சட்டம்பி சுவாமி

சட்டம்பி சுவாமிகள்
சுவாமிகளின் 90வது நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசால் ஏப்ரல் 30, 2014 அன்று வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல் தலை.
பிறப்பு(1853-08-25)25 ஆகத்து 1853
கொல்லூர், திருவனந்தபுரம்
இறப்பு(1924-05-05)5 மே 1924
பன்மனை, கொல்லம்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்சிறீ வித்தியாதிராஜா
பரம பட்டாரகர்
தத்துவம்அத்வைதம்
குருபேட்டையில் ராமன் பிள்ளை ஆசான், அய்யாவு சுவாமிகள், சுப்பா ஜடபாடிகள்

வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் (Chattampi Swamikal)(ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரளத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு வேதாந்தி, யோகி. இந்துமதச் சீர்திருத்தக்காரர். இந்து மதத்தின் பிராமணச் சடங்குகளுக்கு எதிராக போராடியவர். நாராயண குருவின் சமகாலத்தவர், மூத்த தோழர்; ஆத்மானந்தரின் ஆசிரியர்.

வாழ்க்கை

அய்யப்பன் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சட்டம்பி சுவாமி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள கொல்லம் அல்லது கொல்லூர் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை தாமரசேரி வாசுதேவ சர்மா ஒரு நம்பூதிரி மாவேலிக்கராவைச் சேர்ந்த பிராமணர், இவரது தாயார் கண்ணம்மூலாவைச் சேர்ந்த நாயர் வகுப்பைச் சேர்ந்தவர். குஞ்ஞன்பிள்ளை என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.

இவரது பெற்றோரால் இவருக்கு முறையான கல்வியை வழங்க முடியாததால், பள்ளிகளில் படித்த தனது அண்டைவீட்டுக் குழந்தைகளிடமிருந்து எழுத்துக்கள் மற்றும் சொற்களைக் கற்றுக்கொண்டார். சம்சுகிருதமும், தமிழும், சோதிடமும் பயின்றபின் சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். நாகர்கோயிலைச் சேர்ந்த வடிவீசுவரம் வேலுப்பிள்ளை ஆசான் இவரது ஆசிரியர். பதினைந்து வயதில் திருவனந்தபுரம் பேட்டை என்ற இடத்தில் இருந்த இராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் அடிமுறையும் வர்ம வைத்தியமும் கற்றார். இங்குதான் சட்டம்பி என்ற பெயர் கிடைத்தது. இதற்கு பயில்வான் என்று பொருள். அதன் பின் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் பயின்றார். இவரது குருநாதர் யார் என்று தெரியவில்லை. நாகர்கோயிலை ஒட்டிய மருத்துவாழ் மலையில் பலகாலம் இவர் தவம் செய்திருக்கிறார். அப்போது தன் குருவை கண்டடைந்திருக்கலாம் என்கிறார்கள். இவர் தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என்பவர்கள் உண்டு.[1]

நாராயணகுரு

சட்டம்பி சுவாமிகள் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் கற்றபோது இளைய மாணாக்கராக இருந்தவர் நாராயணகுரு. 1882ல் வாமனபுரம் அருகே அணியூர் என்ற ஊரில் நிகழ்ந்த கோயில் விழாவில் துறவியானபின் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவாழ்மலையில் இருந்தபோதே நாராயணாகுருவிடம் அவருக்கு உறவிருந்திருக்கிறது. நாராயணகுருவும் சட்டம்பி சுவாமிகளும் சேர்ந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டார்கள். மருத்துவாழ்மலையில் ஒருகுகையில் தவமிருந்தார்கள். அந்த குகை இப்போதும் அவர்களின் நினைவிடமாகப் பேணப்படுகிறது. நாராயணகுரு அருவிப்புறத்தில் அவரது புகழ்பெற்ற சிவலிங்க பதிட்டையை நிகழ்த்தியபோது சட்டம்பி சுவாமி உடனிருந்தார்.

சமூக சீர்திருத்தம்

சட்டம்பி சுவாமிகள் சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவர். இந்து சமூகத்தில் அன்றிருந்த பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கெதிராக கடுமையாக எழுதியும் பேசியும் சுற்றுப்பயணம் செய்தார். தீண்டாமைக்கும் சாதிவேறுபாடுகளுக்கும் எதிரான சுவாமியின் தாக்குதல்கள் மிகவும் வேகம் உடையவை. கிறித்தவ மதமாற்ற முறைகளைப்பற்றியும் கடுமையான எதிர்ப்புகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். நீல கண்ட தீர்த்தபாதர், தீர்த்தபாத பரம ஹம்சர், ஆத்மானந்தா போன்ற யோகிகளும் கவிஞர் போதேஸ்வரன், பெருநெல்லி கிருஷ்ணன் வைத்யன்ம் வெளுத்தேரி கிருஷ்ணன் வைத்தியன் போன்ற பல இல்லறத்தாரும் அவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்.

சுவாமி விவேகானந்தருடனான சந்திப்பு

சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எர்ணாகுளத்திற்குச் சென்றபோது சட்டம்பிசுவாமிகளும் அங்கே இருந்தார். சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்து கூட்டத்தைக் கண்டு தூரத்திலிருந்து அவரை தரிசித்து விட்டு சென்றார் சட்டம்பிசுவாமிகள். சட்டம்பி சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர், அவ்வளவு பெரிய மகான் என்னைத் தேடி வருவதா என்று கூறி தாமே சட்டம்பி சுவாமிகளைக் காணச் சென்றார். சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி மொழி தெரியாததால், இருவரும் சமஸ்கிருதத்தில் தனிமையில் உரையாடினர். சட்டம்பி சுவாமிகளிடம் சின்முத்திரையின் பொருள் கேட்டார் சுவாமிஜி. தமிழ் நூற்களை நன்கு கற்றிருந்த சட்டம்பி சுவாமிகள் சின்முத்திரைக்கு அருமையாக விளக்கம் அளிக்கவே, சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜியின் அசைவ உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள சட்டம்பி சுவாமிகளால் முடியவில்லை.சட்டம்பி சுவாமிகளால் பெரிதும் கவரப்பட்டார் சுவாமி விவேகானந்தார்.[2]

பன்மனை ஆசிரமம்

வாழ்வின் கடைசிக்காலத்தில் சுவாமி பன்மன என்ற ஊரில் தங்கியிருந்தார். கும்பளத்து சங்குப்பிள்ளை என்ற அறிஞர் அவருடைய புரவலராக இருந்தார். இன்று அவர் சமாதியான இடம் பன்மனை ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது.1934ல் திருவிதாங்கூருக்கு வந்த காந்தி அடிகள் அங்கே ஒருநாள் தங்கியிருந்தார்.

நூல்கள்

சுவாமி நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவரது கைப்பிரதிகள் பல அச்சேறாமல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டன. அவர் எழுதி வெளிவந்த சிலநூல்கள் எண்பது வருடங்களுக்கு பின்னர் மறுபதிப்பு கண்டன. அவரது மலையாள உரைநடை நேரடியானது. அவருக்கு கேரள உரைநடை வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்குண்டு.

  • வேதாதிகார நிரூபணம்
  • ஜீபகாருண்ய நிரூபணம்
  • நிஜானந்த விலாசம்
  • அத்வைத சிந்தா பத்ததி
  • கேரளத்தின் தேச நன்மைகள்
  • கிறிஸ்துமதச் சேதனம்
  • கிறிஸ்துமத நிரூபணம்
  • தேவார்ச்ச பத்ததியுடே உபோத்கதம்
  • பிரணவமு சாங்கிய தரிசனமும்
  • பிரபஞ்சத்தில் ஸ்த்ரீ புருஷர்க்குள்ள ஸ்தானம்
  • பாஷாபத்மபூஷணம் [மொழி ஆய்வு]
  • பிராசீன மலையாளம் [மொழி ஆய்வு]
  • சிலகவிதா சகலங்கள் [கவிதை]

நினைவிடம்

கேரளா மாநிலத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சட்டம்பி சுவாமிக்கு, பள்ளிச்சல் பஞ்சாயத்தின் மூன்றாம் வார்டில் உள்ள சட்டம்பி சுவாமியின் பூர்வீக வீட்டை அரசு எடுத்து நினைவிடம் கட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசாவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இந்த வீடு தற்போது சட்டம்பி சுவாமியின் நான்காவது தலைமுறை சந்ததியினரின் வசம் உள்ளது. சத்தம்பி சுவாமியின் பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்க, பொன்னியத்தில் உள்ள அந்த பூர்வீக வீட்டை கையகப்படுத்தி, நினைவுச்சின்னமாக மாற்ற கேரளா அரசு முடிவு செய்துள்ளது.[3]

உசாத்துணை

  • Raman Nair, R; Sulochana Devi, L (2010). Chattampi Swami: An Intellectual Biography. Chattampi Swami Archive, Centre for South Indian Studies. ISBN 9788190592826.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Raman Nair, pp. 44, 48
  2. சுவாமி விவேகானந்தர்; விரிவான வாழ்க்கை வரலாறு; பகுதி 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 402
  3. Government asked to build Chattambi Swami memorial

மேலும் படிக்க

  • Gopala Pillai, Paravoor K (2010). Parama Bhattara Chattampi Swami Tiruvatikal(Malayalam). Thrissur, Kerala: Current Books.
  • Maheswaran Nair, K (1995). Chattampi Swamikal: Jeevithavum Krithikalum. Trivandrum: Dhuma Books.
  • Karunakara Menon, K P (1967). Chattampi Swamikal: The Great Scholar saint of Kerala. Trivandrum: PG Narayana Pillai.
  • Narayana Moodithaya (2008). Sree Chattampi Swamikalu (Kannada). Kasaragod, India: Kasaragodu Prakasana.
  • Poulose, C (2002). Advaita Philosophy of Brahmasree Chattampi Swamikal. Kanyakumari, Tamil Nadu: Ayya Vaikunta nathar Siddhasramam.
  • Prajnananda Theerthapada Swami, Ed and Comp. (2011). Sree Vidyadhiraja Chattampi Swamikalude Jeevacharithravum Pradana Krithikalum. Vazhoor, Kottayam, Kerala: Sree Theerthapadasramam.
  • Raman Nair, R and Sulochana Devi, L (2016). Chattampi Swamikal: Oru Dhyshanika Jeevacharithram (Malayalam). Trivandrum: Chattampi Swami Archivr, Centre for South Indian Studies.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  • Santhkumari Amma, Kumbalath (2003). Vidyadhiraja Chattampi Swamikal. Trivandrum, Kerala: Dept of Cultural Publications, Govt of Kerala.
  • Vijayalaksmi, K V (2011). Contribution of Chattampi Swamikal to Advaitha Philosophy: A Study with Special Reference to Advaithachinthapaddhathi (PhD Theses). Kannur, Kerala: Kannur University.

வெளி இணைப்புகள்

(ஆங்கில மொழியில்)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya