செ. கதிர்காமநாதன்

செ. கதிர்காமநாதன் (1942 - செப்டம்பர் 1, 1972) ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, அறிமுகங்கள், இலக்கியக் குறிப்புகள் போன்றவற்றையும் எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி மேற்கில் பிறந்த இவர் கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேசுவராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ஆம் ஆண்டு தொடக்கம் வீரகேசரி, 'மித்திரன்' பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கை நிர்வாக சேவையில் 1971-ஆம் ஆண்டு இணைந்து பணியாற்றினார்.[1]

இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது.[1] 1942-ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷன்சந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இப்புதினம் வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. இத்தொடரை நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் இறந்துவிட்டார்.[1] இது பின்னர் 'வீரகேசரி' வெளியீடாக வெளிவந்தது. இந்நூலில் "நான் சாகமாட்டேன்" குறுநாவலுடன், "ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்லுகிறான்", "வெறும் சோற்றுக்கே வந்தது", "வியட்நாம் உனது தேவதைகளின் தேவவாக்கு" ஆகிய அவரது மிகச் சிறந்த மூன்று சிறுகதைகளும் இடம்பெற்றன.[1]

"ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்லுகிறான்" என்ற சிறுகதை 'யூனெஸ்கோ' நிறுவனத்தினால் உலகமொழிகளில் வெளியிடுவதற்கெனத் தெரிவுசெய்யப்பட்ட ஈழத்துச் சிறுகதைகளில் ஒன்றாகும். "வெறும் சோற்றுக்கே வந்தது" என்ற சிறுகதை இலங்கை சாகித்திய மண்டலத்தினால் சிங்களத்தில் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கதை இந்தியாவிலும் மறுபிரசுரமாகியது.[1]

எழுதிய நூல்கள்

  • கொட்டும் பனி
  • மூவர் கதைகள்
  • நான் சாகமாட்டேன்

மறைவு

செ. கதிர்காமநாதன் 1972 செப்டம்பர் 1 இல் தனது 30-வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "நான் சாகமாட்டேன்" நூல் தந்த சாகாத படைப்பாளி செ. கதிர்காமநாதன்..!, வி. ரி. இளங்கோவன், தினகரன் வாரமஞ்சரி, 13-09-2020
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya