துத்தநாகக் குரோமேட்டு (Zinc chromate) என்பது ZnCrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். குரோமேட்டு அயனியைக் கொண்ட இவ்வுப்பு, மணமற்றதாகவும் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள்-பச்சை படிகங்களாகக் காணப்படுகிறது. பூச்சுகளுக்குப் பயன்படுத்தும்போது, நிறமிகள் பெரும்பாலும் இதனுடன் சேர்க்கப்படுகின்றன.[2][3][4]
1920 ஆம் ஆண்டுகளில் போர்டு மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோமேட்டு மாற்று பூச்சுகளில் இது தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.[5]
தயாரிப்பு
தொழில்துறையில் பயன்படுத்த துத்தநாக குரோமேட்டை உருவாக்க குரோனாக்கு செயல்முறை எனப்படும் ஒரு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. சோடியம் டைகுரோமேட்டு மற்றும் கந்தக அமிலத்தின் கரைசலில் துத்தநாகம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட உலோகத்தை சில வினாடிகளுக்கு வைப்பதன் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.[6] நடுநிலை பொட்டாசியம் குரோமேட்டுடன் (K2CrO4) துத்தநாக சல்பேட்டைச் (ZnSO4) வினைபுரியச் செய்தும் துத்தநாகக் குரோமேட்டை தயாரிக்க முடியும். வினையில் துத்தநாகக் குரோமேட்டு ஒரு வீழ்படிவாக உருவாகிறது.[7]
K2CrO4 + ZnSO4 → ZnCrO4 + K2SO4
துத்தநாகக் குரோமேட்டு (தூள்)
1942 ஆம் ஆண்டில் துத்தநாகக் குரோமேட்டு பூசப்பட்ட குண்டு வீசும் ஊர்தி.
பயன்கள்
துத்தநாகக் குரோமேட்டின் முக்கிய பயன்பாடானது தொழில்துறை இரும்பு அல்லது அலுமினியப் பொருட்களின் மேல் பூச்சாகப் பூசுவதேயாகும்.[8] அமெரிக்க இராணுவம் குறிப்பாக 1930 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் வானூர்திகளில் அதிகமாகப் பயன்படுத்தியது. விண்வெளி மற்றும் வாகனத் தொழில்களுக்கான பல்வேறு பொருள்களுக்கான வண்ணப்பூச்சுகளிலும் பயன்படுத்தப்படுகிறது[9] அரிப்பு-எதிர்ப்பு முகவராக இதன் பயன்பாடு அலுமினிய கலப்புலோக பாகங்களுக்கு முதலில் வணிக விமானங்களிலும், பின்னர் இராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டது. 1940 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் அலுமினியத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்க அமெரிக்க இராணுவ விமானங்களில் உள்ளிழுக்கக்கூடிய தரையிறங்கும் விசைமாற்றிகளின் சக்கர பள்ளங்களில் இது பொதுவாக பூச்சாகக் காணப்பட்டது. இந்த கலவை ஒரு பயனுள்ள பூச்சாக இருந்தது, ஏனெனில் இது ஓர் அரிப்பு எதிர்ப்பு மற்றும் துரு எதிர்ப்பு முதல்பூச்சாகும்.[8] துத்தநாகக் குரோமேட்டு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், மேற்பரப்பில் உள்ள கரிமப் பொருள்கள் வளர்ச்சியையும் அழிக்கிறது. தெளிப்பு வண்ணப்பூச்சுகள், கலைஞர்களின் வண்ணப்பூச்சுகள், மெருகுப்பூச்சு நிறமிகள் மற்றும் இலினோலியம் தயாரிப்பிலும் துத்தநாக குரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது[5]
நிறமியாகப் பயன்படுத்தப்படும் போது, இது துத்தநாக மஞ்சள்,[2] பட்டர்கப் மஞ்சள் அல்லது மஞ்சள் 36 என்ற பெயர்களால் அறியப்படுகிறது.[10] கலைத்துறையிலும் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் நிறமி பழுப்பு நிறத்தில் சிதையும். இந்த விளைவை சியார்ச்சசு சீராட்டின் புகழ்பெற்ற ஓவியத்தில் காணலாம்.[11] சீராட்டின் இந்த ஓவியத்தில் துத்தநாக மஞ்சள் நிறத்தின் சிதைவு முழுமையாக ஆராயப்பட்டது. [12] இந்த கண்டுபிடிப்புகள் பின்னர் ஓவியத்தின் எண்ணிம புத்துருவாக்க [13]வடிவத்திலும் பயன்படுத்தப்பட்டன.[14][15]
சேலஞ்சர் விண்கலத்தில் துத்தநாகக் குரோமேட்டு இரண்டு O-வளையங்களுக்கு கூடுதலாக இடநிரப்பியாக ஒரு மெழுகு போன்ற பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.[16]
நச்சுத்தன்மை
சமீபத்திய ஆய்வுகள் துத்தநாக குரோமேட்டு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல என்றும் Cr(VI) இது ஒரு புற்றுநோய் ஊக்கியாகவும் உள்ளது என்று தெரிவிக்கின்றன.[17] துத்தநாக குரோமேட்டின் வெளிப்பாடு திசுக்களில் புண் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.[1][3] பிரித்தானிய மருத்துவ செய்தி இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வில், தொழிற்சாலைகளில் துத்தநாக குரோமேட்டு மற்றும் ஈயக் குரோமேட்டின் பயன்பாடு மற்றும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் நுரையீரல் புற்றுநோயின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கிறது.[18]
↑Casadio, F.; Xie, S.; Rukes, S. C.; Myers, B.; Gray, K. A.; Warta, R.; Fiedler, I. (2011). "Electron energy loss spectroscopy elucidates the elusive darkening of zinc potassium chromate in Georges Seurat's A Sunday on La Grande Jatte–1884". Analytical and Bioanalytical Chemistry399 (9): 2909–20. doi:10.1007/s00216-010-4264-9. பப்மெட்:20953774.
↑Berns, R. S.; Byrns, S.; Casadio, F.; Fiedler, I.; Gallagher, C.; Imai, F. H.; Taplin, L. A. (2006). "Rejuvenating the color palette of Georges Seurat's A Sunday on La Grande Jatte—1884: A simulation". Color Research & Application31 (4): 278–293. doi:10.1002/col.20223.