தாமசு கிரகாம் (வேதியியலாளர்)
தாமசு கிரகாம் (Thomas Graham, 21 திசம்பர் 1805[1][2] – 16 செப்டம்பர் 1869) என்பவர் கூழ்மப்பிரிப்பு மற்றும் வளிமங்களின் பரவல் ஆகியவற்றில் முன்னோடியாக பணியாற்றியதற்காக அறியப்படும் ஒரு இசுக்காட்லாந்து இயற்பிய வேதியியலாளர் ஆவார். இவர் கூழ்ம வேதியியல் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[3] வாழ்க்கைகிரகாம் கிளாஸ்கோவில் பிறந்தார், கிளாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கிரகாமின் தந்தை ஒரு வெற்றிகரமான புடவை உற்பத்தியாளர். தனது மகனை இசுக்காட்லாந்து தேவாலய சமயப் போதகராக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாக கிரகாம் 1819 இல் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படிக்க இணைந்தார். அங்கு இவர் வேதியியலில் பெரும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார், பேராசிரியர் தாமஸ் தாம்சனின் கீழ் படித்தார். அங்கு 1824 இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழக போர்ட்லேண்ட் தெரு மருத்துவப் பள்ளியில் வேதியியல் கற்பித்தார். 1828 ஆம் ஆண்டில் எட்வர்ட் டர்னர் முன்மொழிவினால் இவர் எடின்பரோ வேத்தியர் கழகத்தின் கௌரவ சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1831–33 காலகட்டத்தில் இக்கழகத்தின் கீத் பதக்கத்தை வென்றார்.[4] 1830 ஆம் ஆண்டில் இவர் ஆண்டர்சன் மருத்துவப் பள்ளியில் முதல் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்தப் பதவியானது ஃப்ரீலேண்ட் வேதியியல் தலைவர் என்று பெயர் மாற்றப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியைப் பெறுவதற்கு முன்னர் கிளாஸ்கோ மெக்கானிக்ஸ் நிறுவனத்தில் விரிவுரைகளை ஆற்றினார். கிரகாம் 1841 இல் இலண்டன் வேதியியல் கழகத்தை நிறுவினார். 1866-ஆம் ஆண்டில், இவர் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இறுதி பதவி நிலையானது மாஸ்டர் ஆஃப் தி மிண்ட் ஆகும், இங்கு 1855 முதல் தனது இறப்பு வரை இருந்தார். அந்த பதவியை வகித்த கடைசி நபர் இவர்தான்.[5] இவர் இலண்டனில் உள்ள கோர்டன் சதுக்கத்தில் இறந்தார். இவரது உடல் கிளாஸ்கோ கதீட்ரலில் உள்ள குடும்ப நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[4] இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. வெளியீடுகள்
தாமஸ் கிரகாமின் ஆய்வில் முக்கிய இடம் பெற்றது வாயு பரவல் பற்றிய ஆய்வாகும். வாயுக்கள் திரவங்களால் உட்கொள்ளப்படுவதையும் பரவுதலையும் சவ்வூடு பரவல் தன்மைகளையும் விரிவாக ஆய்ந்து விளக்கினார். இதுவே, பின்னர், 'கிரகாம் வாயு பரவல் விதி’ என்ற பெயரால் வழங்கப்படலாயிற்று.[6] கிரகாம் கூழ்மம் தொடர்பான அடிப்படைக் கண்டுபிடிப்புகளையும் செய்தார், இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் தொழில்துறை அமைப்புகளிலும் நவீன சுகாதார சேவையிலும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன கூழ்மப்பிரிப்பு இயந்திரங்களில் தொழில்நுட்பத்தின் அடிப்படையான முன்னோடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கூழ்மங்கள் மற்றும் படிகங்களை பிரிக்கும் "டயாலிசர்" என்று அழைக்கப்படும் ஆய்வை கிரகாம் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் கூழ்ம வேதியியல் என்று அழைக்கப்படும் துறையில் அடித்தளமாக அமைந்தன. மேலும் கிரஹாம் இத்துறையின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[5] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia