2024 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2024 Summer Olympics, French: Jeux olympiques d'été de 2024), அதிகாரபூர்வமாக XXXIII ஒலிம்பியாதுப் போட்டிகள் (Games of the XXXIII Olympiad), பொதுவாக பாரிசு 2024 (Paris 2024), என்பது பிரான்சில் 2024 சூலை 26 முதல் ஆகத்து 11 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பிரான்சின் தலைநகர் பாரிசு இப்போட்டிகளை நடத்திய நகரமாகும். இத்துடன் பிரான்சின் 16 ஏனைய நகரங்களிலும், பிரெஞ்சு பொலினீசியாவின்தாகித்தி தீவிலும் போட்டிகள் நடைபெற்றன.[5]
2017 செப்டம்பர் 13 அன்று பெரு, லிமா நகரில் நடந்த 131-ஆவது பன்னாட்டு ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வில் பாரிசுக்கு விளையாட்டுப் போட்டிகள் வழங்கப்பட்டது. பாரிசு, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்கள் மட்டும் போட்டியிட்ட பிறகு, ஐஓசி 2024, 2028 ஆகிய போட்டிகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது. முன்பு 1900, 1924 போட்டிகள் நடத்தப்பட்டதால், இலண்டனுக்குப் பிறகு (1908, 1948, 2012) கோடைகால ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்தும் இரண்டாவது நகரமாக பாரிசு மாறும். பாரிசு 2024, பாரிசின் நூற்றாண்டு விழாவையும் குறிக்கும், அத்துடன் இந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சால் நடத்தப்படும் ஆறாவது (கோடையில் மூன்று, குளிர்காலத்தில் மூன்று) ஆகும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தோக்கியோவில் 2020 கோடைகாலப் போட்டிகள் 2021-இற்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கோடைக்கால விளையாட்டுகள் அதன் பாரம்பரிய நான்கு ஆண்டு ஒலிம்பியாடு சுழற்சிக்குத் திரும்பும்.
பாரிசு 2024 இல் முறிப்பு நடனம் அறிமுகமானது.[6] ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் தலைமையில் நடைபெறும் இறுதி ஒலிம்பிக் போட்டிகளாக இருந்தது.[7] ஒரே எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் பங்கேற்கும் முதலாவது விளையாட்டுப் போட்டியாக இது அமைந்தது. விளையாட்டுகளுக்கு 8.3 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.[8]
ஏற்று நடத்த ஏலம்
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2015 செப்டம்பர் 16இல் போட்டியிடும் ஐந்து நகரங்களின் பட்டியலை அறிவித்தது, இதில் ஹம்பர்க் நகரம் 2015 நவம்பரில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[9]
புடாபெஸ்ட் 1916, 1920, 1936, 1944, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தும் தோற்றுப் போனது.[10] சூலை 2015 இல் அங்கேரிய நாடாளுமன்றம் 2024 போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவாகத் தீர்மானித்தது. 2016 சனவரி 28 இல் புடாபெஸ்ட் நகரசபை அரங்குகளுக்கு ஒப்புதல் அளித்தது.
பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன, பின்னர் 2024ஆம் ஆண்டிற்கான போட்டியில் இருந்து விலகி ஹம்பர்க் நகரை செருமானிய ஒலிம்பிக் சம்மேளனம் போட்டிக்கான தேர்வு செய்தது.[17]