சுஷாந்த் சிங் ராஜ்புத் (21 ஜனவரி 1986 - 14 ஜூன் 2020 [1] ) இந்தி சினிமாவில் பங்களித்தமைக்காக மிகவும் பிரபலமான ஒரு இந்திய நடிகர் ஆவார்.[2] ராஜ்புத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்புத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] அவரது முதல் நிகழ்ச்சி ஸ்டார்பிளஸின் காதல் நாடகம் கிஸ் தேஷ் மே ஹை மெரா தில் (2008) ஆகும். அதைத் தொடர்ந்து ஜீ டிவியின் சோப் ஓபரா பவித்ரா ரிஷ்டா (2009–2011) தொடரில் நடித்தார்.
ராஜ்புத் தனது திரைப்பட அறிமுத்தை 2013 ஆம் ஆண்டில் கை போ சே! திரைப்படம் மூலமாகத் தொடங்கினார். பின்னர் அவர் காதலும் நகைச்சுவையும் கலந்த சுத் தேசி ரொமான்ஸ் (2013) திரைப்படத்திலும் மற்றும் பெயரிலேயே “துப்பறியும்“ எனத் தொடங்கும் திகிலூட்டும் திரைப்படமான துப்பறியும் பியோம்கேஷ் பக்ஷி! (2015) -இலும் நடித்தார். அவரது அதிக வசூல் தந்த வெளியீடுகளில் ஒன்றான, நையாண்டித்தனமான நகைச்சுவைத் திரைப்படமான பி.கே (2014) இல் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி (2016) என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கான முதல் பரிந்துரையைப் பெற்றார். ராஜ்புத் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களான கேதார்நாத் (2018) மற்றும் சிச்சோர் (2019) படங்களில் நடித்தார்.[4][5] அவரது கடைசி படம், தில் பெச்சாரா (2020), இவரது மரணத்திற்குப் பின் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவான நிதி ஆயோக், மகளிர் தொழில் முனைவோருக்கான தளத்தினை முன்னெடுப்பதற்கான பணிக்காக இவரை ஒப்பந்தம் செய்தது.[6] திரைப்படத்தில் நடிப்பது மற்றும் அறிவுசார் வளத்திற்கு பொறியியல் தொழில்நுட்பத் திறனால் வலுவூட்டப்பட்ட அறிவுசார் வளங்களின் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டது[7] தவிர சுசாந்த் சிங் மாணவர்களுக்கு உதவக்கூடிய பணிகளையும் செய்து வந்தார்.[8]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார்.[9][10] தன் உடன்பிறந்த 5 பேரில் இவர் தான் இளையவர் ஆவார். இவரது செல்லப்பெயர் குல்ஷன்ஆகும்.[11] அவரது நான்கு சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீரராக மாறுவார்.[9] ராஜ்புத் பாட்னாவில் உள்ள புனித கரேன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[11][12] 2002 ஆம் ஆண்டில் அவரது தாயார் இறந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது, அங்கு ராஜ்புத் தனது பள்ளிப் படிப்பை குலாச்சி ஹன்ஸ்ராஜ் மாதிரி பள்ளியில் தொடர்ந்தார்.[10] ராஜ்புத் வானியற்பியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் இந்திய தேசிய இயற்பியல் ஒலிம்பியாட்டில் வென்றவர் என்றும் கூறப்படுகிறது.[13] அவருக்கு டெல்லி பொறியியல் கல்லூரியில் (பிறகு டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது)இயந்திரப் பொறியியல் பிரிவில் இளங்கலைப் பொறியியல் பட்டம் படிக்க சேர்க்கை கிடைத்தது.[13][14] ராஜ்புத்தின் கூற்றுப்படி, அவருக்கு பொறியியல் மீது எந்த ஆர்வமும் இல்லை, ஆனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு வேறு வாய்ப்புகளைத் தரவில்லை, அது அவரை அதிருப்திக்குள்ளாக்கியது. அதற்குப் பதிலாக அவர் ஒரு விண்வெளி வீரராகவோ அல்லது ஒரு விமானப்படை விமானியாகவோ மாற விரும்பினார், ஆனால், பாலிவுட்டில் ஆர்வமாக இருந்தார்.ஷாருக்கானின் இரசிகராகவும் இருந்தார்.[15]
தொழில் வாழ்க்கை
2006 - 2011: ஆரம்ப கால தொழில் வாழ்க்கை மற்றம் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பு
டெல்லி பொறியியல் கல்லூரியில் தனது படிப்பின் போது, ராஜ்புத் ஷியாமக் தாவர் என்ற நடன அமைப்பாளரின் நடன வகுப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.[9] விரைவில், அவர் நாடக இயக்குநர் பாரி ஜானின் கீழ் நடிப்பு வகுப்புகளிலும் கலந்து கொள்ளத் தொடங்கினார்.[16][17] ராஜ்புத் பின்னர் அந்த அனுபவம் தன்னை மரபு சார்ந்த எண்ணங்கள் மற்றும் மனப்பான்மைகளிலிருந்து விடுவிப்பதாகக் கண்டதாகவும், அதை எப்போதும் நிரந்தரமாகச் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.[18] தூம் 2 திரைப்படத்தின் தூம் எகெய்ன் பாடலில் பின்னணி நடனக் கலைஞராக ஆடியது, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் ஐஸ்வர்யா ராயின் நடனக்குழுவில் ஆடியது ஆகியவை அவரை குறிப்பிடத்தக்க அளவில் நினைவில் வைத்துக்கொள்ள உதவியது.[19] 2006 ஆம் ஆண்டில்,[20] பொறியியல் பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டில் கல்வியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கலைத்துறையில், நடிகராகத் தனது தொழிலைத் தொடங்கினார்.[21] புது தில்லியிலிருந்து மும்பைக்குச் சென்ற ராஜ்புத் மும்பை திரைத்துறையில் கிடைத்த சிறு சிறு வெவ்வேறு வேலைகளைச் செய்து கொண்டே தனக்கு நடிப்பதற்கு கிடைத்த சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தொடங்கினார்.[22] மும்பையில் ராஜ்புத் நாதிரா பப்பரின் நாடகக்குழுவான ஏக்ஜுட்டில் சேர்ந்தார். இந்தக் குழுவோடு அவர் இரண்டரை காலம் தொடர்ந்து இணைந்திருந்தார்.[23][24]
↑ 11.011.1Ridhi Kale, Vidya (14 September 2020). "Phantoms of the mind". India Today (in ஆங்கிலம்). Retrieved 5 September 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
↑Thomas, K. Sunil (28 June 2020). "Reaching for the stars". The Week (in ஆங்கிலம்). Retrieved 5 September 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)