தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்." [1] இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம்.
பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை இருப்பதால், இந்த செயற்பாடு அல்லது வழக்கம் சேமிப்பை தகுந்த வகையில் முதலீடு செய்து வருவாய் ஈட்ட தடையாக இருப்பதாகவும் பொருளியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றார்கள்.
தமிழர் அணிகலன்கள் வரலாறு
முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்".[2] உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்.