திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி (Tirunelveli Medical College) என்பது தென்இந்தியாவில் அமைந்திருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாகும். திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] வரலாறுசென்னைப் பல்கலைக்கழகத்தின் உடன்படிக்கையுடன் 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில், திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரியை நிறுவியது. 1965-66 கல்வியாண்டில் மொத்தம் 75 மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மாணவர்கள் தூய சவேரியார் கல்லூரியிலும், மாணவியர் சாராள் தக்கர் கல்லூரியிலும் தமது முதலாம் ஆண்டு படிப்பினை முடித்தனர். சூலை 1966-ல், இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பினை அப்போது புதிதாக கட்டப்பட்ட உடற்கூற்றியல் துறையின் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். மருந்தியல், நோயியல், நுண்ணுயிரியல் மற்றும் சமூக மற்றும் தடுப்பு மருத்துவம் போன்ற பிற துறைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படத் தொடங்கின. மேலும் மாவட்டத் தலைமை மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி 1988ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றக் கல்லூரியாக மாறியது. இப்பல்கலைக்கழகத்துடன் இணையும் வரை, இந்தக் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாக செயல்பட்டது. இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை 1973-74 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 100 மாணவர் என அதிகரித்தது. 1977ஆம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றது. தற்போது இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் 250 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்படுகிறது.[2] வளாகம்இக்கல்லூரி சுமார் 286 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த வளாகத்தில் அமைந்துள்ளது. விரிவுரை அரங்குகள், நூலகங்கள், வாசிப்பு அறைகள், கலையரங்கம் மற்றும் ஆண்களுக்கான 2 தனி விடுதிகள் (தி ஹவுஸ் ஆஃப் பிரின்ஸ், தி ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) மற்றும் 2 பெண்களுக்கான (தேவதைகளின் மாளிகை) உள்ளன. ஆராய்ச்சி மேம்பாட்டிற்காகப் பரந்த அளவிலான பொதுவான ஆய்வக விலங்குகளைக் கொண்ட மத்திய விலங்கு இல்லம் உள்ளது. மருத்துவமனை பிரதான கல்லூரி வளாகத்திற்கு மேற்கே சுமார் 500 மீட்டர் தொலைவிலும், ஆண்கள் விடுதி வளாகத்திலிருந்து தென்கிழக்கே 500 மீட்டர் தொலைவிலும் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் (எம்பிபிஎஸ்) அடிப்படையில் இந்தக் கல்லூரி முதல் 5 இடங்களில் உள்ளது.[3] அமைவிடம்திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, இதன் முதன்மை போதனா மருத்துவமனையுடன், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி நகரில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள நெடுந்திடலில் அமைந்துள்ளது.[4] கல்லூரி, மருத்துவமனை மற்றும் விடுதிகள் அனைத்தும் 1 கி. மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 7 கி. மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் கல்லூரி அமைந்துள்ளது. மாணவர் சேர்க்கைகல்லூரியில் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதில் 85% தமிழ்நாடு அரசு மூலம் மாநில ஒதுக்கீடு அடிப்படையிலும் மற்றும் மீதமுள்ள 15% இந்தியக் குடியரசின் மத்திய அரசின் மூலம் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia