செருமனி தேசிய காற்பந்து அணி
செருமானியத் தேசிய கால்பந்து அணி (German: Die deutsche Fußballnationalmannschaft) 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் செருமனி நாட்டின் சார்பாக விளையாடும் காற்பந்தாட்ட அணியாகும்.[2] இதனை 1900இல் நிறுவப்பட்ட செருமன் கால்பந்துச் சங்கம் (Deutscher Fußball-Bund) மேலாண்மை செய்து வருகிறது.[6][7] 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மீண்டும் துவங்கப்பட்டதிலிருந்து 1990இல் செருமானிய மீளிணைவு நிகழும் வரை இது மேற்கு செருமனியைக் குறித்தது. செருமனி கூட்டணி நாடுகளின் ஆட்சியில் இருந்தபோது இரண்டு தனியான தேசிய அணிகளை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்திருந்தது: சார்லாந்து அணி (1950–1956) மற்றும் ஜெர்மன் சனநாயகக் குடியரசு சார்பான கிழக்கு செருமனி அணி (1952–1990). இவை இரண்டுமே, அவற்றின் சாதனைகள் உட்பட,[8][9] தற்போதைய தேசிய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏற்பட்ட மீளிணைவிற்கு பிறகு அலுவல்முறைப் பெயரும் குறியீடும் "செருமனி FR (FRG)" என்பதிலிருந்து "செருமனி (GER)" என்பதாக மாற்றப்பட்டது. பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; நான்கு உலகக் கோப்பைகளையும் (1954, 1974, 1990, 2014) மூன்று ஐரோப்பிய கோப்பைகளையும் (1972, 1980, 1996) வென்றுள்ளது.[6] தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்; மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் [6] கிழக்கு செருமனி ஒலிம்பிக்கில் 1976இல் தங்கம் வென்றுள்ளது.[10] ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகின்றது. 2014 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் செருமனி பெற்றுள்ளது[11].உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் செருமனியை சேர்ந்த மிரோசுலோவ் குளோசு ஆவார். இவர் இதுவரை 16 கோல்களை அடித்துள்ளார். 2014 உலகக்கோப்பையை வென்ற செருமனி தலைவர் பிலிப் லாம், 18 ஜுலை 2014 அன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia