ஜியாங்சி மாகாணம்
ஜியாங்சி மாகாணம் (Jiangxi சீனம்: 江西; பின்யின்: ⓘ; வேட்-கில்சு: Chiang1-hsi1; என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. இதன் நிலவியலில் வட எல்லையாக யாங்சி ஆறும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மலைகளும் அமைந்துள்ளன. இதன் வடக்கில் அன்ஹுயி மாகாணமும், வடகிழக்கில் ஜேஜியாங் மாகாணமும், கிழக்கில், புஜியான் மாகாணம், தெற்கில் குவாங்டாங் மாகாணம், மேற்கில் ஹுனான் மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.[3] நான்சாங் நகரம் இம்மாகாணத்தின் தலைநகராகும். இந்த நகரமே மாகாணத்தின் நகரங்களில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம். வரலாறு"ஜியாங்சி" என்ற பெயர் தாங் அரசமரபு காலத்தில் 733 ஆண்டுமுதல் வழக்கத்திலுள்ளது. கான் ஆற்றுப்பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ள ஜியாங்சி மாகாணம் வரலாற்றுக்காலந்தொட்டே தென்சீனாவின் முதன்மையான வடக்கு-தெற்கு போக்குவரத்துப் பாதையாக விளங்கியது. தென்கிழக்கு மலைகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புக்கிடையில் பயணிப்பதைக்காட்டிலும் கான் ஆற்றின் கரையோரமாக இருந்த பயணப்பாதை பயணிக்க எளிதாக இருந்துவந்தது. இந்த நடைபாதை வட சீனச்சமவெளி மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புக்கு முதன்மையான பாதையாக விளங்கியது. நிலவியல்ஜியாங்சியைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேற்கே முபு மலைகள், ஜியுலிங் மலைகள், லுவோசியோ மலைகள் போன்றவையும், கிழக்கே ஹுஆயு மலைகள், வூயீ மலைகள் போன்றவையும், தெற்கில் ஜியுலியான் மலைகள் (九连山) மற்றும் தாவையு மலைகளும் அமைந்துள்ளன. மாகாணத்தின் தெற்கு பகுதி மலைப்பாங்காகவும், பள்ளத்தாக்குகளைக் கொண்டும் வடக்குப்பகுதி உயரம் குறைந்து தட்டையாகவும் உள்ளது. மாகாணத்தின் உயராமான பகுதி வூயீ மலைகளில் உள்ள ஹுவாங்காங் சிகரமாகும் (黄岗山). 2,157 மீட்டர் (7,077 அடி) உயரம் கொண்ட இச்சிகரம் புஜியான் மாகாணத்தின் எல்லையில் உள்ளது. ஜியாங்சி ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டது. குறுகிய ஈரமான குளிர்காலமும், மிகவும் சூடான, ஈரப்பதமான கோடைக்காலமும் கொண்டது. சராசரி வெப்பநிலை சனவரியில் 3 முதல் 9 °செ (37 முதல் 48 °பாரங்கீட்) சூலை மாதத்தில் சராசரியாக 27 முதல் 30 °செ வரை (81 முதல் 86 °பா) வெப்பம் நிலவுகிறது. ஆண்டு மழைபொழிவு 1,200 முதல் 1,900 மில்லி மீட்டர் (47 முதல் 75 அங்குலம்) பெரும்பாலான மழை வசந்த மற்றும் கோடைக் காலங்களில் பொழிகிறது. பொருளாதாரம்ஜியாங்சி மாகாணத்தில் மிகுதியாக விளையும்பயிர் நெல் என்றாலும் இங்கு பருத்தி மற்றும் ரேப்சீடு போன்ற பணப்பயிர்களும் குறிப்பிடத்தக்கவகையில் பயிரிடப்படுகின்றன. ஜியாங்சி மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடுகையில் கனிமவளத்தில் முன்னணிவகிக்கிறது. இங்கு செம்பு, டங்ஸ்டன், தங்கம், வெள்ளி, யுரேனியம், தோரியம், டாண்டாலம், நியோபியம் போன்றவை சுரங்கங்களில் எடுக்கப்படுகின்றன. அண்டை மாகாணங்களை ஒப்பிடும் போது, ஜியாங்சி ஏழ்மையான மாகாணமாக உள்ளது. இதன் அருகில் செல்வம் கொழிக்கும் மாகாணங்களான குவாங்டாங், ஜேஜியாங், புஜியான் போன்றவை அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் ஜியாங்சியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1158,3 பில்லியன் யுவான் (183.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மக்கள் வகைப்பாடுஜியாங்சி மக்கள்தொகை சுமார் 39.66 மில்லியன் ஆகும்.[4] இதில் 99.73% ஹான் சீனர், பிற இனச் சிறுபான்மையினர் ஹுய் மற்றும் ஜுவாங் மக்கள் ஆவர். ஜியாங்சி மற்றும் ஹெனன் ஆகிய இரு மாகாணங்களிலும் அனைத்து சீன மாகாணங்களைவிட மிக சமநிலையற்ற பாலின விகிதம் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் ஆய்வு அடிப்படையில், ஆண் பெண் விகிதம் 1-4 வயது வரை உள்ளவர்களில் 100 சிறுமிகளுக்கு 140 சிறுவர்கள் உள்ளனர்.[5] சமயம்ஜியாங்சி மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமயங்கள் சீன நாட்டுப்புற மதங்கள், தாவோயிச மரபுகள் மற்றும் சீன பௌத்தம் ஆகும். 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள் படி, மக்கள் தொகையில் 24.05% முன்னோர்களை வழிபடும் நம்பிக்கையுள்ளவர்கள், 2.31% கிறித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[6] அறிக்கையில் 73.64% மக்களின் சமயம் குறித்து தெரிந்துகொள்ள இயலவில்லை. இவர்கள் புத்தமதம், கன்பூசியம், தாவோயியம், நாட்டுப்புற சமயம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia