சாங்ஷா
சாங்ஷா (Changsha, எளிய சீனம்: 长沙) சீன மக்கள் குடியரசின் தென்மத்தியில் உள்ள ஹுனான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். 11,819 கிமீ2 (4,563 ச.மை) பரப்பில் அமைந்துள்ள இந்த நகரத்தின் எல்லைகளாக வடக்கில் யுயெயாங், யியாங் நகரங்களும் மேற்கில் லௌதியும் தெற்கில் சியாங்டான், ஷுஷுவும் கிழக்கில் ஜியாங்சி மாகாணத்தின் யிசூன், பிங்சியாங் நகரங்களும் உள்ளன. 2010 கணக்கெடுப்பின்படி, சாங்ஷாவில் 7,044,118 பேர் வசிக்கின்றனர். இது மாகாணத்தின் மக்கள்தொகையில் 10.72% ஆகும்.[3] இது சாங்-சூ-டான் நகரத்தொகுப்பின் அங்கமாகும். சாங்ஷா ஜியாங் ஆற்றுப் பள்ளத்தாக்குச் சமவெளியில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் லுவோக்சியோ மலைகளும் மேற்கில் ஊலிங் மலைகளும் வடக்கில் டோங்டிங் ஏரியும் தெற்கில் எங்சான் மலைகளும் அமைந்துள்ளன. இங்கு பருவப் பெயர்ச்சிக் காற்று சார் ஈரப்பதமுள்ள மிதவெப்ப மண்டல வானிலை நிலவுகின்றது. ஆண்டின் சராசரி வெப்பநிலை 16.8 முதல் 17.3 °C வரையும் (62.2 - 63.1 °F) ஆண்டிற்கான மழையளவு 1,358.6 முதல் 1,552.5 மிமீ வரையும் (53.49 முதல் 61.12 அங் வரை) உள்ளது.[4] சாங்ஷாவின் வரலாறும் பண்பாடும் 3,000 ஆண்டுகள் தொன்மையானது.[5] ஆன் அரசமரபு (கி.மு 206 – கி.பி 220) ஆட்சியில் சாங்ஷா மாகாணத் தலைநகராக விளங்கியது. பத்து இராச்சியங்களின் காலத்தில் (907–951) சூ இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. பொதுயுகத்திற்கு முன்னதான இரண்டாம் நூற்றாண்டு காலத்து அரக்குக் கைவினைப்பொருட்களும் பட்டு உரைநூல்களும் மாவங்குடுயில் கண்டறியப்பட்டுள்ளன. இது இந்நகரத்தின் பண்பாட்டுத் தொன்மைக்கும் கைவினை மரபுகளுக்கும் சான்றாக உள்ளது. 1904இல் சாங்ஷா வெளிநாட்டு வணிகத்திற்கு அறிமுகமானது. இங்கு ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பெருமளவில் குடியேறினர். இங்குதான் மா சே துங் பொதுவுடமைக் கொள்கைக்கு மாறினார். சீன-சப்பானியப் போர்களின்போது (1931–1945) இங்குதான் முதன்மையான சண்டைகள் நடந்தேறின; சிறிதுகாலத்திற்கு சப்பானியர் கைவசப்படுத்தியிருந்தனர். தற்காலத்தில் சாங்ஷா சீனாவின் முதன்மையான வணிக, தயாரிப்பு, போக்குவரத்து மையமாக விளங்குகின்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia