தந்திவர்மன்
தந்திவர்மன் (கி.பி 777 - 830) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார். இவர் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவார். இவர் பாரத்துவாச கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவர் தந்திவர்மன் எனவும் " கோவிசைய தந்திவிக்கிரமவர்மன் " எனவும் கல்வெட்டுகளினல் குறிக்கப்பட்டுள்ளார்.[1] தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த[2] அக்கள நிம்மடி என்னும் இளவரசியை மணந்துகொண்டவர். திருச்சிராப்பள்ளி வட்டத்தில் இன்று ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளார். இங்கு ஏரி ஒன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி எனப்பெயரும் வைத்துள்ளார். புதுக்கோட்டையில் குளத்தூர் வட்டத்தில் இக்காலம் மலையடிப்பட்டனம் என்று வழங்கும் திருவாலத்தூர் மலைக்கோயில் இவர் காலத்தில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தனால் கட்டப்பட்டது. திருச்சிக்கு வடக்கே திருவெள்ளறை எனும் ஊரிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணறும் செங்கற்பட்டு வட்டத்தில் உத்தரமல்லூரிலுள்ள வைரமேகத் தடாகமும் இவர் காலத்தே வெட்டப்பட்டவை. தந்திவர்மனுக்கு இராட்டிரகூட அரசன் கோவிந்தனும், பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் வரகுண மகாராசனும் பகைவர்களாயிருந்தனர்.[3]இவரது ஆறாம் ஆண்டு ஆட்சி காலத்திய கல்வெட்டு ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டூர் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாளின் சிலை அருகே உள்ளது. அதில் "விண்ணக்கோவரையர் என்பர் ஏற்றுக்குன்றனர் படாரியர்க்கு தினமும் அரிசி உணவு சமைப்பதற்காக பதினாறு கழஞ்சி பொன் வழங்கியதை "குறிப்பிடுகிறது . மேற்கோள்களும் குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia