பையின் வரலாறு (Life of Pi) என்பது 2012ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளியான ஒரு நாடக-வீரசாகச வகைத் திரைப்படம் ஆகும். இது 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவர் எழுதிய பையின் வரலாறு என்னும் புதினத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[2] இதனை இயக்கியவர் ஆங் லீ (Ang Lee). புதினத்தைத் தழுவி திரை வசனம் எழுதியவர் டேவிட் மாகீ (David Magee).
இத்திரைப்படத்தின் கதையில் 16 வயது நிரம்பிய பிஷீன் மோலிட்டோர் "பை" பட்டேல் என்னும் இளைஞன் தன் குடும்பத்தோடு பயணம் செய்த கப்பல் மூழ்கியபோது, எல்லாரும் இறந்துபோக, பையும் அவனோடு ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் கொண்ட வங்காளப் புலி ஒன்றும் ஓர் உயிர்காப்புப் படகில் தனித்து விடப்பட்ட வரலாறு கூறப்படுகிறது.
கதைச் சுருக்கம்
இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து நாடு பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார் பை பட்டேல். அவரிடத்தில் ஒரு புதின ஆசிரியர் செல்கிறார். தமது குடும்ப நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் தாம் பை பட்டேலை அணுகியதாகவும், பை பட்டேல் தமது வரலாற்றை எடுத்துக் கூறினால் அதை ஒரு சுவையான புதினமாக எடுத்து எழுதலாம் என்றும் கூறுகிறார். அப்போது பை பட்டேல் தனது கதையைப் பின்வருமாறு கூறுகிறார்:
பையின் இளமைப் பருவம்
பை பட்டேல் என்பவருக்கு அவருடைய பெற்றோர் கொடுத்த பெயர் வேடிக்கையானது. பிரான்சு நாட்டில் இருந்த ஒரு நீச்சல் குளத்தின் பெயர் "பிஷீன் மோலிட்டோர்" (Piscine Molitor). அப்பெயரையே பையின் பெற்றோர் அவருக்குக் கொடுத்தார்கள். உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததும், அவனுடன் படிக்கும் மாணவர்கள் அவனை "சிறுநீர் கழிக்கும் பட்டேல்" (Pissing Patel) என்று அழைத்து கேலிசெய்ததால் அவன் தன் பெயரை "பை" பட்டேல் என்று மாற்றிக் கொள்கிறான். கணிதக் குறியீடாகிய "பை" (pi) என்பதில் வரும் எண்ணற்ற இலக்கங்களையும் சொல்லிக்கொள்கிறான்.
பையின் பெற்றோருக்கு பாண்டிச்சேரியில் ஒரு விலங்குக் காட்சியகம் உள்ளது. விலங்குகள் பற்றி பை அதிக ஆர்வம் கொள்கிறான். அங்கிருந்த ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பெயர் கொண்ட வங்காளப் புலி பைக்கு மிகவும் பிடித்தமான விலங்கு. புலி என்றால் பிற விலங்குகளை அடித்துக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணும் என்பதைத் தம் மகனுக்குக் கற்பிக்க, பையின் தந்தை வங்காளப் புலி ஒரு ஆட்டை அடித்துக் கொல்வதைத் தம் மகன் காணும்படி செய்கிறார்.
பை சிறுவனாக இருந்த போது ஒரு இந்துவாக வளர்ந்தான். அவன் உண்டது அசைவ உணவு. ஆனால் தனக்கு பன்னிரண்டு வயது ஆனபோது பை கிறித்தவ சமயத்தைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். பின் இசுலாம் சமயத்திலும் அவனுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. மூன்று சமயங்களையும் பை கடைப்பிடிக்கிறான். வளர்ந்த பிறகு பை தனது மதம் "கத்தோலிக்க-இந்து" என்று கூறுவார். அவர் யூத மதத்தைப் பின்பற்றவில்லையா என்று கேட்டதற்குத் தாம் யூத மத ஆன்மிகமாகிய கபாலா என்னும் நெறியைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பதாக அவர் பதில் கூறுவார்.
இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கடற்பயணம்
பைக்கு 16 வயது நடந்த போது அவனுடைய அப்பா தமது விலங்குக் காட்சியகத்தை மூடிவிட்டு, குடும்பத்தோடு கனடா சென்று அங்கு விலங்குகளை விற்றுவிடத் தீர்மானிக்கிறார். அப்போது தான் பைக்கு காதல் அனுபவமும் ஏற்படுகிறது.
திட்டமிட்டபடி யப்பானியக் கப்பல் ஒன்றில் பயணம் செய்வதற்காக இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அக்கப்பலின் பெயர் த்சிம்த்சிம் (Tsimtsim). ஆழ்கடலில் கப்பல் பெரும்புயலில் சிக்குகிறது. கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கவே, பை கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு, மூழ்குகின்ற கப்பலைப் பார்க்கிறான். புயலின் கொடூரத்தை வியப்புடன் நோக்குகிறான். தன் குடும்பத்தினர் எங்கிருக்கின்றார்கள் என்று அவன் தேடிப்பார்க்கிறான். அப்போது கப்பல் அலுவலர் ஒருவர் பையை ஒரு உயிர்காப்புப் படகினுள் தள்ளுகிறார். அலைமோதும் கடலிலிருந்து கொண்டு, தன் குடும்பமும் கப்பல் அலுவலர்களும் கப்பலோடு நீரில் மூழ்குவதைக் காண்கிறான் பை.
உயிர்காப்புப் படகில் அனுபவங்கள்
புயல் ஓய்ந்ததும் பை ஏறி இருந்த உயிர்காப்புப் படகில் அவனோடு, காயமுற்ற ஒரு வரிக்குதிரையும் கப்பல் மூழ்கியதில் தனது குட்டிகளை இழந்துவிட்ட ஒராங்குட்டான் ஒன்றும் உள்ளதைப் பார்க்கிறான். அப்போது படகின் அடியிலிருந்து ஒரு கழுதைப்புலி மேலே வந்து, வரிக்குதிரையைத் தாக்கிக் கொன்றுபோடுகிறது. அது ஓரங்குட்டானையும் தாக்கிக் காயப்படுத்துகிறது.
அத்தருணம் திடீரென்று படகின் அடிமட்டத்திலிருந்து வங்காளப் புலி மேலே எழுகிறது. அது கழுதைப் புலியை அடித்துக் கொன்று அதை தின்றுவிடுகிறது.
கடலில் பட்டினி
உயிர்காப்புப் படகில் அவசரத் தேவைக்கான உணவும் நீரும் இருப்பதை பை காண்கிறான். ஆனால் ரிச்சர்ட் பார்க்கர் என்னும் வங்காளப் புலி தன்னை அடித்துக் கொன்றுவிடக் கூடாது என்பதால் அவன் கவனமாக இருக்க வேண்டியதாகிறது. புலியோடு தானும் கூட இருந்தால் ஆபத்து என உணர்ந்து பை மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு மிதப்பத்தைக் கட்டுகிறான். அதில் போன பிறகும், புலிக்குத் தேவையான உணவைக் கொடுக்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்பதால், மீன் பிடிக்கத் தொடங்குகிறான். மழைநீரைச் சேகரித்து குடிநீராக வைத்துக்கொள்கிறான்.
ஒருமுறை மீன் வேட்டையாடுவதற்காக புலி கடலில் மூழ்கிவிட்டு மீண்டும் படகில் ஏற முயல்கிறது. அதைப் படகில் ஏற்ற பை ஒரு மர ஏணியைச் செய்கிறான். ஓரிரவில் ஒரு பெரும் திமிங்கிலம் கடலிலிருந்து எழுந்து படகில் இருந்த உணவையெல்லாம் கடலில் விழச்செய்துவிடுகிறது.
பசியின் கொடுமை தாங்காமல் பை பச்சை மீனை உண்கிறான். பல நாள்கள் இவ்வாறு அவதிப்பட்ட பிறகு பை இனிமேலும் தான் சிறிய மிதப்பத்தில் பயணத்தைத் தொடர முடியாது என உணர்கிறான். புலியோடு படகில் போய்ச் சேர்ந்தால் தான் பிழைக்க முடியும் என்றும், புலியிடம் பாசமாக இருந்தால் தான் அதுவும் உயிர்பிழைக்கும் என உணர்ந்து புலிக்குப் பயிற்சி அளிக்கிறான்.
அதிசயத் தீவில் அனுபவம்
பல வாரங்கள் கடலில் மிதந்த பின், பையும் புலியும் வலுக்குன்றியவர்களாய் ஒரு தீவில் கரையிறங்குகிறார்கள். அத்தீவில் வளர்ந்த செடிகள் அவர்களுக்கு உணவாகின்றன. அங்கு அடர்ந்த காடும் உள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கிறது. பையும், புலியும் தெம்பு பெறுகின்றனர்.
தீவில் கீரிவகையைச் சார்ந்த மேர்க்கீட் என்றொரு வகை விலங்குகள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அந்த அதிசய விலங்குகளைக் கண்டு பை வியப்படைகின்றான். ஆனால் இரவிலோ அந்தத் தீவில் ஏதோ மர்மம் நடக்கிறது. பகலில் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்த நீர் இரவில் அமிலம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஒரு பூவின் உள்ளே ஒரு மனிதப் பல் இருப்பதைக் கண்ட பை திடுக்கிடுகின்றான்.
தீவில் உள்ள செடிகள் மாமிசம் தின்னும் வகையைச் சார்ந்தவை என்று உணர்ந்ததும் பையும் புலியும் விரைந்து தீவை விட்டு ஓடுகின்றனர்.
மெக்சிக்கோ சென்றடைதல்
பல நாட்கள் பயணத்திற்குப் பின் பையும் புலியும் பயணம் செய்த உயிர்காப்புப் படகு மெக்சிக்கோ நாட்டுக் கடற்கரையில் தரையிறங்குகிறது. புலி பையை விட்டு அகன்று சென்று ஒரு காட்டுப்பகுதியை அடைகிறது. புலி திரும்பி தன்னை ஒருமுறை பார்க்கும் என்று எதிர்பார்த்த பைக்கு ஏமாற்றம்தான். ஆனால் புலியோ காட்டை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே மரங்களுக்கிடையே சென்றுவிடுகிறது.
புலியைத் தொடர்ந்து செல்ல பைக்கு விருப்பம்தான். ஆனால் பலவீனத்தின் காரணமாக அவன் அப்படியே மணலில் விழுந்து கிடக்கின்றான்.
அப்போது அங்கே வந்தவர்கள் பையைக் கண்டு, அவனை ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள்.
உண்மையான கதை எது?
மருத்துவமனையில் பையை சந்தித்து, விவரங்களை அறிய யப்பான் கப்பலின் காப்பீட்டாளர்கள் வருகின்றனர். அவர்கள் பையை அணுகி, கடற்பயணத்தின் போது உண்மையாகவே என்ன நடந்தது என்று கேட்டு ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பை சொன்ன கதையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். உண்மையைச் சொல்லும்படி அவர்கள் கேட்கவே, பை முதலில் கூறிய கதையை மாற்றி, வேறுவிதமாகச் சொல்கிறார்.
அதாவது, உயிர்காப்புப் படகில் இருந்தது பையின் அம்மாவும், கால்முறிந்த ஒரு கடற்பயணியும், கப்பலில் இருந்த சமையற்காரரும்தான். இக்கதையின்படி, சமையற்காரர் கடற்பயணியைக் கொன்றுவிட்டு அவருடைய இறைச்சியை தானும் உண்டு, மீன்பிடிக்க இரையாகவும் கொள்கிறார். பிறகு நடந்த ஒரு மோதலில், பையின் அம்மாதான் பையை ஒரு உயிர்காப்புப் படகின் உள் தள்ளுகிறார். அப்போது சமையற்காரர் பையின் அம்மாவைக் கத்தியால் குத்திக் கொல்லவே அவரும் கடலில் விழுந்து சுறாக்களுக்கு இரையாகிறார். உடனே பை திரும்பிச் சென்று, சமையற்காரரின் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி, அதைகொண்டு சமையற்காரரைக் குத்திக் கொன்று போடுகின்றான்.
கதையின் முடிவு
பை பட்டேலை கனடா நாட்டில் சென்று சந்தித்து, அவருடைய வரலாற்றை எழுதப் போன புதின எழுத்தாளர் பை சொன்ன இரு கதைகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதைக் கவனிக்கின்றார். முதல் கதையில் வருகின்ற ஒராங்குட்டான் பையின் அம்மா; காயமுற்ற வரிக்குதிரை கால்முறிந்த கடற்பயணி; கழுதைப்புலி சமையற்காரர்; ரிச்சர்ட் பார்க்கர் என்ற வங்காளப் புலி பையே தான்.
தான் கூறிய இரு கதைகளில் எது பிடித்திருக்கிறது என்று பை புதின எழுத்தாளரைக் கேட்கிறார். அவர், புலி வருகின்ற கதையே தமக்குப் பிடித்திருக்கிறது என்கிறார். உடனே பை, "கடவுளுக்கு பிடித்தமானதும் அதுவே" என்று பதில் கூறுகின்றார்.
கப்பலின் காப்பீட்டு அலுவலர்கள் தயாரித்த அறிக்கையை புதின ஆசிரியர் நோக்கும்போது அந்த அறிக்கையின் அடிப்பக்கத்தில் ஒரு குறிப்பு இருப்பதைக் கவனிக்கின்றார். அதில், பை அதிசயமான விதத்தில் கடலில் 227 நாட்களைக் கழித்ததும், ஒரு புலியோடு பயணம் செய்த அதிசயமும் குறிப்பிடப்பட்டிருந்தன. அக்கதை தான் நம்பத்தக்கதா?
பையின் வரலாறு திரைப்படம் பற்றிய சில சுவையான செய்திகள்
பையின் வரலாறு திரைப்படம் ஆங் லீ என்பவரால் இயக்கப்பட்டது. அதற்கு மூலமாக அமைந்த புதினமும் அதே பெயர் கொண்டது. அதை 2001இல் எழுதியவர் யான் மார்த்தெல். திரைக்கதை வசனம் உருவாக்கியவர் டேவிட் மாகீ.
ஆங் லீ இயக்குநராகச் செயல்படுமுன் வேறு பலர் அவ்வேலையில் ஈடுபட்டு அதைக் கைவிட்டனர்.
பாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனத்தின் இயக்குநர் எலிசபெத் காப்லர் என்பவர் அப்பட இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்.[3]
2003, பெப்ரவரி மாதம் பையின் வரலாறு படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். முதலில் அவர் டீன் கெயோர்காரிஸ் என்பவரிடம் திரைக்கதை வசனம் எழுதக் கேட்டார்.
அதே ஆண்டு அக்டோபரில் பாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனம் எம். நைட் ஷியாமளன் படத்தை இயக்குமாறு கேட்டது.
ஷியாமளன் பையின் வரலாற்றை இயக்குவதற்கு இசைவு தெரிவித்ததற்கு ஒரு காரணம், அவரும் பாண்டிச்சேரியைச் சார்ந்தவர்; படத்தின் கதாநாயகன் பை பட்டேலும் பாண்டிச்சேரியில் பிறந்தவர். ஷியாமளன் "தி வில்லேஜ்" என்ற படத்தை முடித்ததும் பையின் வரலாற்றை இயக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஷியாமளன் படத்தின் திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.[4]
இறுதியில், ஷியாமளன் பையின் வரலாற்றை இயக்கவில்லை, மாறாக "லேடி இன் தி வாட்டர்" என்ற படத்தை இயக்கினார்.
பையின் வரலாற்றைக் கைவிட்டது ஏன் என்று கேட்டதற்கு ஷியாமளன் பின்வருமாறு கூறினார்: "பையின் வரலாறு என்ற புதினத்தின் இறுதியில் ஒருவிதமான திரிபு முடிவு உள்ளது. இயக்குநராக என்னுடைய பெயர் இடப்பட்ட உடனேயே படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு வேறுபட்ட அனுபவத்தைப் பெறக் கூடுமே என்று நான் தயங்கினேன்."[5]
2005, மே மாதம் அல்ஃபோன்சோ குவாரோன் என்பவர் இயக்குநராக வருவார் என்று கருதப்பட்டது.[6] அவரும் பட இயக்கத்தை ஏற்கவில்லை.
அதன் பிறகு ஷான் பியேர் ஷோனே என்பவர் இயக்குவதாகக் கூறப்பட்டது. அவரே திரைக்கதை வசனம் எழுதுவதாகவும் இருந்தது. இந்தியாவில் படப்பிடிப்புக்கும் ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் அவரும் இயக்குநராகவில்லை.
இறுதியில், ஆங் லீ படத்தை இயக்குவதாக முடிவாயிற்று. அவரே படத்தை இயக்கி முடிவுக்குக் கொணர்ந்தார்.[7]
திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பு டேவிட் மாகீ என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கிடையில் ஆங் லீ திரைப்படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகனைத் தேடும் படலத்தைத் தொடங்கினார்.
பையின் வரலாறு படத்துக்குக் கதாநாயகனைத் தேர்ந்தெடுக்க 3000 பேர் நேர்காணலுக்குச் சென்றார்கள்.
2010 அக்டோபர் மாதம் இயக்குநர் ஆங் லீ, 17 வயதான சுரஜ் ஷர்மாவைக் கதாநாயகனாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார்.[8]
உடனே சுரஜ் ஷர்மா வீரசாகசம் நிறைந்த படத்தில் நடிக்க தன்னைத் தயார் செய்யத் தொடங்கினார். கடலில் மூழ்கி நெடுநேரம் மூச்சுவிடாமல் இருப்பது, அலைகளை எதிர்த்துப் போராடுவது, புயலில் சிக்கியபிறகும் உயிர்பிழைப்பது போன்ற பல காட்சிகள் படத்தில் வருவதால் அதற்குத் தகுந்த பயிற்சியில் ஈடுபட்டார் சுரஜ். அவர் யோகா பயிற்சியும் மேற்கொண்டார்.[9]
கதாநாயகன் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தபூ தேர்ந்தெடுக்கப்பட்டார். தபூ படத்தில் கீதா பட்டேல் என்னும் பெயரில் வருகிறார்.[10]
முப்பரிமாணக் காட்சி அமைப்புகளும் சிறப்புத் தோற்றக் காட்சிகளும்
படப்பிடிப்புன் முக்கிய கட்டம் சனவரி 18, 2011இல் பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையில் அமைந்த புனித செபமாலை அன்னை கத்தோலிக்க கோவிலில் நடந்தது. பின், இயக்குநர் ஆங் லீயின் தாய்நாடான தாய்வானில் ஐந்தரை மாதங்கள் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.[11]
பை கடலில் புயலில் அகப்பட்டுத் தவிக்கின்ற காட்சியைப் படமாக்க தாய்வானில் கைவிடப்பட்ட ஒரு விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே பிரமாண்டமான ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. அதில் கோரமாக எழுகின்ற அலைகளை உருவாக்கிக் கடலின் தோற்றத்தைக் கொடுத்தனர்.[12]
படத்துக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் குளம் 1.7 மில்லியன் காலன் தண்ணீர் கொள்ளும். இராட்சத அலைகளை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட இக்குளம் உலகிலேயே மிகப்பெரியதாம்.[13]
தாய்வானில் படக்காட்சிகள் எடுத்து முடிந்ததும், மீண்டும் பாண்டிச்சேரியிலும், மூணாறு, மதுரை போன்ற இடங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கனடாவின் மொண்ட்ரியால் நகரில் படப்பிடிப்பு தொடர்ந்தது.[8]
சிறப்புத் தோற்றக் காட்சிகள் (visual effects) உருவாக்கும் பொறுப்பு ரிதம் அன்ட் ஹ்யூஸ் ஸ்டூடியோஸ் என்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள அந்நிறுவனம் முப்பரிமாணத் தோற்றம் (3D) உருவாக்க இந்தியாவின் மும்பை, ஐதராபாத், மற்றும் கோலாலம்பூர், மலேசியா, வான்கூவர், தாய்வான் போன்ற இடங்களில் தொழில்நுட்பக் கலைஞரின் உதவியை நாடியது.[14][15][16]
படத்தில் கடல் காட்சிகளும் புலிக் காட்சியும் தொழில்நுட்ப உணர்வோடு உருவாக்கப்படுவதற்காக ஓராண்டுக்கு மேலாக ஆய்வு நிகழ்ந்ததாம்.[17]
படத்திற்கான இசையமைப்பு
பையின் வரலாறு படத்திற்காக இசையமைத்தவர் மைக்கிள் டான்னா (Mychael Danna) என்பவர். அவரே ஆங் லீயின் முன்னைய படங்கள் சிலவற்றிற்கு இசை அமைத்தவர்.
படத்தில் வருகின்ற தாலாட்டு அமைப்பதில் இந்தியாவின் பாம்பே ஜெயஸ்ரீ துணைபுரிந்தார். அவரே படத்தில் தாலாட்டுப் பாடலைத் தமிழில் பாடியுள்ளார்.[18]
பாராட்டுகளும் பரிசுகளும்
பையின் வரலாறு படம் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.
படத்திற்கு அடிப்படையாக அமைந்த புதினத்தை எழுதிய யான் மார்ட்டேல், "படம் இவ்வளவு அழகாக உள்ளது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார். கதையை எப்பொருளில் புரிந்துகொள்வது என்பதை நூலின் இறுதியில் வேண்டுமென்றே தெளிவில்லாமல் தாம் விட்டதாகவும், படத்தில் அந்த அளவுக்குத் தெளிவின்மை தோன்றாவிட்டாலும், கதையின் புதிர் அழகாக வெளிப்படுகிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலாத் துறை பரிசு அளித்து இப்படத்தைச் சிறப்பித்துள்ளது.