நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.
தோற்றம்
இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.[2]
இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது.[3] 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. ந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது.[4][5][6][7][8][9]
தமிழகத்தின் நிலை
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[10] இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.[11] செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள்[12], இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.[13]. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில்[14] தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.[15]
2017ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனிதா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியற்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.[16]
2018ஆம் ஆண்டில் "நீட்" தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது.[17][18] 2018ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[19][20]
இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
2020ஆம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் +2 முடிய படித்த மாணவர்களுக்கு, அதிமுக தலைமையினான தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.[21][22][23] இதனால் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போதைய (2018 ஆம் ஆண்டு) நடைமுறைப்படி, இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.[26]
2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காரணமாக தாமதமாக நடைபெற்றது.
விமர்சனங்கள்
2017ஆம் ஆண்டில் சுமார் 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பென் மற்றும் 110 மாணவர்கள் பூஜ்ஜியம், எதிர்மறை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.[39][40][41]