தேற்றாத்தீவு

தேற்றாத்தீவு

தேற்றாத்தீவு
மாகாணம்
 - மாவட்டம்
கிழக்கு மாகாணம்
 - மட்டக்களப்பு
அமைவிடம் 7°42′45″N 81°41′49″E / 7.712608°N 81.697036°E / 7.712608; 81.697036
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 30196
 - +065
 - EP

தேற்றாத்தீவு என்பது இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமம் ஆகும். இது மட்டக்களப்பு மாநகரின் தெற்கே மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் 24 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், தெற்கே களுதாவளைக் கிராமமும், மேற்கே மட்டக்களப்பு வாவியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இக்கிராமத்தின் பரப்பளவு ஏறத்தாழ 4,000 சதுர கிலோமீற்றர்களைக் கொண்டதாக உள்ளது.

தேற்றாத்தீவின் புவியியல் அமைப்பு அதன் பொருளாதாரத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. இங்கு இயற்கையாக அமைந்துள்ள விவசாய வயல்கள், பெரியகுளம் அடங்கலாக ஐந்து குளங்கள் (வட்டிக்குளம் உட்பட), மேற்கே அமைந்துள்ள மட்டக்களப்பு வாவி, மற்றும் கிழக்கே உள்ள கடற்கரை ஆகியவை கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களாகிய விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன. இந்தக் காரணிகளால், தேற்றாத்தீவு ஒரு வளமான விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தைக் கொண்டுள்ளது.

பெயர்க் காரணம்

தேற்றா மரங்கள் இப்பகுதியில் அதிகமாகக் காணப்பட்டதாலேயே, இந்த ஊருக்கு தேற்றாத்தீவு அல்லது தேத்தாத்தீவு என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் மக்கள் இந்த ஊரை தேத்தாத்தீவு என்றும் தேற்றாத்தீவு என்றும் அழைப்பது இந்தக் காரணப் பெயரை உறுதிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்று இம்மரங்கள் இங்கு அருகிவிட்டன.

தேற்றா அல்லது தேத்தா (Strychnos potatorum) என்பது ஒரு வகையான மரமாகும். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும், தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. இம்மரம் மலைக்காடுகளிலும், சமவெளிகளிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. இதன் பழம் மற்றும் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

பிங்கல நிகண்டு தேற்றா மரத்திற்கு இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திலும் இந்த மரம் குறிப்பிடப்பட்டுள்ளது:

"இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)"

நற்றிணைப் பாடல் தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாகக் கூறுகிறது:

"குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் (நற். 376:5-6)"

கலித்தொகை இலக்கியம் கலங்கிய நீரைத் தேற்றாங்கொட்டை தெளிய வைப்பதைப் பற்றிப் பேசுகிறது:

"இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து" ( கலித்தொகை 142:64)

தேற்றாங்கொட்டை என்ற சொல் தேறு + அம் + கொட்டை எனப் பிரிக்கப்படுகிறது:

  • தேறு - தெளிவு
  • அம் - நீர்
  • கொட்டை - விதை

இது தேற்றாங்கொட்டையின் நீரைத் தெளிவுபடுத்தும் தன்மையைக் குறிப்பதாக அமைகிறது.

அதுபோல முன்னைய காலங்களில் தேன்கதலி (தேற்றா) வாழை இக்கிராமத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே காணப்பட்டது. ஆத்துடன் தீவு போன்ற தரைத்தோற்ற அமைப்பை உடையதாக இக் கிராமம் காணப்பட்டதாக அறிய முடிகின்றது.

புவியியல்

மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவுக் கிராமம், பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலம் தொட்டு 1ம் குறிச்சி, 2ம் குறிச்சி என்று பிரிக்கப்பட்டு உள்ளது. பின்னாளில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையினால் தேற்றாத்தீவு தெற்கு, தேற்றாத்தீவு தெற்கு 1, தேற்றாத்தீவு தெற்கு 2, தேற்றாத்தீவு தேற்றாத்தீவு வடக்கு என்று பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கிராம சேவையாளர் வீதம் பணியாற்றுகின்றனர்.

தேற்றாத்தீவின் குடியிருப்பு

தேற்றாத்தீவில் அமைந்துள்ள குடியிருப்பு கிராமம், தேற்றாத்தீவு கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இது ஆதி தேற்றாத்தீவு மக்கள் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்தக் குடியிருப்பு கிராமம் ஒரு தீவு போன்று காட்சியளிக்கிறது. கிராமத்தைச் சுற்றி முற்று முழுதாக வயல் வெளிகளும், சிறுபற்றைக் காடுகளும், குளங்களும் நிறைந்து ஒரு அழகான கிராமமாகத் திகழ்கிறது.

இக்கிராமம் ஒரு பழம்பெரும் கிராமம் என்பதற்கு சாட்சியாக, அங்கு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஆதி வீரபத்திரர் ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயம் கிழக்கு மாகாணத்தில் அரிதாகக் காணப்படும் தெய்வீக வழிபாடுகளையும், தமிழர் மரபுகளையும், தனித்துவமான சடங்கு முறைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகக் காணப்படுகிறது. இது தேற்றாத்தீவின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் பறைசாற்றுகிறது.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கிராமத்தில் பாடசாலை வசதிகளோ, சுகாதார வைத்திய வசதிகளோ இல்லை. இதனால், இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் மற்றும் சிவகலை வித்தியாலயம் ஆகியவற்றுக்குக் கால்நடையாகவே சென்று கல்வி கற்கின்றனர். இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், தேற்றாத்தீவின் ஆதிக்குடிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

காலநிலை

இவ்வூரில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் சராசரியாக 32 பாகை செல்சியசு வெப்பநிலையும், நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை அதிக மழை வீழ்ச்சி கொண்டதாக 15 பாகை செல்சியசு வெப்பநிலையும் காணப்படுகிறது. 1400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியையும் இவ்வூர் பெறுகிறது.

மக்கள்

தேற்றாத்தீவுக் கிராமம் இன்றளவில் ஏறத்தாழ 6000 சனத்தொகையைக் கொண்டதாக உள்ளது.[சான்று தேவை] தேற்றாத்தீவின் தெற்கே 'குடியிருப்பு' எனும் சமூகத்தார் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அங்கு குடியேற்றப்பட்டதாக அறிய முடிகின்றது.

பாடசாலைகள்

ஆரம்ப காலத்தில் இங்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை உருவாக்கப்பட்டது. இது 1990 இல் தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. அத்துடன் இங்கு தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயமும், நான்கு பாலர் பாடசாலைகளும் உள்ளன.

இங்குள்ள கோயில்கள்

  • தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்
  • தேற்றாத்தீவு கண்ணகி அம்மன் ஆலயம்
  • தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மாள் ஆலயம்
  • தேற்றாத்தீவு பால முருகன் ஆலயம்
  • தேற்றாத்தீவு ஆதி விரபத்திரர் ஆலயம்
  • தேற்றாத்தீவு நாகதம்மிரான் ஆலயம்
  • தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலம்

உஷாத்துணை

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE

தேற்றா

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya