மனு பாக்கர்(Manu Bhaker) துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று விளையாடும் இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1] இதே ஒலிம்பிக் போட்டிகளில் இவர் சரப்சோத் சிங்குடன் இணை சேர்ந்து கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இதுநாள் வரையான காலத்தில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவராகிறார்.[2] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற சிறப்பை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மனுவுக்கு வயது 16 ஆக [3][4] இருந்தபோது இவர் கலந்துகொண்ட முதல் காமன்வெல்த் போட்டி இதுவாகும்.
2020 ஆம் ஆண்டு மனுபாக்கருக்கு அர்ச்சுனா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
அரியானாவின் சச்சார் மாவட்டத்திலுள்ள கோரியா கிராமத்தில் மனு பாக்கர் பிறந்தார்.[5] இவரது தந்தை ராம் கிசன் பாக்கர் வணிக கடற்படையில் தலைமை பொறியாளராக பணியாற்றுகிறார்.[5] 14 வயது வரை பேக்கர் ஊயென் லாங்லான் என்ற மணிப்பூரி தற்காப்புக் கலை, குத்துச்சண்டை, வலைப்பந்தாட்டம், பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவ்வகைப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் வென்றார்.[5]
தொழில் முறை சாதனைகள்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சாம்பியன் பட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பன்னாட்டு அளவு போட்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். இதே ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசியப் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்றார்.[6] இறுதிப் போட்டியில் உலக கோப்பை வெற்றியாளர் ஈனா சித்துவின் 240.8 புள்ளிகள் சாதனையை முறியடித்து மனு 242.3 புள்ளிகள் ஈட்டினார்.[5]
மெக்சிகோ நாட்டின் குவாடலயாராவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டியில் மனு மகளிர் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார், இரண்டு முறை சாம்பியனான மெக்சிகோவின் அலெயாண்ட்ரா சவலாவை இப்போட்டியில் தோற்கடித்தார்.[7] 237.1 புள்ளிகள் எடுத்த சவலாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மனு பாக்கர் 237.5 புள்ளிகள் எடுத்தார். 16 வயதில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இளைய இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார்.[8][9]
10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி கலப்பு அணி உலகக் கோப்பைப் போட்டியில் மனு தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். சக நாட்டு வீரர் ஓம் பிரகாசு மிதர்வாலுடன் அணி சேர்ந்து போட்டியிட்டு 476.1 புள்ளிகள் பெற்று இவர்கள் சாண்ட்ரா ரீட்சு மற்றும் கிறிசுட்டியன் ரீட்சு அணியை வீழ்த்தினர்.[10][11][12][13]
2018 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மனு பாக்கர் மகளிர் 10 மீ காற்றழுத்த துப்பாக்கி தகுதி சுற்றில் 388/400 புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில் 240.9 புள்ளிகளுடன் புதிய பொதுநலவாய விளையாட்டு சாதனையை படைத்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.[14][15][16]
2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 25 மீ காற்றழுத்த துப்பாக்கிப் போட்டியின் தகுதிச் சுற்றில் 593 புள்ளிகள் எடுத்து இறுதிப் போட்டியில் 6 ஆவது இடத்தைப் பிடித்தார்.
2019 பிப்ரவரி மாதம் தில்லியில் நடந்த பன்னாட்ட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டியில் 10 மீ காற்றழுத்த கலப்பு அணி போட்டியில் மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார்.[17][18]
2020 ஆம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு மனு பாக்கர் தகுதி பெற்றார்.