புற்றுநோயெதிர்ப்பியல்புற்றுநோயெதிர்ப்பியல் (Cancer immunology, Immuno-Oncology) என்பது நோயெதிர்ப்பியல் அமைப்பு, புற்றுநோய் உயிரணுக்களிடையே நிகழும் ஊடாடல்களைக் குறித்துப் பயிலும் நோயெதிர்ப்பியல் துறையின் ஒரு பிரிவாகும். வளர்ந்து வரும் இப்பிரிவானது புற்றுநோய்க்குப் புதிய நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகளைக் கண்டறிவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எவ்விதம் புற்று நோய்வாய்ப்பட்ட உயிரணுக்கள் நோயெதிர்ப்பிய அமைப்பைத் தவிர்கின்றன என்பதை அறிவதுதான் புற்றுநோயெதிர்ப்பியலின் அடிப்படையாகும்[1][2]. இத்தகு புற்று நோய்வாய்ப்பட்ட உயிரணுக்களுக்கெதிராக நோயெதிர்ப்பிய வினைகளைத் தூண்டுவதே இத்துறையின் முதன்மையான நோக்கமாகும்[3]. குறிப்பிட்ட புற்றுநோயின் தனித்துவ எதிர்ப்பிகளை அடையாளம் காண்பது, இத்தகு எதிர்ப்பிகளுக்கெதிரான நோயெதிர்ப்பிய வினைகள், ஆகியவைக் குறித்த அறிவு புதிய தடுப்பூசிகள், எதிர்ப்பான்களை உபயோகப்படுத்தும் சிகிச்சை முறைகள், புற்றுக் காட்டிகளை (tumor marker) அடிப்படையாகக் கொண்ட கண்டறியும் சோதனை முறைகள் ஆகியவை வளர்ச்சியடைய பேருதவிப் புரிகின்றது[4][5]. உதாரணமாக, அண்மைய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று, மனிதர்களின் பெருங்குடல் மலக்குடல் ( colorectal) சார்ந்த புற்று நோயில் கழலை ஊடுருவும் உயிரணுக்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றது[6]. புற்றுத் திசுக்களில் கழலை ஊடுருவும் உயிரணுக்களைக் (tumor infiltrating lymphocytes, TIL) கொண்ட நோயாளிகள் உயிர்ப்பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதாகவும், ஓரளவிற்கு கட்டிகளுக்கெதிரான நோயெதிர்ப்புத்திறன் பெருங்குடல் மலக்குடல்-சார் புற்று நோயில் உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. விலங்கு மாதிரிகளில் தானாகத் தோன்றும் (அ) வேதிப்பொருட்களால் தூண்டப்படுகிற கழலைகள் தோன்றுவதற்கும், வளர்ச்சியடைவதற்கும் எதிரானப் பாதுகாப்பு; மனித புற்றுநோயில் நோயெதிர்ப்பு அமைப்பு அடையாளம் காணும் இலக்குகளைக் கண்டறிதல் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளில் புற்றுநோயெதிர்ப்பியக் கண்காணிப்பு (cancer immunosurveillance) குறித்த கருத்தாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் அறிவியல் ஆதாரங்களும், இதைக் குறித்த அறிவு வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனக் கூறலாம்[7]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia