தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா

தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா
Map

தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம் 1964 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். 1981–82 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் மறுசீரமைப்பினைப் பெற்றது. இது இந்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் நிர்வகிக்கப் படுகிறது. முன்னாள் போர்த்துகீசிய காலனித்துவ தலைநகரான ஓல்ட் கோவாவில் இந்த காட்சிக்கூடம் அமைந்துள்ளது, அந்நகரானது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், இது இப்போது ஏராளமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

அமைவிடம்

இந்த அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம் அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயத்தின் கான்வென்ட் பிரிவில் அமைந்துள்ளது.

காட்சிக்கு உள்ள பொருள்கள்

கோவாவில் போர்த்துகீசிய ஆட்சிக் காலத்தியக் கலைப்பொருள்களை உள்ளடக்கிய காட்சிப்பொருள்கள் இங்கு எட்டு காட்சிக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவா வரலாற்றின் வரலாற்றுக்கு முந்தைய மற்றும் ஆரம்பகால வரலாற்று காலப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்காலத்தின் பிற்பகுதியைச் சார்ந்தனவும் இங்கு உள்ளன. காலனித்துவ கோவாவின் ஆளுநர்கள் மற்றும் வைசிராய்களின் உருவப்படங்களும் இங்கு காட்சிப்படத்தப்பட்டுள்ளன.

இது தவிர இந்த காட்சிக்கூடத்தில், தபால் தலைகள், மரச் சிற்பங்கள், தூண்கள் மற்றும் பிற பொருள்கள் காட்சியில் உள்ளன.[1] காட்சிப்பொருகள் அழகாகத் தெரிவதற்காக செயற்கை மற்றும் இயற்கை விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. போர்த்துகீசிய காவியக் கவிஞர் லூயிஸ் வாஸ் டி காமோஸின் ஆளுயரச் சிலை இங்குள்ளவற்றில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. நடு கற்கள், சதி கற்கள், பாரசீக மற்றும் அரபு கல்வெட்டுகள், போர்த்துகீசிய ஆயுதங்கள் (துப்பாக்கிகள், வாள்கள், குண்டுகள்) போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. பார்வையாளர்கள் ஒளி ஒலி காட்சி மூலமாக இங்குள்ளவற்றைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு நூல் விற்பனைப் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

காட்சிக்கூடங்கள்

பின்வருமாறு அவை காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

முன் மண்டபம்

அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில், கி.பி 1510 இல் பழைய கோவாவை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் ஆளுநர் ஜெனரலாகவும், கடலின் கேப்டனாகவும் இருந்த அபோன்சோ டி அல்புகெர்க்கியின் 3.10 மீட்டர் உயர வெண்கல சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்சிக்கூடம் 1

இது முக்கியமான காட்சிக்கூடமாகும். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் அறிமுகம் இங்கு காணப்படுகிறது. திறந்த நிலையிலான அமைந்துள்ள மரத்தால் அமைந்த நூலில் கோவாவின் வரலாறு உள்ளது. கோவாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை, கோவாவின் சுற்றுப்புறங்களில் வேட்டை சேகரிக்கும் காலகட்டத்தில் வாழ்ந்த ஆரம்பகால மனிதரை (தோராயமாக ஒரு லட்சம் ஆண்டுகள் பிபி) அறிமுகப்படுத்தும் அமைப்பு உள்ளது. தெற்கு கோவா மாவட்டத்தில் சங்கூம் வட்டத்தின் குர்தி என்னுமிடத்தில் இருந்த மகாதேவ் கோயில் இடிந்த நிலையிலிருந்து பின்னர் கட்டமைத்தது வரை காணப்படுகிறது. சலவுலிம் நதியில் கட்டப்படவிருந்த அணையின் காரணமாக அந்தக் கோயில் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு. மாறாக கோயில் இட மாற்றம் செய்யப்பட்டு, உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்டது. பண்டைய நகரமான சந்தோரின் ஒரு கருதுகோள் தள திட்டம், அங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தசாவதாரத் தொகுப்புடன் உள்ள விஷ்ணு (13 ஆம் நூற்றாண்டு), சேதமடைந்த நிலையில் இரண்டு உமா-மகேஸ்வர சிற்பங்கள், மஹிஷாசுரமர்தினி, கஜலட்சுமி, மற்றும் நின்ற நிலையில் சூரியன் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் கடம்ப காலத்தைச் (12 வது -13 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். கடற்படை போர்களைக் குறிக்கும் ஏராளமான நடுகற்கள், சதிக் கற்கள் ஆகியவை உள்ளன. போர்ச்சுகல் நாட்டு தேசியக் கவிஞரான லூயிஸ் வாஸ் டி காமோஸின் (கி.பி. 1524-1580) 3.6 மீட்டர் உயர வெண்கல சிலையும் இங்கு உள்ளது.

காட்சிக்கூடங்கள் 7 மற்றும் 6

முதல் தளத்தில் உள்ள பரந்த காட்சிக்கூடத்தில் போர்த்துகீசிய ஆளுநர்கள் மற்றும் கோவாவின் வைசிராய்கள் ஆகியோரின் பெரிய உருவப்படங்கள் உள்ளன. பனாஜியில் உள்ள பழைய கட்டடத்தில் இருந்த அவை 1962 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டன. இதன் முழுமையான பட்டியலையும் (1505-1961) மர படிக்கட்டுகளுக்கு மேற்கே உள்ள சுவரில் காணலாம். போர்த்துகீசிய நாணயங்கள் மற்றும் பூர்வீக பர்தவ், டாங்கா, ஜெராபின்ஸ், ரூபியா ஆகியவையும் உள்ளன. 7ஆவது காட்சிக்கூடத்தில் பிரமாண்ட உருவப்பட ஓவியங்கள், கிறிஸ்தவ புனிதர்களின் மரச் சிற்பங்கள், ஜேசுட் பாதிரியார்களின் உள்ளிட்ட ஓவியங்கள் உள்ளன. கிழக்கு படிக்கட்டில் இறங்கும்போது, ​​தரைத்தள காட்சிக்கூடத்தில் 5, 4, 3 மற்றும் 2 ஆகிய காட்சிக்கூடங்கள் உள்ளதைக் காணமுடியும்.

காட்சிக்கூடம் 5

கேலரி எண் 5 இல், பீஜப்பூரின் ஆதில்ஷாஹி மன்னர்களின் அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகளும், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் மராத்தியக் கல்வெட்டுகளும் உள்ளன. சுவரில் சென்னையிலுள்ள சாந்தோமிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கல் தூண் உள்ளது.

காட்சிக்கூடம் 4

இங்கு நடுகற்கள் மற்றும் இடைக்காலத்தைச் சேர்ந்த சதி கற்கள் உள்ளன. சமாதியடைதல், தெய்வத்திற்குப் பலியிடல் உள்ளிட்ட பல கற்கள் அங்கு உள்ளன. சில நடுகற்கள் கடல் போரை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

காட்சிக்கூடம் 3

இங்கு பூத ஆராதனையை வெளிப்படுத்தும் மூன்று வேதாள சிற்பங்கள் உள்ளன. இவ்வகையான வழிபாட்டு முறை குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியான மலபாரில் நிலவி வருவதாகும். இங்கு விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, கருடனுடன் விஷ்ணு, கார்த்திகேயனுடன் உமா-மகேஸ்வரர், பிரிங்கி, கால பைரவர், லட்சுமியின் சிற்பங்கள் உள்ளன.

காட்சிக்கூடம் 2

இங்கு கோயில் விமானத்தின் கூறான சிகரத்தின் மாதிரி உள்ளது. இது மண்டோவி நதியில் உள்ள திவார் தீவில் உள்ள அழிந்த நிலையில் இருந்த பழமையான சப்தகோடேஸ்வரர் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். காத்தரினின் ஆளுயரச் சிலையும் இங்கு உள்ளது.

இவற்றையும் காண்க

புகைப்படத்தொகுப்பு

குறிப்புகள்

  1. "Archived copy". Archived from the original on 10 August 2013. Retrieved 9 March 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. THE ARCHAEOLOGICAL MUSEUM OLD GOA, DIST. NORTH GOA

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya