உடற்கூற்றியல் (Anatomy: கிரேக்கம்: ἀνατέμνω anatemnō அனா-மேல், τέμνω temnō டோம்-வெட்டு, கூறு) உடற் கூற்றினைப் பற்றிய அறிவியல் ஆகும். இது தாவரம், விலங்கு உள்ளிட்ட உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய அறிவைத் தருவதாகும். உடலின் பகுதிகள் (கூறுகள்) அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ அல்லது நுணுக்குக்காட்டியில் பார்க்கும் வகையிலோ ஆய்வுக்கு உட்பட்ட கல்வியாகும்.
உடல் அல்லது அதன் பாகங்களை தகுந்த முறையில் வெட்டிக் கூறிட்டோ (dissection), அல்லது வெட்டாமலோ ஆய்வு செய்து, அவை இயற்கையில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனை அறியலாம்.இது உயிரியல், மருத்துவம் ஆகியவற்றின் ஒரு துறையாகும். இதனைத் தாவர உடற்கூற்றியல் (அ) தாவர உள்ளமைப்பியல், விலங்கு உடற்கூற்றியல் என இரண்டாக வகைப்படுத்தலாம்.
விலங்குகள், தாவரங்கள் உடலுக்கு உள்ளாகக் காணப்படும் உறுப்பமைவினை அறிய முயலும் பிரிவு அறிவியலின் உள்ளுறுப்பமைப்பியல் எனப்படும்[1]. அறுவைச் சிகிச்சை, மருத்துவம் போன்ற பயன்தரும் துறைகள் தோன்றி மேம்பாடு அடைந்ததற்கு இப்பிரிவின் பங்களிப்பே காரணம் ஆகும். விலங்கு உடற்கூற்றியலில், மனித உடற்கூற்றியலுக்கு சிறப்பு கற்கை நெறி உள்ளது.
விலங்கு அல்லது மனித உடற்கூற்றியலில் உடற்பாகங்கள் வாரியாக (எ. கா: தலை, கால்) அல்லது தொகுதி வாரியாக (எ.கா: நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி) எனவும் கற்கலாம். தொகுதி சில பாடப் பிரிவுகளில் மண்டலங்களாக குறிப்பிடப்படுவதும் உண்டு.
கி.மு. 2500 ல் எகிப்தியர்கள் மனிதனின் உடலைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் இறந்த உடலைப் பிரமிடுகளுக்குள்ளாக நன்கு பாடம் செய்து பதப்படுத்தி வைத்திருந்தனர். அதற்கு "மம்மிக்கள்" என்று பெயரிட்டனர். இதற்கென உள்ளுறுப்புகளை அறுவை செய்து நீக்கிவிட்டுப் தனிதனிக் குடுவைகளில் பாதுகாப்புச் செய்தனர். இவர்கள் அறுவைச் சிகிச்சையிலும், உடைந்த எலும்புகளை சரிசெய்வதிலும் திறன் பெற்றிருந்தனர்.
கி.மு.1600ல் உடற்கூறியல் ஆய்வு பற்றி எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் அறுவையியல் நூலில் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் வழியாக, இதயத்திலிருந்து வரும் நாளங்கள் (கதுப்புகள்), கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், மூளை நரம்பு, கருப்பை, சிறுநீர்ப்பை, இரத்த நாளங்கள் போன்றவை இதயத்தின் ஒரு கதுப்புடன் இணைவதாகவும், மேலும் பிற கதுப்புகள், நாசி, கோழை, "மரண நாடி" எனவும் "உயிர் நாடி" எனவும் செயல்படுவதாக விவரிக்கப்பட்டுள்ளன.
கி.மு 1550ல், எபர்ஸ் பாபிரஸ் நூல் இதய ஆய்வை, சிறிது விரிவாகவும், இதய நாளங்கள், இரத்த வழங்கல் மையமாக உள்ளதாகவும் ஆய்ந்துள்ளது. எகிப்தியர்கள் சிறுநீரகங்கள் செயல்பாடு பற்றி சிறிதளவு அறிந்திருந்தனர். மேலும் இரத்தம், கண்ணீர், சிறுநீர் மற்றும் விந்து, முதலியவை நாளங்களைக் கொண்டிருப்பதாகக் குறித்தனர்.
கி.மு.500-491 ஆண்டுகளில் இந்தியாவில் சுஸ்சுதா, கண்புறை அறுவைச் சிகிச்சை செய்தனர்.
அறுவைச் சிகிச்சை முறைகளைப் பற்றி கி.பி. முதல் நூற்றாண்டில் செல்சஸ் என்னும் ரோம மருத்துவர் ஒரு நூலை வெளியிட்டார்.
கி.பி. 1543 புத்தக வெளியீட்டில் ஒரு முக்கிய ஆண்டு. இவ்வாண்டில் உள்ளுறுப்பமைப்பியல் பற்றித் துல்லியமாக எழுதிய ஒரு புத்தகத்தை அன்டிரியஸ் வெசாலியஸ் என்பவர் வெளியிட்டார்.
1628ல் வில்லியம் ஹார்விஇதயம் இரத்தக் குழாய்களின் செயல்பாட்டினை விளக்கினார். இக்கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து உடலின் பல்வேறு உறுப்புகளைப் பற்றிய அனைத்துச் செல்களின் மூலக்கூறு கட்டமைப்பு பற்றியும் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
1858ல் கிரேயின் உள்ளுறுப்பமைப்பியல் - மனித உள்ளுறுப்புகள் தொடர்பாகப் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் ஹென்றி கிரே அவர்களால் எழுதப்பட்ட உடற்கூற்றியல் : விளக்கமும், அறுவை சிகிச்சையும் எனும் நூல் சிறப்பானதாக உள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1858ல் வெளியானது. தொடர்ந்து 145 ஆண்டுகளாக இந்நூல் பதிப்பில் உள்ளது. அண்மையில் 2000வது ஆண்டில் விரிவான 38வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹென்றி கிரே, இங்கிலாந்தில், வின்ட்சான் எனும் இடத்தில் 1827ல் பிறந்தவர். 1861 வரை வாழ்ந்த இவர் இலண்டனில் புனித ஜார்ஜ் மருத்துவமனைக் கல்லூரியில் மிகச் சிறந்த மாணவராக விளங்கியவர்.
உடற்கூற்றியல் வகைப்பாடு
ஒப்பீட்டு உடற்கூற்றியல் : இருவேறு உயிரினங்களின் உள்ளமைப்பை ஒப்பிட்டு அறியும் அறிவியல் உடற்கூற்றியல் ஆகும்
வளர்ச்சி உடற்கூறியல்,
நுண்ணோக்கிசார் உடற்கூற்றியல் : நுண்நோக்கியைப் பயன்படுத்தி, மிகச்சிறிய, கண்ணுக்குப் புலப்படாத அளவிலான அமைப்புக்களைப் பற்றி அறிதல் நுண்நோக்கிசார் உடற்கூற்றியல் ஆகும்.
தாவர மற்றும் விலங்குகளின் திசுக்கள் அவற்றின் செயல் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. விலங்குகள், பல உயிரணுக்களைக்கொண்டும், ஒவ்வொரு உயிரினத்தொகுப்பும் தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளையும் திறம்படச் செய்கின்றன. இழையங்கள், பெரும்பாலான முதுகெலும்பற்ற உயிரிகளில் புறவணியிழையம் (எபிதீலியல் திசு), மற்றும் இணைப்புத் திசு என்ற இரு கூறுகளைக் கொண்டுள்ளன. மேற்புறமமைந்துள்ள உடற்கூடு தோலிழமத்தால் ஆனது.
விலங்கு இழையங்களின் வகைகள்
விலங்குகளின் இழையங்கள் அடிப்படையில் நான்கு வகைக்குள் அடங்குகின்றன. அவையாவன:
முதுகெலும்பற்றவைகளில் கனிம இழையமும் ஒரு வகையாகவுள்ளது.
புறவணியிழையம்
புறவணியிழையம் உடல் உறுப்புகளின் உள், புறச்சவ்வுப் பகுதிகளில் அரணாக விளங்குகிறது.[2] இவ்விழையம் உறுப்புக்களின் புற உறையாகவும், உடலகத்தே உள்ள குழிகள், காற்றுத்துளைகள், இனப்பெருக்கப் பாதைகள், குருதிக்கலன்கள் போன்றவற்றின் அக உறையாகவும் விளங்குகின்றது. அதாவது உடலின் வெளிப்புற மேற்பரப்பையும், உட்புற மேற்பரப்பையும் போர்த்துக் காணப்படுகிறது. இது ஒருகலப்படையாலானதாகவோ, அல்லது பல்கலப்படையாலானதாகவோ இருக்கும்.
இணைநாரிழைகள் (Collagenous Fibre) – எலும்புத் தசைகளை மற்ற இழையங்கள் மூலம் உறுப்புகளுடன் இணைக்கின்றன. இவை தசை நார்கள், தோல், கார்னியா, எலும்பு, குருதிக்குழாய்கள், குடல் நாளம் போன்ற உறுப்புகளில் காணப்படுகின்றன. இது ஆல்ஃபா பாலிபெப்டைடு சங்கிலி மூலக்கூறுகளால் ஆனது.
நெகிழ் (அ) மீண்ம நாரிழைகள் (Elastic Fibre) - நெகிழ் தன்மை கொண்ட இவ்விழைகள் தமனியை நுரையீரலுடன் மீள் சுருளடைவதற்கு உதவுகின்றன. எலாஸ்டின் எனும் நெகிழ் புரதத்தாலான இது உயிரணுக்களின் புறப்பொருளில் அமந்துள்ளது.
நுண்வலை நாரிழைகள் (Reticular Fibre) – உயிரணுக்கள் சாரமமைக்க இந்நுண்வலை நாரிழைகள் உதவுகின்றன. இவை தசைநார்-III புரத வகையால் ஆனது. இவை எலும்பு மச்சை, கல்லீரல், நிணநீர் உறுப்புகளில் அமைந்துள்ளன.
இணைப்பிழையத்தின் முக்கியப் பணிகள்
உறுப்புகளின் நெகிழ்த்தன்மைக்கு உதவுகிறது.
புறவிசைகளினால் உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
உறுப்புகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.
தசை இழையம்
தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கும், உடலுறுப்புகளின் அசைவிற்கும் உதவும் இழையம் ஆகும்.
நரம்பு மண்டலம் சார்ந்த தசையிழைகள். உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் மின் வேதிசமிக்ஞைகளைக் கடத்தும் நரம்பணுக்களின் தொகுதி நரம்பிழையமாகும்.
தாவரத்திசுக்களின் வகைகள்
தாவர இழையங்கள் தோற்ற அமைப்பின் படி புறத்தோல், கலனியிழையம், அடியிழையம் என மூவகைப்படும்.
அவற்றின் தன்மையின் அடிப்படையில் பிரியிழையம் (அ) நிரந்தர இழையம் என இரு வகைப்படும்.
உயிரின வகைப்பாட்டின்படி முந்தைய ஒற்றையணு உயிரிகள் முதல் கணுக்காலிகள், மெல்லுடலிகள் வரை முதுகெலும்பற்றவையாகவே உள்ளன. ஒற்றையணு உயிரிகள் நகரிழைகள் (சிலியா), போலிக்கால்கள் (சூடபோடியம்) மூலம் இடம் பெயறுகின்றன. உணவானது உயிரணு விழுங்கல் முறை மூலமும், எரிசக்தி தேவைகள் ஒளிச்சேர்க்கை மூலமும் பெறப்படுகின்றன. செல் அகவங்கூடு அல்லது புற உடற்கூடு போன்றவை புறச்சட்டகம் போன்று ஆதரவு அளிக்கின்றன. சில முந்தைய ஒற்றையணு உயிரிகள் பன்மடங்கு காலனிகளை அமைக்கும் திறனும் பெற்றிருக்கின்றன.
பூச்சிகளின் உடற்கூற்றியல்
கணுக்காலிகள் (பூச்சிகள், சிலந்திகள், உண்ணி, இறால்கள், நண்டு, கடல் நண்டு) முதலியனவற்றின் புற உடற்கூடு வலுவான 'கைட்டின் ' எனப்படும் புறச்சட்டத்தாலானது. கால்சியம் கார்பனேட் கொண்ட மெல்லுடலிகள், வளைத்தசைப் புழுக்கள் மற்றும் சிலிக்கா படிவங்களைக் கொண்ட நுண்ணிய சிம்ரிவர் மற்றும் புற உடற்கூட்டுக்குண்டுகள் முதலியன வலுவான புறத்தோலை பெற்றிருக்கின்றன.
முதுகெலும்புள்ளவைகளின் உடற்கூற்றியல்
மனித உடலுறுப்புத் தொகுதிகள் (அ) உறுப்பு மண்டலங்கள்