சதீஷ் குமார்
சதீஷ் குமார் (பி. 9 ஆகத்து 1936)[1] என்பவர் இந்திய களச்செயற்பாட்டாளரும், இதழாசிரியரும் ஆவார். 1962-இல் அணு ஆயுதம் தரித்திருந்த நான்கு நாடுகளின் தலைநகர்களான வாஷிங்டன், இலண்டன், பாரிஸ், மாஸ்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய 8000 மைலுக்கும் மேற்பட்ட தொலைவை "அமைதி நடை" பயணமாக நண்பர் ஒருவரோடு சேர்ந்து சுற்றிவந்தவர்.[3] சமணத்துறவியாகவும், அணு ஆயுத எதிர்ப்பாளராகவும், அமைதிவாதியாகவும் திகழ்ந்த இவர்,[4] தற்பொழுது ரீசர்ஜன்ஸ் & ஈகாலஜிஸ்ட் என்ற இதழின் ஆசிரியராக இருந்துவருகிறார். இயற்கையின் மீதான பெருமதிப்பே எந்தவொரு சமூக அரசியல் விவாதத்தின் மையமாகவும் திகழவேண்டும் என்று வலியுறுத்துபவர். இளமைக் காலம்சதீஷ்குமார் இராஜஸ்தானிலுள்ள டூங்கர்கரில் பிறந்தவர். 9 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சமணத் துறவியானவர்.[5] 18 வயதில் மகாத்மா காந்தியின் நூல் ஒன்றைப் படித்துவிட்டு இரந்துண்ணும் துறவு வாழ்வை விடுத்து, காந்தியின் சீடரும் அவரது அகிம்சை மற்றும் நிலச்சீர்திருத்தக் கருத்துக்களை முன்னெடுத்தவருமான வினோபா பாவேயிடம் சேர்ந்தார்.[6] அமைதி நடைபெர்ட்ரண்டு ரசலின் அணு ஆயுதத்துக்கு எதிரான ஒத்துழையாமைக் கருத்தால் உந்தப்பட்டு, 1962 ஆம் ஆண்டு சதிஷ்குமாரும் அவரது நண்பருமான இ. பி. மேனோனும் அமைதிக்கான புனித நடைப்பயணம் மேற்கொள்வதென முடிவெடுத்தனர். இந்தியாவிலிருந்து அப்போதைய அணு ஆயுத நாடுகளின் தலைநகர்களான மாஸ்கோ, பாரிஸ், இலண்டன், வாசிங்டன், டி. சி. ஆகியவற்றுக்கு கையில் காசு எதுவும் வைத்துக்கொள்ளாமல் பயணிக்கத் தீர்மானித்தனர். இவ்விரு இளைஞர்களுக்கும் வினோபா பாவே இரண்டு கட்டளைகள் இட்டார்: கையில் காசு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒன்று; சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்பது மற்றொன்று. வரலாற்றுரீதியாக இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்புணர்வு நிலவியதாகக் கருதப்பட்ட பாகிஸ்தானுக்கு முதலில் சென்ற அவர்களுக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. ஆப்கானிஸ்தான், இரான், ஆர்மீனியா, ஜார்ஜியா, காக்கசஸ் மலைத்தொடர், கைபர் கணவாய் வழியாகப் பயணித்து மாஸ்கோ, பாரிஸ், இலண்டன், வாஷிங்டன் டி.சி ஆகிய இடங்களுக்குச் சென்றனர். பணம் இன்றி, கால்நடையாகச் சென்ற அவர்கள் உணவும், உறைவிடமும் எவர் தந்தாலும் ஏற்றுத் தங்கினர். மாஸ்கோ செல்லும் வழியில் ஒரு தேயிலைத் தொழிற்சாலைக்கு வெளியே இரு பெண்களைச் சந்தித்தனர். தமது பயணத்தின் நோக்கத்தை இவர்கள் விளக்கக் கேட்ட அப்பெண்களுள் ஒருவர் நான்கு தேயிலைப் பொட்டலங்களை இவர்களிடம் கொடுத்து அணு ஆயுத நாடுகளின் தலைவர்களிடம் அவற்றை ஒப்படைக்கக் கோரினார். ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் "நீங்கள் அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பொத்தானை அழுத்துமுன் ஒரு நிமிடம் தாமதியுங்கள்; கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்" என்று சொல்லும்படி வேண்டினார். அந்தப் பெண்மணியின் இச்செயல் நடை பயணத்துக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. சொன்னவாறே அவர்கள் நான்கு அணு ஆயுத நாடுகளின் தலைவர்களுக்கும் "அமைதித் தேயிலை"யைப் பரிசளித்தனர்.[7] இந்தப் பயணம் சதீஷ் குமாரின் நோ டெஸ்டினேஷன் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. நூல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia