குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers' Party), அல்லது பிகேகே (PKK), என்பது குர்தியப்போராளி அரசியல் அமைப்பும், ஆயுத கெரில்லா குழுவும் ஆகும். இது முதன்மையாக தென்கிழக்கு துருக்கி, வடக்கு ஈராக், வடகிழக்கு சிரியா ஆகிய பகுதிகளின் மலைப்பாங்கான குர்தியப் பெரும்பான்மைப் பகுதிகளில் தளங்களைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பு 1978 நவம்பர் 27 அன்று துருக்கியின் சியாரட் நகரில் நிறுவப்பட்டு, 1993 இற்கும் 2013–2015 இற்கும் இடையில் பல போர் நிறுத்தங்களுடன் குர்திய-துருக்கிய மோதலில் சமச்சீரற்ற போரில் ஈடுபட்டது. தொடக்கத்தில் பிகேகே ஒரு சுதந்திர குர்திய அரசை நிறுவப் போராட்டத்தில் இறங்கியபோதும், 1990களில் அதன் அதிகாரப்பூர்வ தளம் துருக்கிக்குள் குர்துகளுக்கு தன்னாட்சி, அதிகரித்த அரசியல்-கலாச்சார உரிமைகளைக் கோருவதாக மாறியது.[1]
குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியை துருக்கி,[2]அமெரிக்கா,[3]ஐரோப்பிய ஒன்றியம்,[4]ஆத்திரேலியா, சப்பான் ஆகிய நாடுகள்[5][6] தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. சில ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகள் இந்த அறிவிப்பில் உடன்படவில்லை.[7] பிகேகே ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை அல்லது பொதுமக்களை முறையாகக் குறிவைப்பதில்லை என்று நம்புகிறார்கள்.[8]
பிகேகேயின் அரசியல் சித்தாந்தம் முதலில் புரட்சிகர சோசலிசம், மார்க்சியம்-லெனினியம், குர்திய தேசியவாதம் ஆகிய கொள்கைகளின் கலவையாக இருந்து, ஒரு சுதந்திர குர்திசுத்தானை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டது.[9]
1979 ஆம் ஆண்டு முதல் துருக்கியப் பாதுகாப்புப் படைகளுடன் ஆயுத மோதல்களில் பிகே ஈடுபட்டது, ஆனால் முழு அளவிலான கிளர்ச்சி 1984 ஆகத்து 15 அன்று அது ஒரு குர்திய எழுச்சியை அறிவித்தபோது மட்டுமே தொடங்கப்பட்டது. மோதல் தொடங்கியதிலிருந்து, 40,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் துருக்கிய குர்தியப் பொதுமக்கள் ஆவர்.[10] 1999 இல், இவ்வமைப்பின் தலைவர் அப்துல்லா ஓசுலான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[11] மே 2007 இல், பிகேகே-யின் சேவையில் இருந்த மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் துருக்கிய, ஈராக்கிய குர்திஸ்தான், ஈரானிய குர்திஸ்தான், சிரிய குர்திசுதான் ஆகிய பகுதிகளில் குர்திய அமைப்புகளின் ஒரு குடை அமைப்பான குர்திசுத்தான் சமூகங்கள் ஒன்றியத்தை (KCK) அமைத்தனர். 2013-இல், பிகேகே ஒரு போர் நிறுத்தத்தை அறிவித்து, துருக்கிய அரசுடன் ஒரு சமாதான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ஈராக்கியக் குர்திசுத்தானுக்கு அதன் போராளிகளை மெதுவாக திரும்பப் பெறத் தொடங்கியது. சூலை 2015 இல் போர் நிறுத்தம் முறிந்தது.[12] பிகேகே போராளிகளை வேரறுக்கும் முயற்சியில் துருக்கி ஆயிரக்கணக்கான குர்தியக் கிராமங்களை மக்கள்தொகையற்றதாக்கி எரித்து, குர்தியப் பொதுமக்களைப் படுகொலை செய்தது.[13]
2025 மார்ச் 1 அன்று பிகேகே துருக்கியுடன் ஒரு போர்நிறுத்தத்தை அறிவித்தது,[14] 2025 மே 12 அன்று, அமைப்பை முழுமையாகக் கலைப்பதற்கான திட்டங்களை அது அறிவித்தது.[15][16]
↑Michael, Gasper (2019). Lust, Ellen (ed.). The Middle East. CQ Press. p. 37. ISBN978-1544358215. The Turkish military responded with a ferocious counterinsurgency campaign that led to the deaths of nearly 40,000 people, most of them Turkish Kurdish civilians, and the displacement of more than three million Kurds from southeastern Turkey