம்) நீளத்தை அடைந்த பிறகு பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இவை பொதுவாக சுமார் 25 சென்டிமீட்டர்கள் (9.8 அங்குலம்) நீளம் வரை வளர்கின்றன. இவற்றில் மிக நீளமானதான பதிவு செய்யப்பட்ட மீன் 36 சென்டிமீட்டர்கள் (14 அங்குலம்) ஆகும்.[3] பரவல்கீச்சான் மீன்கள் இந்தோ பசிபிக் கடல்பகுதியில் பரவியுள்ளன. இது செங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து தெற்கே தென்னாப்பிரிக்கா வரையிலான இந்தியப் பெருங்கடல் வழியாக பாரசீக வளைகுடா மற்றும் பசிபிக் பெருங்கடல் வரை கிழக்கே சமோவா வரை நீண்டுள்ளது. வடக்கே ஜப்பான் மற்றும் தெற்கே அரஃபூரா கடல் மற்றும் லோர்ட் ஹாவ் தீவு வரை பரவியுள்ளது.[1] இது முதன்முதலில் 2010 இல் இஸ்ரேலுக்கு அப்பால் உள்ள மத்தியதரைக் கடலில் பதிவு செய்யப்பட்டது. இது சுயஸ் கால்வாய் வழியாக அந்தக் கடலில் நுழைந்திருக்கலாம் எனப்பட்டது.[5] வாழ்விடம் மற்றும் உயிரியல்கீச்சான் மீன்கள் உப்புநிலை மாற்றத்திற்கிசைவான மீன் இனங்களாகும். இவை தூய நன்னீர் முதல் 70% வரையிலான உப்புத்தன்மை கொண்ட நீர்வரை தாங்கக்கூடியவை. மேலும் இவை முற்றிலும் கடல் பகுதிகளிலிருந்து கடலோர நீர் வழியாக, நன்னீரில் நுழைந்து பல்வேறு வாழ்விடங்களில் வாழக்கூடியது. இது முக்கியமாக ஒரு கடல் இனம் என்றாலும், இது நன்னீர் ஆறுகளில் வெகுதூரம் நகரும்.[6] கீச்சான் குஞ்சுகள், மணல் மற்றும் கடல் அலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், கடற்கரையோரக் குட்டைகளிலும் அடிக்கடி பதிவு செய்யப்பட்டுள்ளன.[3] இது ஒரு வேட்டையாடி இனமாகும், இது சிறிய மீன்களை உண்கிறது. ஆனால் இது பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை உண்ணும் தூய்மையாக்கி மீனாகவும் செயல்படுகிறது. மேலும் அதிக கலோரிகளைக் கொண்ட அவற்றின் செதில்களை சாப்பிடுவதாகவுத் அறியப்படுகிறது. கீச்சான்களின் தனித்துவமான நிறம் உடல் பட்டைகள் இவற்றிற்கு உருமறைப்பு தந்து பிற வேட்டையாடிகளிடமிருந்து தாக்கப்படுவதைத் தவிர்க்க உதவுவதாக இருக்கலாம்.[7] இவை பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பி உயிரினங்களையும் உணவாக கொள்ளும்.[8] 2 மற்றும் 5 சென்டிமீட்டர்கள் (0.79 மற்றும் 1.97 அங்) இடையே நிலையான நீளம் கொண்ட இளம் மீன்கள் கூட்டமாக இருக்கும் ஆனால் 9 மற்றும் 15 சென்டிமீட்டர்கள் (3.5 மற்றும் 5.9 அங்) இடையிலான மீன்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பை ஆளுமை செய்து வாழும். இவற்றால் காற்றுப்பையில் உள்ள வெளிப்புற தசைகளைப் பயன்படுத்தி ஒலிகளை உருவாக்க முடியும். இந்த ஒலியை தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும், மீன் முதிர்ச்சியடையும் போதும், மீனின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களினாலும் இந்த ஒலிகள் மாறுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த மீன்கள் நன்னீரில் ஏறிச்செல்வதாக இருப்பதாக பதிவாகி இருந்தாலும், கடல் சூழலிலேயே இனப்பெருக்கம் நடைபெறுகிறது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia