பண்டோராவின் பெட்டி![]() பண்டோராவின் பெட்டி (Pandora's box) எசியோடின் வொர்க்சு அண்டு டேசு கதையில் உருவாக்கப்பட்ட கற்பனை ஆளுமை பண்டோராவுடன் தொடர்புடைய கிரேக்கத் தொன்மவியல் கலனாகும்.[1] "பெட்டி" உண்மையில் ஓர் பெரிய சாடி (πίθος பிதோசு) ஆகும்.[2] உலகின் அனைத்து தீயவைகளையும் உள்ளடக்கி மூடப்பட்ட இச் சாடி பண்டோராவிற்கு பரிசாக வழங்கப்பட்டது (Πανδώρα).[3] ஆர்வமிகுதியால் பண்டோரா இந்தப் பெட்டியைத் திறந்தபோது அனைத்து தீயவைகளும் வெளியேறின; நம்பிக்கை மட்டுமே உள்ளிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய நாளில் "பண்டோராவின் பெட்டியைத் திறப்பது" என்ற ஆங்கில மொழிச் சொல்லாடல் ஓர் சிறிய அல்லது களங்கமில்லாத செயலால் மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, மிகுந்த தாக்கமேற்படுத்துகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கதைக்கும் ஆதாம் , ஏவாள் கதையிலுள்ள தடைசெய்யப்பட்ட பழத்திற்குமான ஒற்றுமையை தெர்துல்லியன், ஓரியன், நசியான் கிரகோரி போன்ற துவக்க கால கிறித்தவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.[4] தொன்மவியலில்செவ்வியல் கிரேக்கத் தொன்மவியலில், பண்டாரா உலகின் முதல் பெண்மணி ஆவாள். சியுசு, அவளை உருவாக்க எப்பெசுடசுவைப் பணித்தார். மண்ணையும் நீரையும் கொண்டு எப்பெசுடசு அவளை உருவாக்கினார்.[5] கிரேக்கக் கடவுள்கள் அவளுக்குப் பல பரிசுகளை வழங்கினர்: ஏதெனா ஆடைகளையும், அப்ரோடிட் அழகையும், அப்பல்லோ இசைத்திறனையும், எர்மெசு பேச்சையும் அளித்தனர்.[6] சொர்கத்திலிருந்து புரோமெதசு தீயைத் திருடியபோது சியுசுசு புரோமெதசின் உடன்பிறப்பான எபிமெதசுக்கு பண்டோராவை அளித்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார். திருமணத்தின் போது பண்டோராவிற்கு அழகிய சாடி ஒன்றைப் பரிசளித்து அதனை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். (கடவுளரால் கொடுக்கப்பட்ட) ஆர்வமிகுதியால், பண்டோரா இதனைத் திறந்தாள்; உள்ளே அடக்கப்பட்டிருந்த அனைத்து தீயவைகளும் உடனே வெளியேறி உலகில் பரவின. அவள் உடனடியாக மூட முயன்றும் அதற்குள் அனைத்தும் வெளியேறிவிட்டிருந்தன; சாடியின் அடியில் இருந்த நம்பிக்கையின் கடவுள் எல்பிசு மட்டுமே தங்கியது.[7] மிகுந்த வருத்தமடைந்த பண்டோரா இதனால் சியுசுவின் கோபத்திற்கு உள்ளாவோம் எனப் பயந்தாள்; ஆனால் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த சியுசு அவளுக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை. சாடி பெட்டியானதெப்படி?மூலமொழியில் இது பிதோசு எனப்படுகிறது. பிதோசு வைன் போன்றவற்றைச் சேமிக்கும் ஓர் பெரிய கலனை குறிக்கிறது. இத்தகைய கலன்கள் இறுதிச் சடங்குகளில் சவ அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டன. பண்டோராவிற்கு வழங்கப்பட்ட கலன், களிமண்ணாலோ அல்லது உடைக்க முடியாத சிறையாக இருக்க வெண்கலத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம்.[8] பிதோசு , "பெட்டி" என்று தவறாக மொழிமாற்றம் அடைந்ததற்கு 16வது நூற்றாண்டின் மனிதவியலாளர் இராட்டர்டேமின் எராசுமசு காரணமாக அறியப்படுகிறார். இவர்தான் எசியோட்டின் கதையை இலத்தீனில் மொழிபெயர்த்தவர். எசியோடின் பிதோசு எண்ணெயை அல்லது தானியத்தை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட சாடியாகும். இதனை எராசுமசு இலத்தீனில் பெட்டி என்பதற்கான பைக்சிசு என மொழி பெயர்த்தார்.[9] "பண்டோராவின் பெட்டி" என்ற சொல்லாடல் அன்றிலிருந்து நிலைத்து விட்டது. இந்த தவறுக்கு வலுவூட்டும் விதமாக தாந்தே காப்ரியல் ரோசட்டியின் ஓவியம் பண்டோரா அமைந்தது.[10] காட்சிக்கூடம்
மேற்சான்றுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia