சங்கராபரணம் (திரைப்படம்)

சங்கராபரணம்
శంకరాభరణం
திரைப்பட சுவரிதழ்
இயக்கம்கே. விஸ்வநாத்
தயாரிப்புஎடிட நாகேஸ்வர ராவ்
ஆகாசம் ஸ்ரீராமுலு
கதைகே. விஸ்வநாத்
Dialogue byசந்தியாலா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜொ. வெ. சோமயாஜுலு
மஞ்சு பார்கவி
சந்திர மோகன்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஜி. ஜி. கிருஷ்ணா ராவ்
விநியோகம்பூர்ணோதயா மூவி கிரியேசன்ஸ்
வெளியீடு2 பெப்பிரவரி 1980 (1980-02-02)
ஓட்டம்143 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு₹13.50 இலட்சம்

சங்கராபரணம் (Sankarabharanam) என்பது 1979 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமாகும்.[2] இதை கே. விஸ்வநாத் எழுதி இயக்கியிருந்தார். பூர்ணோதயா மூவி கிரியேசன்ஸ் சார்பில் எடிடா நாகேஸ்வர ராவ் தயாரித்த இந்தப் படத்தில், சோமையாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜ்யலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கம் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். இந்திய பாரம்பரிய இசைக்கும் மேற்கத்திய பாப் இசைக்கும் இடையிலான பண்பாட்டுப் பிளவை வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களின் பார்வையில் இருந்து இந்தப் படம் ஆராய்கிறது.. பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

1980 பிப்ரவரி 2 அன்று வெளியான சங்கராபரணம், கிட்டத்தட்ட காலியான அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால் விரைவில் பரவலான பிரபலத்தைப் பெற்றது. இறுதியில் பல இடங்களில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடியது. தமிழ்நாட்டில், இந்தப் படம் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, இதன் அசல் பதிப்பே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. பெங்களூரில், இது மொழிமாற்றம் இல்லாமலேயே ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓடியது. பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[3] தமிழில் இதன் பாடல்களை ராஜேஷ் மலர்வண்ணன் எழுதினார். மலையாளப் பதிப்பும் ஒரு வருடம் முழுவதும் திரையரங்குகளில் ஓடியது.[4] இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகளும், தேசிய விருதும், ஏழு நந்தி விருதுகளும் வழங்கப்பட்டன.

கதை

மனைவியை இழந்தவரான சங்கர சாஸ்திரிக்கு, சாரதா என்ற மகள் உண்டு. அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான கருநாடக இசைப் பாடகர்களில் ஒருவராக சாஸ்திரி இருக்கிறார். சங்கராபரணம் ராகத்தில் தேர்ச்சி பெற்றதற்காகப் பிரபலமானவராக உள்ளார். தேவதாசியின் மகளான துளசி, சாஸ்திரியை தொலைவிலிருந்தே போற்றுகிறார். ஒருமுறை, ​​சாஸ்திரி தன் மகளுக்கு இசை சொல்லிக் கொடுக்கும்போது, ​​துளசி அவரை ஆற்றங்கரையில் பார்க்கிறாள்.

ஒரு நாள் காலை சாஸ்திரியின் பாடலால் மிகவும் மகிழ்ச்சியடைந்த துளசி, தன் சுற்றுப்புறத்தை மறந்து ஆற்றங்கரையில் நடனமாடத் தொடங்குகிறாள். சாஸ்திரி அவளைப் பார்க்கிறார், துளசியும் சுயநினைவுபெற்று திடீரென்று நின்றுவிடுகிறாள். சாஸ்திரி அவளைக் கண்டிப்பார் என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அவர் அவளுடைய நேர்மையைப் பாராட்டும்விதமாக தொடர்ந்து பாடுகிறார்.

துளசியின் தாய் அவளின் குடும்ப மரபின்படி துளசி ஒரு வேசியாக வேண்டும் என்று விரும்புகிறாள். பணக்காரர் ஒருவரின் ஆசையை துளசி தீர்த்தால் அதிக பணம் வரும் என்று அவள் கருதுகிறாள். அதன்படியே தளசியின் தாய் பணக்காரரை துளசியிடம் அனுப்புகிறாள். அவர் துளசியை பாலியல் பலாத்காரம் செய்கிறார். துளசியின் அறையில் சாஸ்திரியின் ஒளிப்படத்தைக் கண்ட அந்த மனிதர், அதை உடைத்து, அவளை கேலி செய்கிறார். கோபமடைந்த துளசி, சாஸ்திரியின் ஒளிப்படத்தின் உடைந்த சட்டகத்திலிருந்து ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவரை குத்திக் கொன்றுவிடுகிறாள்.

கொலை வழக்கு விசாரணையின்போது, துளசியை தண்டனையிலிருந்து விடுவிக்க சாஸ்திரி தன் நெருங்கிய நண்பரான வழக்கறிஞரை அதில் பணிக்கிறார். துளசியின் தாயார் தன் மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்படுகிறாள். துளசி விடுதலையாகிறாள். துளசி போக்கிடமற்றவளாக ஆகிறாள். சாஸ்திரி துளசியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுகிறார். இதனால் ​​துளசி சாஸ்திரியின் துணைவியாகிவிட்டதாக வதந்தி பரவுகிறது. ஒரு கோவிலில் பாட சாஸ்திரி வருகையில் அவருடன் துளசியைப் பார்த்தவுடன் இசைக் கலைஞர்கள் உட்பட அனைவரும் வெளியேறுகிறார்கள். தான் வணங்கும் மாமனிதருக்கு நடந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று, துளசி சாஸ்திரியின் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

காலப்போக்கில், நாட்டில் பாப் இசையின் புகழ் அதிகரிக்கிறது, பாரம்பரிய இசையின் புகழ் குறைந்து வருகிறது, சாஸ்திரி தனது ரசிகர்களையும், அவர்களால் தான் பெற்ற வசதியான வாழ்க்கையையும் இழக்கிறார். பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில், சாஸ்திரி தன் மகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். மகள் வயது வந்தவளாகிவிட்டாள். இதற்கிடையில், துளசி தன் தாயின் மறைவுக்குப் பிறகு தன் தாயின் சொத்தை மரபுரிமையாகப் பெறுகிறாள்.

துளசிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கருவினால் பிறந்த மகன் பத்து வயது உள்ளவனாக இருக்கிறான். அவன் சாஸ்திரியின் மாணவராக வேண்டும் என்று துளசி விரும்புகிறாள். ஒரு நச்சுப் பாம்பு சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக மாறுவது போல (சங்கரா - சிவன், ஆபரணம் - நகை) ஒரு தீமையின் விளைவான உருவான தன் மகனை சங்கர சாஸ்திரியிடம் சீடனாக ஆக்கி, அவரின் ஒரு ஆபரணமாக மாற்ற அவள் விரும்புகிறாள். துளசி தன் மகனை அவரிடம் அனுப்பி அநாதையாக நடிக்க வைக்கிறாள். அதன்படி அச்சிறுவன் சாஸ்திரியின் வீட்டில் ஒரு வேலைக்காரனாக நுழைகிறான். துளசி தனது மகன் படிப்படியாக சாஸ்திரியின் இசை மாணவனாக மாறுவதை தொலைவிலிருந்து பார்த்து திருப்தி அடைகிறாள்.

பள்ளி ஆசிரியரான பமுலபர்த்தி வெங்கட காமேஸ்வர ராவ் சாரதாவைக் காதலிக்கிறார். இந்தத் திருமணத்திற்கு சாஸ்திரி முதலில் ஒப்புக்கொள்ளாவாட்டாலும். கோவிலில் அவர் பாடுவதைக் கேட்ட பிறகு அவர் தன் மகளை திருமணம் செய்துவிக்க ஒப்புக்கொள்கிறார்.

சாரதாவின் திருமண நாளில், ஒரு புதிய அரங்கத்தில், துளசி ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். சாஸ்திரி அந்த இசை நிகழ்ச்சியில் பாடுகிறார், ஆனால் அப்போது ஏற்படும் மாரடைப்பால் அவதிப்படுகிறார். அதனால் பாடல் தடைபடுகிறது. சாஸ்திரியிட் சீடரான துளசியின் மகன், சாஸ்திரியின் பக்கத்தில் இருந்து பொறுப்பேற்று மீதி பாடலைப் பாடுகிறான்.

சாஸ்திரி தன் மாணவனைப் பெருமையுடன் பார்க்கும்போது, ​​மண்டபத்தின் ஓரத்தில் துளசியையும் பார்க்கிறார். அந்தச் சிறுவன் துளசியின் மகன் என்பதை உணர்கிறார். சாஸ்திரிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் ஒருவர் அழைத்து வரப்படுகிறார். ஆனால் சாஸ்திரி தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து அவரை சற்று பொறுத்திருக்குமாறு செய்கிறார். துளசியின் மகன் பாடலைப் பாடி முடிக்கும்போது. ​​சாஸ்திரி சிறுவனை தனது இசை வாரிசாக்ககும் விதமாக தன் கால் தண்டையை அச்சிறுவனுக்கு அணிவித்து இறந்துவிடுகிறார். துளசி தன் குருவிடம் ஓடி வந்து, அவரது காலடியில் இறக்கிறாள். சாஸ்திரியின் மகளும் மருமகனும் துளசியின் மகனைப் பொறுப்பேற்றுக் கொள்ளும்போது, ​ சோகமான ​படமானது உற்சாகமான குறிப்பில் முடிகிறது.

நடிப்பு

தயாரிப்பு

வளர்ச்சி

கதைக்களத்தைக் கேட்ட பிறகு, படத்தின் மையக்கரு திரைப்படத் தொனியில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் இறுதியாக எடிடா நாகேஸ்வர ராவ் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார். சங்கர சாஸ்திரி வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் இயக்குநர் கே. விஸ்வநாத் அந்த வேடத்தில் சிவாஜி கணேசனை நடிக்கவைக்க விரும்பினார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவரை அணுக முடியவில்லை, மேலும் கிருஷ்ணம் ராஜூவை அந்த வேடத்தில் நடிக்கவைக்க விரும்பினார், ஆனால் பின்னர் விஸ்வநாத் நட்சத்திரமான அவரது பிம்பம் அந்த வேடத்தை கெடுத்துவிடும் என்று உணர்ந்ததால் அவரை நடிக்கவைக்கவில்லை. மேலும் அவர் இந்த வேடத்திற்கு நடக நடிகரான ஜே. வி. சோமயாஜுலுவைத் தேர்ந்தெடுத்து திரைப்பட நடிகராக அறிமுகப்படுத்தினார்.[5] கே. விஸ்வநாத் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கினார். ஜந்தியாலா உரையாடல் எழுதிதினார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். படத்தொகுப்பை ஜி. ஜி. கிருஷ்ணா ராவ் மேற்கொண்டார். தோட்டா தரணி படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றினார். சீதாரா, அன்வேஷனா, லேடீஸ் டெய்லர் போன்ற படங்களை இயக்கிய வம்சி, படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.[6]

படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களில் முடிவடைந்தது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி ஆந்திரத்தின் ராஜமன்றி, ரகுதேவபுரம், போலவரம், ராமச்சந்திரபுரம், அன்னவரம், சோமாவரம் ஆகிய இடங்களிலும், சென்னையின் திருவான்மியூர், கருநாடகத்தின் பேளூர், ஹளேபீடு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[7][8][9]

பாடல்கள்

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.

பாடல் பாடியோர் எழுதியவர்
ஓங்கார நாதானு எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
ராகம் தானம் பல்லவி எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
சங்கரா நாதசரீராபரா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
ஏ தீருக நானு வாணி ஜெயராம் பத்ராசல ராமதாசு
பிரோசேவாரெவருரா எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மைசூர் வாசுதேவாசாரி
மானச சஞ்சரரே எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
சாமஜ வரகமன எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
மாணிக்க வீணா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பலுகே பங்காரமாயெனா எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் பத்ராசல ராமதாசு
தொராகுன இடுவண்டி சேவா எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வெட்டுரி சுந்தரராம மூர்த்தி

மேற்கோள்கள்

  1. Banerjee & Srivastava 1988, ப. 158.
  2. தினமணிக் கட்டுரை
  3. name="idlebrain.com"
  4. "10 Malayalam Movies Which Ran For Successfully For Many Days". nettv4u (in ஆங்கிலம்). Archived from the original on 29 November 2023. Retrieved 2022-06-10.
  5. admin (8 September 2014). "Original choice for Shankarabharanam?". Retrieved 14 September 2016.
  6. Gopal, B. Madhu (11 September 2015). "Lessons in direction". Archived from the original on 22 August 2019. Retrieved 14 September 2016 – via The Hindu.
  7. "Shankarabharanam 35 Years Event, 2015". Archived from the original on 26 March 2020. Retrieved 26 March 2020.
  8. "Interesting facts about K Viswanath's directorial film 'Sankarabharanam'". The Times of India. 2023-02-03. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/interesting-facts-about-k-viswanaths-directorial-film-sankarabharanam/photostory/97577761.cms?picid=97577844. 
  9. Srinivas, Vadrevu (2023-02-04). "Vishwanath had an inseparable bond with River Godavari". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). Archived from the original on 26 December 2024. Retrieved 2024-12-26.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya