போர்த்துகல் தேசிய காற்பந்து அணி
போர்த்துக்கல் தேசிய கால்பந்து அணி (Portugal national football team, Portuguese: Selecção Nacional de Futebol de Portugal) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் போர்த்துகல் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை போர்த்துக்கல்லில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கின்றது. இதன் தன்னக விளையாட்டரங்கமாக எசுடேடியோ நேசியோனல் விளங்குகிறது. தலைமைப் பயிற்றுனராக பவுலோ பென்ட்டோ உள்ளார். தங்களது முதல் (1966) உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறினர்; இங்கிலாந்தின் வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் அந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்துத் தேசிய கால்பந்து அணியிடம் 2–1 என்ற கோல் கணக்கில் தோற்றனர். அடுத்து இரண்டு முறை, 1986 மற்றும் 2002 ஆண்டுகளில், உலகக்கோப்பையில் பங்கேற்றாலும் இருமுறையும் முதல் சுற்றிலேயே தோற்றனர். 1986ஆம் ஆண்டு போட்டிகளின்போது காற்பந்து விளையாட்டாளர்கள் பரிசுப் பணம் குறித்து முதலாம் ஆட்டத்திற்கும் இரண்டாம் ஆட்டத்திற்கும் இடையே பயிற்சி கொள்வதை நிறுத்தி பணிநிறுத்தம் மேற்கொண்டனர். 2003இல் போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு பிரேசில் 2002இல் உலகக்கோப்பை வெல்லக் காரணமாய் அமைந்த முன்னாள் பிரேசிலிய தலைமைப் பயிற்றுனர் லூயி பெலிப் இசுகோலரியை தங்கள் அணிக்கு பயிற்றுனராக நியமித்தது. இவரது பயிற்சியின் கீழ் யூரோ 2004 இறுதியாட்டத்திற்கு முன்னேறியது; இறுதி ஆட்டத்தில் கிரீசு தேசிய கால்பந்து அணியிடம் தோற்றது. 2006 உலகக்கோப்பையில் இரண்டாம் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 2008ஆம் ஆண்டு யூரோ போட்டிகளுக்குப் பிறகு இசுகோலரி விலகினார்; புதிய பயிற்றுனராக கார்லோசு குயிரோசு பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் போர்த்துகல் 2010 உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது; அங்கு அவ்வாண்டு உலகக்கோப்பை வாகையாளர்களான எசுப்பானியாவிடம் தோற்றது. அணியின் மோசமான ஆட்டங்களினால் குயிரோசு நீக்கப்பட்டார். தற்போது பவுலோ பென்ட்டோ பயிற்றுனராக உள்ளார். இவரது வழிகாட்டுதலில் யூரோ 2012இல் அரையிறுதிக்கு முன்னேறியது. போர்த்துகல்லின் அணியில் சிறப்பான பல காற்பந்தாட்ட வீரர்கள் இருந்துள்ளனர்: பெர்னாண்டோ பெய்ரோட்டோ, யோசு அக்குவாசு, மாரியோ கொலுனா, எய்சேபியோ, அம்பர்ட்டோ கொயில்ஹோ, பவலோ ஃபூட்ரெ, ரிக்கார்தோ கார்வால்ஹோ, லூயி ஃபிகோ, வைடர் பைய்யா, பவுலேட்டா, ரிக்கார்தோ காரெசுமா, நுனோ கோமெசு, ரூயி கோஸ்ட்டா, டெக்கொ, நானி, ஜோவோ மியூடின்ஹோ, ஹெல்தர் போசுடிகா, மிகுவில் வெலோசோ, ரவுல் மீரெலெசு, கிறிஸ்டியானோ ரொனால்டோ. இத்தகைய அருமையான விளையாட்டாளர்கள் இருந்தபோதும் போர்த்துக்கல் இன்னமும் எந்த முதன்மையான கோப்பையையும் வெல்லவில்லை. பலமுறை வெற்றியை நெருங்கி கோட்டை விட்டுள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia