மு. சங்கரன்

மு. சங்கரன்
பிறப்பு8 ஆகத்து 1964 (1964-Aug-08) (அகவை 60)
எண்கண், திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிவான்வெளிப் பொறியியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது வரை
பணியகம்யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்)

மு. சங்கரன் (M Sankaran) என்பவர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஒரு அறிவியலாளர் ஆவார். இவர் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநராக தற்பொழுது பணியாற்றி வருகின்றார். சூலை 14, 2023-ல் சதீஸ் தவான் விண்வெளி மையத்தினால் ஏவப்பட்டு வெற்றிபெற்ற சந்திரயான்-3 திட்ட வாகையாளர்களுள் ஒருவர் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்

சங்கரன் ஆகத்து 8, 1964ஆம் நாள் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் எண்கண்ணில் பிறந்தார். இவரது தந்தை முத்துசாமி. தாயார் மைதிலி. தந்தை இந்திய இரயில்வேயில் பணியாற்றியதால் சங்கரன், தனது பள்ளிக் கல்வியினை, தமிழ்நாட்டில் விருத்தாச்சலம், விழுப்புரம், தஞ்சாவூர் என பல பள்ளிகளில் பயின்றுள்ளார். தனது கல்லூரி கல்வியில் இளநிலை இயற்பியல் கல்வியினை திருச்சிராப்பள்ளி, தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் (முன்னர் பெரியார். இ. வெ. ரா. கல்லூரி), முதுநிலை அறிவியல் கல்வியினை தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் 1985-ல் முடித்தார். சங்கரன் செயற்கோளினை வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வானிலை ஆய்வு மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த தளங்களில் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார்.[2]

ஆய்வுப் பணி

சங்கரன் தனது முதுஅறிவியல் கல்வியினை முடித்தப்பின்னர், 1986-ல் முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் என்று அழைக்கப்பட்ட யு. ஆர். ராவ் செயற்கோள் மையத்தில் பணியில் சேர்ந்தார். சங்கரன் இம்மையத்தில் தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் அமைப்பிற்கான பகுதியின் துணை இயக்குநராகப் பணியாற்றி பல்வேறு ஆய்வுத் திட்டங்களின் தலைவராகச் செயல்பட்டார். இவர் தனது 35 வருட அனுபவத்தில், சூரிய வரிசைகள், ஆற்றல் அமைப்புகள், செயற்கைக்கோள் நிலைப்படுத்தல், அடிப்படை புவிச் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள், புவிநிலை செயற்கைக்கோள்கள், ஊடுருவல் செயற்கைக்கோள்கள் மற்றும் வெளி விண்வெளி பயணங்களுக்கான கதிரியக்க அதிர்வலைத் தகவல் தொடர்பு அமைப்புகளில் முதன்மையாகப் பங்களித்துள்ளார். சந்திரயான், செவ்வாய் சுற்றுகலன் திட்டம் அல்லது மங்கள்யான் மற்றும் பிற திட்டங்களிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் ககன்யான் திட்டத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சங்கரன் சூன் 01, 2021 அன்று இஸ்ரோவின் அனைத்து செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உணர்தல் ஆகியவற்றுக்கான நாட்டின் முன்னணி மையமான யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலைநிலை உணர்தல், வானிலை ஆய்வு மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வு போன்ற துறைகளில் தேசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைச் செயல்படுத்தும் திட்டங்களை இவர் தற்போது வழிநடத்திச் செல்கிறார்.

விருதுகள்

2017ஆம் ஆண்டிற்கான இஸ்ரோவின் செயல்திறன் சிறப்பு விருதும் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இஸ்ரோ சிறப்புக் குழு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சந்திராயன் 3 வெற்றியினைத் தொடர்ந்து மிளிரும் தமிழகம் திட்டத்தின் கீழ் பெருமைப்படுத்தப்பட்ட 9 இஸ்ரோ அறிவியலாளர்களில் இவரும் ஒருவர். இவருக்குத் தமிழக அரசு ரூபாய் 25 இலட்சம் பரிசினை வழங்கி கவுரவித்தது.[3] ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் வெளியிட்டும் பன்னாட்டு மாநாடுகளில் வழங்கியும் உள்ளார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya