தண்ணீர்ப் பந்தல்

தமிழ்நாட்டின் ஒசூர் வட்டாட்சியர் அலுவலக தானி நிறுத்தம் அருகே அமைக்கபட்டுள்ள ஒரு தண்ணீர் பந்தல்
கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இருந்து ஒசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர்ப் பந்தலுக்காக கல்லால் அமைக்கப்பட்ட ஒரு பழமையான தொட்டி, இதன்மேல் புடைப்புச் சிற்பமாக லிங்கமும், நந்தியும் செதுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர்ப் பந்தல் என்பது கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க இலவசமாகத் தண்ணீர் வழங்கப்படும் இடமாகும். சிலர் நீர்மோர்ப் பந்தல் அமைப்பதும் உண்டு. தண்ணீர் பந்தல்கள் தமிழகத்தில் காலங்காலமாக அமைக்கப்பட்டு வந்துள்ளன.

பெயராய்வு

ஓலைப் பந்தலின் அடியில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படுவதால் தண்ணீர் பந்தல் என்ற பெயர் வந்ததாக பொதுவான கருத்து உள்ளது. நீருள்ள வாயகன்ற பாத்திரத்தை அல்லது பள்ளத்தை சங்க வழக்கில் நீர்பத்தர் என்ற வழக்கம் இருந்துள்ளது. இந்த பத்தர் என்பதே பந்தல் என்று ஆகி, நீர்பந்தல் என்பது தண்ணீர்பந்தல் என்று மருவி வழங்கி வருகிறது. என்ற கருத்து இலக்கிய ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.[1]

அமைக்கப்படும் இடங்கள்

தண்ணீர் பந்தல்கள் பெருவழிகளின் ஓரமாக மர நிழலில் அமைக்கபட்டன. அதற்கு தேவையான தண்ணீரை சேமித்துவைக்க கற்பலகைகள் கொண்டு நிரந்தரமாக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இ்வாறான பழைய நீர்த் தொட்டிகள் தற்போதும் காணப்படுகின்றன. மேலும் கோயில் மண்டபங்களில் நிரந்தரமாக வழிப்போகர்களின் வசதிக்காக அமைப்பதும் உண்டு. திருவிழா காலங்களில் அங்கு கூடும் மக்களின் தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்கள், நீர் மோர்ப் பந்தல்கள் போன்றவை தற்காலிகமாக தற்போதும் அமைக்கப்படுகின்றன.

வரலாறு

இலக்கியங்களில்

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே தண்ணீர் பந்தல் அமைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு அறச்செயலாக போற்றப்பட்டுள்ளது. நீர் அறம் நன்று என்று சிறுபஞ்சமூலம் தெரிவிக்கிறது.[2] நிறைந்த பந்தற்ற சும்பவார் நீரும் என காஞ்சிபுரத்தில் இருந்த நண்ணீர் பந்தலைப் பற்றி மணிமேகலை கூறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள 35வது படலமான தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் என்னும் கதையில் பாண்டிய வீரர்களுக்கு சிவபெருமானே தண்ணீர்ப்பந்தல் வைத்தது தாகம் தணித்த கதை உள்ளது.[3] பெரிய புராணத்தில் அப்பர் பெயரில் அப்பூதியடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அறப்பணி செய்ததாக கூறப்பட்டுள்ளது.[4]

கல்வெட்டுகளில்

தமிழகத்தின் மன்னர்களும் தண்ணீர் பந்தல் அமைக்கும் அறச்செயலை செய்து வந்துள்ளனர். மன்னர்களைப் பின்பற்றி செல்வர்களும் தண்ணீர் பந்தல்களை அமைத்ததை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. உத்திரமேரூர், காஞ்சிபுரம் அருகில் உள்ள உக்கல், திருச்செந்துறை, திருப்பராய்த்துறை, செந்தலை போன்ற பல ஊர்களில் உள்ள கோவில்களில், அம்பலம் என, அழைக்கப்படும் மண்டபங்களில், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததை, கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகிறது. அங்கு அமைக்கபட்ட தண்ணீர் பந்தல்களை பராமரிக்க தண்ணீர்ப் பந்தல் பற்று என்னும் பெயரில், நிலதானம் அளித்ததை, திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோவிலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு கூறுகிறது.[5]

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள சோழமாதேவி கிராமத்தின், கயிலாயமுடையார் கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் கல்வெட்டில் அங்கு 'ராஜராஜன்' என்று அழைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மண்டபம் இருந்தது என்று தெரிகிறது. அகத்தீஸ்வரம் கோவில் கல்வெட்டில், தண்ணீர் பந்தல் முதலாம் இராஜராஜ சோழன் பெயரால், ஜெயங்கொண்ட சோழன் எனப் பெயரிட்டு அழைக்கப்ப்பட்டதாக அறிய வருகிறது.[5]

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பெருவழிகளில் வண்டி இழுத்துவரும் மாடுகளின் தாகம் தணிக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் அறச்செயலாக செய்யப்பட்டுள்ளது கல்வெட்டுகளின் வழியாக அறியப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. தண்ணீர்ப் பந்தலா? நீர்ப் பத்தலா? கட்டுரை, முனைவர் ப. பாண்டியராஜா, தினமணி, 2019, மார்ச், 10
  2. KR.ShakthiVell - +91 9994508493. "சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு - பயன், நன்று, கருத்துரை, அறம், இலக்கியங்கள், பிச்சை, சிறுபஞ்சமூலம், துறவறம், பதினெண், கீழ்க்கணக்கு, உப்பு, போர்த்தும், தொட்டு, முதலிய, குளம், வளம், நீட்டியும், சொல்லிய, கொள்க, இல்லறம், அன்றேல், சொல்லப்பட்ட, பூசியும், பின்பு, போகம், செய்தன்ன்று, பெரும், நீர், சங்க, செய்தார்க்குப், பின், வெண்ணெய், நெகிழ்ந்து, என்பதாம், மிகப், பெரிது, கூடும்". www.diamondtamil.com. Retrieved 2022-03-24.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. http://temple.dinamalar.com/news.php?cat=69&pgno=3
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-08. Retrieved 2015-07-24.
  5. 5.0 5.1 5.2 "தண்ணீர் பந்தல் - தொன்று தொட்டு வரும் தமிழர் பாரம்பரியம்". Dinamalar. 2021-04-17. Retrieved 2022-03-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya