பெனின் வெண்கலச் சிற்பங்கள்![]() பெனின் வெண்கலச் சிற்பங்கள் என்பன, இன்றைய நைசீரியாவில் முன்னர் இருந்த பெனின் இராச்சியத்தின் அரச மாளிகையை அலங்கரிக்கப் பயன்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட நினைவு உலோக வில்லைகளைக் குறிக்கும். இவை அனைத்தும், 13ம் நூற்றாண்டு தொடக்கம் ஏடோ மக்களால் உருவாக்கப்பட்ட மிகவும் அறியப்பட்ட பெனின் கலைப் பொருட்களுள் அடங்கும். வெண்கலத்திலும் பித்தளையிலும் செய்யப்பட்ட பெயர்பெற்ற தலைச் சிற்பங்களும் வேறு சில பொருட்களும் இக்கலைப் பொருட்களுள் அடங்குகின்றன. 1897ல், தெற்கு நைசீரியாவில் பேரரசுவாதக் கட்டுப்பாடு இறுகிய காலத்தில் இடம்பெற்ற தண்டிப்புப் படை நடவடிக்கைகளின்போது பெரும்பாலான வில்லைகள் மாளிகையில் இருந்து அகற்றப்பட்டன.[1] இருநூறு வில்லைகள் இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. மீதியைப் பிற ஐரோப்பிய அருங்காட்சியகங்கள் விலை கொடுத்து வாங்கின.[2] இன்று பெரும் எண்ணிக்கையிலான வில்லைகள் பிரித்தானிய அருங்காட்சியகத்திலும்,[1] குறிப்பிடத்தக்க பிற[ சேகரிப்புக்கள் செருமனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளன.[3] பெனின் வெண்கலச் சிற்பங்கள், ஆப்பிரிக்கப் பண்பாடு, கலை என்பன குறித்து ஐரோப்பாவில் மதிப்பை ஏற்படுத்தின. தொடக்கத்தில், இவ்வாறான உயர்தரமான கலைப்பொருட்களை நாகரிகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று கருதப்பட்ட மக்கள் உருவாக்கினார்கள் என்பதை இதைக் கண்டுபிடித்தவர்களால் நம்பமுடியவில்லை.[4] பெனின் மக்களின் உலோகத் தொழில்நுட்பம், இவர்களுடன் நவீன காலத்தின் தொடக்கத்திலேயே தொடர்பு கொண்டிருந்த போர்த்துக்கேய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும்கூடச் சிலர் முடிவுசெய்தனர்.[4] இன்று இது பெனின் மக்களால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia