சந்தேரி கோட்டை

சந்தேரி கோட்டை (ஆங்கிலம்:Chanderi Fort) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள சந்தேரியில் அமைந்துள்ளது. இது சிவபுரியில் இருந்து 127 கி.மீ. தொலைவிலும், லலித்புரில் இருந்து 37 கி.மீ. தொலைவிலும், இசாகட்டில் இருந்து 45 கி.மீ. தொலைவு மற்றும் முங்காவ்லியில் இருந்து 38 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இது பேட்வா ஆற்றின் தென்மேற்கே ஒரு மலையில் அமைந்துள்ளது. சந்தேரி மலைகள், ஏரிகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு பண்டெலா ராசபுத்திரர்கள் மற்றும் மால்வா சுல்தான்களின் பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. மகாபாரதத்தில் மன்னர் சிசுபால் காலத்தில் சிந்தேரி குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேரி, மால்வா மற்றும் புந்தேல்கண்டின் எல்லைகளில் போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க வகையில் அமைந்துள்ளது. சந்தேரியின் வரலாறு 11 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இது மத்திய இந்தியாவின் வர்த்தக பாதைகளில் ஆதிக்கம் செலுத்தியது. குஜராத்தின் பண்டைய துறைமுகங்கள் மற்றும் மால்வா, மேவார், மத்திய இந்தியா மற்றும் டெக்கான் ஆகிய இடங்களுக்கு சாலையாக இருந்தது. இதன் விளைவாக, சந்தேரி ஒரு முக்கியமான இராணுவ நிலையமாக மாறியது.

சந்தேரி கோட்டை, ஒரு பரந்த முகலாய கோட்டை. அழகான பழைய நகரமான சந்தேரி கோட்டையின் பிரதான வாயில் "கூனி தர்வாசா" என்று அழைக்கப்படுகிறது. நகரத்திலிருந்து 71 மீட்டர் உயரத்தில் மலையின் மீது சந்தேரி கோட்டை அமைந்துள்ளது. முக்கியமாக சந்தேரியின் கோட்டைச் சுவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டன. கோட்டையின் தென்மேற்கில் ஒரு மலைப்பகுதி வழியாக கட்டி-காட்டி என்ற நுழைவாயில் உள்ளது.

வரலாறு

1030 இல் பாரசீக அறிஞர் அல்-பிருனியால் சந்தேரி குறிப்பிடப்பட்டுள்ளது. 1251 ஆம் ஆண்டில் தில்லியின் சுல்தானான நசீர் உத் தின் மஹ்மூத்துக்காக கியாஸ் உதின் பால்பன் சந்தேரி நகரைக் கைப்பற்றினார். மால்வாவைச் சேர்ந்த சுல்தான் மஹ்மூத் கில்ஜி 1438 ஆம் ஆண்டில் பல மாத முற்றுகைக்குப் பின்னர் இந்நகரைக் கைப்பற்றினார். 1520 ஆம் ஆண்டில் மேவாரின் ராணா சங்கா நகரைக் கைப்பற்றி, மால்வாவின் இரண்டாம் சுல்தான் மஹ்மூத்தின் கலகக்கார மந்திரி மதினி ராய்க்கு வழங்கினார். முகலாய பேரரசர் பாபர் மதினி ராயிடமிருந்து நகரைக் கைப்பற்றினார். பின்னர் 1540 இல் இது சேர் ஷா சூரியால் கைப்பற்றப்பட்டது. மேலும் சுஜாத் கானை நகருக்கு ஆளுநராக நியமித்தார். முகலாய பேரரசர் அக்பர் இந்த நகரத்தை மால்வாவின் சுபாவில் ஒரு சர்க்காராக மாற்றினார். 1586 ஆம் ஆண்டில் பண்டெலா ராசபுத்திரர்கள் நகரைக் கைப்பற்றினர். பின்னர் இது ஓர்ச்சாவைச் சேர்ந்த ராஜா மதுக்கரின் மகன் ராம் சப் என்பவரால் ஆளப்பட்டது. 1680 இல் தேவி சிங் பண்டெலா நகரின் ஆளுனரானார். குவாலியரின் மராட்டிய ஆட்சியாளரான தவுலத் ராவ் சிந்தியாவுக்கு இராணுவத் தளபதி ஜீன் பாப்டிஸ்ட் பிலோஸால் 1811 இல் சந்தேரி இணைக்கப்பட்டது. இந்த நகரம் 1844 இல் ஆங்கிலேயர்கள் வசமானது. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது ஆங்கிலேயர்கள் இந்நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்தனர். மேலும் 1858 பிப்ரவரி 14 அன்று சர் ஹக் ரோஸால் நகரத்தை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியதற்காக ரிச்சர்ட் ஹார்டே கீட்டிங்கிற்கு விக்டோரியா கிராஸ் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நகரம் 1861 ஆம் ஆண்டில் குவாலியரின் சிந்தியாக்களுக்கு மாற்றப்பட்டது. மேலும் குவாலியர் மாநிலத்தின் இசாகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, குவாலியர் புதிய மத்திய மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. இது நவம்பர் 1, 1956 அன்று மத்திய பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது.

குறிப்புகள்

ஹண்டர், வில்லியம் வில்சன், ஜேம்ஸ் சதர்லேண்ட் காட்டன், சர் ரிச்சர்ட் பர்ன், வில்லியம் ஸ்டீவன்சன் மேயர், பதிப்புகள். (1909). இந்தியாவின் இம்பீரியல் வர்த்தமானி, தொகுதி. 9. ஆக்ஸ்போர்டு, கிளாரிண்டன் பிரஸ்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya