பெனிக்னோ அக்கீனோ III (Benigno Simeon Cojuangco Aquino III[1][2]; பெப்ரவரி 8, 1960 – சூன் 24, 2021) என்பவர் ஒரு பிலிப்பீனிய அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் 15-வது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[3][4] அக்கீனோ குடும்பத்தின் 4-வது தலைமுறை அரசியல்வாதியான பெனிக்னோ, முன்னாள் அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவின் மகன் ஆவார். இவர் 1998 முதல் 2010 வரை நாடாளுமன்றம், மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2009 செப்டம்பர் 9 இல் தனது தாயார் கொரசோன் அக்கினோவின் இறப்பை அடுத்து, 2010 இல் நடந்த அரசுத்தேர்தல் தேர்தலில், பெனிக்னோ அகீனோ போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 2016 சூன் 30 இல், இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இவரது பதவிக்காலத்தில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையை எட்டியது. பிலிப்பீன்சு அக்காலத்தில் "ஆசியாவின் உயரும் புலி"[6] என்று அழைக்கப்பட்டது; எனினும், சிறப்பு நிர்வாகப் படையின் 44 உறுப்பினர்களைக் கொன்ற இராணுவ நடவடிக்கை போன்ற சில பிரச்சினைகள் குறித்து அவரது நிர்வாகம் விமர்சனங்களை சந்தித்தது.[7]தென்சீனக் கடலில்சீனாவின் உரிமைகோரல்களை செல்லாததாக்கவும், இப்பகுதியில் தனது சொந்த நாட்டின் உரிமைகோரல்களை வலியுறுத்தியும் இவரது நிர்வாகம் நிர்ந்தர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், பிலிப்பீன்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்து.[8]
பெனிக்னோ அக்கீனோ 2021 சூன் 24 இல் தனது 61-வது அகவையில் காலமானார்.[10] இவரது இறப்புக்கான காரணம் சிறுநீரக நோய், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் எனக் கூறப்பட்டது.[11][12]