குமார் குணரத்தினம்
குமார் குணரத்தினம் என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரத்தினம் (Premkumar Gunaratnam, பிறப்பு: நவம்பர் 18, 1965) என்பவர் இலங்கையின் அரசியல் செயற்பாட்டாளரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இலங்கையின் எதிர்க்கட்சிகளுள் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து 2011 ஆம் ஆண்டில் பிரிந்து சென்ற குழுவினருக்கு இவர் தலைமை தாங்கினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தது. இவரும் இவரது இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த திமுத்து ஆட்டிகல என்பவரும் 2012, ஏப்ரல் 7 ஆம் நாள் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுப்[1][2] பின்னர் இரண்டு நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிரேம்குமார் 2012 ஏப்ரல் 10 ஆம் நாள் அன்று ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம்கேகாலை புனித மேரி கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற பிரேம்குமார் உயர்தரக் கல்வியை பின்னவலை மத்திய கல்லூரியில் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இவர் தனது கல்வியை முடிக்கவில்லை. தந்தை ஆதிமூலம்பிள்ளை குணரத்தினம் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர்.[3] 1950களில் அவர் கேகாலைக்கு பணிக்காகக் இடம்பெயர்ந்தார். தாயார் வள்ளியம்மா ராஜமணி கேகாலையில் இந்திய-வம்சாவளியரான பாண்டியன்பிள்ளை, பார்வதி ஆகியோருக்கு பிறந்தவர்.[3] கேகாலை புனித மேரி தமிழ்ப் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். பிரேம்குமாரின் அண்ணன் ரஞ்சிதகுமார் என்ற ரஞ்சிதன் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) அரசியல் குழு உறுப்பினராக இருந்தவர். 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இளைஞர்கள் கிளர்ச்சியின் போது இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்பட்டு காணாமல் போனார்.[4] பிரேமகுமார் ஆத்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர். இவரது மனைவி மருத்துவர் சம்பா சோமரத்தின, மற்றும் பிள்ளைகள் சிட்னியில் வசிக்கின்றனர்.[3] அரசியலில்1980களின் இறுதியில் ஜேவிபி கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் அக்கட்சியை மறுசீரமைப்பதில் பிரேமகுமார் முக்கிய பங்கெடுத்திருந்தார். ஜே.வி.பி.யிலிருந்து 2011 ஆம் ஆண்டின் இறுதியில் பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் வெளியேறிய மாற்றுக் குழுவினர் "மக்கள் போராட்ட இயக்கம்" என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் "முன்னிலை சோசலிசக் கட்சி" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றையும் உருவாக்கியிருந்தனர். கடத்தல்முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 2012 ஏப்ரல் 9 ஆம் நாள் நடக்க ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாடு தொடர்பாக ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை மாலை மடிவெலவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பிரேம்குமார் அவரது மெய்க்காப்பாளருடன் வாகனம் ஒன்றில் புறப்பட்டு கம்பகா மாவட்டத்தில் உள்ள கிரிபத்கொடை என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை அங்கு இறக்கி விட்ட பின்னர், அவரது மெய்க்காவலர் வேறு இடத்துக்குச் சென்றார். இரவு 11 மணியளவில் தனது மெய்க்காவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குணரத்தினம், தன்னை அதிகாலை 5 மணியளவில் வந்து ஏற்றிச் செல்லுமாறு கூறியிருந்தார். அதிகாலை அங்கு அவர் சென்ரபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான தடயங்கள் தென்பட்டன. ஆயுதம் தாங்கிய 4, 5 நபர்கள் அதிகாலை 4.30 மணியளவில் குணரத்தினம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்ததாகவும், தன்னை வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே போகுமாறு அவர்கள் கூறியதாகவும், இலங்கை காவல்துறையினரிடம் அயலில் உள்ள பெண் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்[4]. ஆத்திரேலியா அழுத்தம்பிரேம்குமாரைக் கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு இலங்கைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்துள்ளதுடன் கவலையும் வெளியிட்டது[5]. பிரேம்குமாரின் மனைவி தனது கணவன் இலங்கையில் காணாமல்போயுள்ளதாகவும், அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆத்திரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். விடுவிப்புகுணரத்தினம் 2012 ஏப்ரல் 9 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு கொழும்புக்கு அருகேயுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு அருகில் இறக்கி விடப்பட்டார். அவர் பின்னர் காவல்நிலையத்துக்குச் சென்று தன்னை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவர் ஏப்ரல் 10 ஆம் நாள் காலை ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்[6][7]. இவருடன் கடத்தப்பட்ட திமுத்து ஆட்டிகலை ஏப்ரல் 10 ஆம் நாள் அவரது கட்சித் தலைமையகத்துக்கு முன்னால் வைத்து கடத்தல்காரகளினால் விடுவிக்கப்பட்டார்[8]. பிரேம்குமார் ஆத்திரேலியா திரும்பியதும், 2012 ஏப்ரல் 11 அன்று சிட்னியில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தான் கடத்தப்பட்டபோது கை விலங்கிட்டு, கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அரசுப் படைகளாலேயே தான் கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்[9]. மீண்டும் கைது2015 சனவரி 8 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் குமார் குணரத்தினத்தின் தலைமையிலான இவரது முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளர் துமிந்த நகமுவ என்பவர் போட்டியிட்டார். இவரது தேர்தல் பிரசாரத்துக்காக குணரத்தினம் 2014 டிசம்பர் 31 இல் இலங்கை வந்தார். இவருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதி வழங்கியிருந்தது.[10][11] சனவரி 2015க்கு பின்பும் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த காரணத்தினாலும், விசா விதிமுறைகளை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தாலும், அவரை நாடு கடத்துவதற்கு இலங்கை நீதிமன்றம் அனுமதித்தது.[12] ஆனாலும், அவர் இலங்கையில் தலைமறைவானைதை அடுத்து, 2015 நவம்பர் 4 ஆம் நாள் கேகாலையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2016 மார்ச் 24 ஆம் நாள் இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றம் சுமத்தப்பட்டு இவருக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது சிறைத்தண்டனைக் காலம் முடிவடைந்ததை அடுத்து 2016 டிசம்பர் 2 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.[13] இவரை முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்கள், மற்றும் ஆர்வலர்கள் பெருமளவு கூடி வரவேற்றனர். இலங்கைக் குடியுரிமை கிடைக்கும் வரை இவர் இலங்கையில் தங்கி இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.[14] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia