குளோரியா மகபகல்-அர்ரொயோ
குளோரியா மகபகல்-அர்ரொயோ (Gloria Macapagal-Arroyo, பிறப்பு:ஏப்ரல் 5, 1947) பிலிப்பினோ அரசியல்வாதியும் 2001 முதல் 2010 வரை பிலிப்பீன்சின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவரும் ஆவார். 1998 முதல் 2001 வரை பிலிப்பீன்சின் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார். 2010 முதல் பம்பங்காவின் இரண்டாவது தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். கொரசோன் அக்கினோவிற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றியப் பெருமை இவருக்குண்டு. முன்னாள் குடியரசுத் தலைவரான டியோசுடடோ மகபகல்லின் புதல்வி ஆவார். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பீன்சின் முதல் பெண் உதவிக் குடியரசுத் தலைவரும் இவரேயாவார்.[2] அர்ரொயோ அடெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியையாக இருந்தார்; அப்போது பெனிக்னோ அக்கீனோ III அவரது மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார். 1987இல் குடியரசுத் தலைவர் கொரசோன் அக்கினோ அழைப்பினால் அரசு நிர்வாகத்தில் சேவை துவங்கிய அர்ரொயோ வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 1992 முதல் 1998 வரை பிலிப்பீனிய மேலவை (செனட்) உறுப்பினராக சேவையாற்றிய பின்னர் குடியரசுத் தலைவர் ஜோசப் எஸ்திராடாவின் கீழ் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்திராடா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது சமூக நலத்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சராக இருந்த அர்ரொயோ தமது பதவி விட்டு விலகினார். குடியரசுத் தலைவருக்கு எதிரான அணியில் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடினார். 2001 எஸ்டா புரட்சியை அடுத்து எஸ்திராடா பதவி விலக நேரிட்டது; சனவரி 20, 2001 இல் தலைமை நீதிபதி அர்ரொயோவிற்கு குடியரசுத் தலைவராக பதவிப்பிரமாணம் செய்வித்தார். மே, 2004 இல் நடந்த சர்ச்சைமிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் முழு ஆறு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சூன் 30, 2004 இல் பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிப்பீன்சில் உயர்பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு கீழுள்ள அலுவல்நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்; முன்னதாக ஒசே பி. லாரல் என்ற குடியரசுத் தலைவர் இவ்வாறு செய்துள்ளார். நவம்பர் 18, 2011 அன்று தேர்தல் முறைகேடுகளுக்காக அர்ரொயோ கைது செய்யப்பட்டார். குவிசோன் நகரத்திலுள்ள மாவீரர்கள் நினைவு மருத்துவ மையத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.[3][4] சூலை 2012 இல் பிணையில் விடுதலையானார். அக்டோபர் 2012 இல் அரசு அதிஷ்ட இலாபச் சீட்டு நிதியில் $8.8 மில்லியன் முறைகேடு செய்ததாக மீண்டும் கைதானார்.[5] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia