நேரடி நடவடிக்கை நாள்![]() நேரடி நடவடிக்கை நாள் (ஆங்கிலம்: Direct Action Day, வங்காள மொழி : প্রত্যক্ষ সংগ্রাম দিবস) என்பது 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தியதி இன்றைய கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும். இதை கொல்கத்தா பெருங்கொலைகள் (Great Calcutta Killings) என்றும் அழைப்பர். இந்நிகழ்வு ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது வங்காள மாகாணத்தில் நடைபெற்றது. இந்நாளானது தி வீக் ஆஃப் லாங் நைவ்ஸ் (The Week of the Long Knives) நிகழ்வின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது.[1][2][3] இந்த நேரடித் தாக்குதலுக்கு முஸ்லீம் லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அக்கட்சியின் கோரிக்கையான முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் எனும் தனி நாட்டைப் பெறும் முகமாக முஸ்லீம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முஸ்லீம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இரு பெரும் கட்சிகளாக இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை இருந்தன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி அதிகாரத்தை ஒப்படைக்கும் வேளையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் காங்கிரஸ் கட்சியால் நிராகரிக்கப்பட்டது. முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முடிவான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாக எடுக்கப்பட்ட நிலைபாட்டை ஆதரித்தார்.[4][5] அவர் முஸ்லீம்களுக்கு தனி நாடு தரவில்லையெனில் அதை தாங்களே போராடிப் பெறுவோம் என்றார்.[6] மேலும் 16 ஆகஸ்டு 1946 ஆம் நாளை முஸ்லீம்களுக்கு தனி நாட்டை வென்றெடுக்கும் நாளாக அறிவித்தார்.[6] காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை பற்றி ஜின்னாவிடம் கேட்டதற்கு அவர், "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவர்களிடம் போய்க் கேளுங்கள். நான் என் கைகளை மடக்கிக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் பிரச்சனையை உண்டு பண்ணப் போகிறேன்" (I also am going to make trouble) என்றார்.[6] காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை எதிர்த்து முஸ்லீம் லீக் ஆகஸ்டு 16 அன்று முழு கடையடைப்பிற்கு அழைப்புவிடுத்தது.[7] மேலும் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் எனவும் வலியுறுத்தியது.[6][8] இது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டிலுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் முஸ்லீம் லீக்கின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.[9] அந்தகாலகட்டத்தில் வங்காளத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வங்காளத்தின் மொத்த மக்கட்தொகையில் 56% இஸ்லாமியர்களாகவும் 42 % இந்துகளாகவும் இருந்தனர். மேலும் முஸ்லீம் லீக் அதிகாரத்தில் இருந்தது இந்த மாகாணத்தில் மட்டுமே. 72 மணிநேரம் நடந்த கலவரத்தில்[4][10] 4,000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,00,000 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.[1][4] இக்கலவரத்தைத் தொடர்ந்து அதன் அருகிலுள்ள பகுதிகளான நவகாளி, பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் கலவரம் நடந்தது. இந்தியப் பிரிவினைக்கு இந்நிகழ்வே முக்கியக் காரணம் ஆகும். இதையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia