மொழியியல் மானிடவியல்மொழியியல் மானிடவியல் (Linguistic anthropology) என்பது, எவ்வாறு மொழி சமூக வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை அறிய விழையும் பல்துறை ஆய்வுத்துறை ஆகும். அழியும் நிலையில் உள்ள மொழிகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் இருந்து தோற்றம்பெற்ற இத்துறை மானிடவியலின் ஒரு பிரிவு ஆகும். இது கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, மொழியமைப்பு, பயன்பாடு ஆகியவை தொடர்பான பெரும்பாலான அம்சங்களை உள்ளடக்கியதாக வளர்ச்சியடைந்துள்ளது.[1] மொழியானது எவ்வாறு தொடர்பாடலை வடிவமைக்கிறது, எவ்வாறு சமூக அடையாளத்தையும் குழு உறுப்புத்தன்மையையும் உருவாக்குகிறது, எவ்வாறு பெரும்படியான பண்பாட்டு நம்பிக்கைகளையும் கருத்தியல்களையும் ஒழுங்குபடுத்துகிறது, எவ்வாறு இயற்கை மற்றும் சமூக உலகில் பொதுவான பண்பாட்டு வெளிப்பாடுகளை வளர்த்தெடுக்கிறது போன்ற விடயங்களை மொழியியல் மானிடவியல் ஆய்வு செய்கிறது.[2] வரலாற்று வளர்ச்சிஅலெசாந்திரோ துராந்தி குறிப்பிட்டபடி, இந்தத் துணைத்துறை தொடர்பில் மூன்று கருத்தாக்கங்கள் உருவாயின. முதலாவது "மானிடவியல் மொழியியல்" எனப்பட்டது. இது மொழிகளை ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இரண்டாவது, "மொழியியல் மானிடவியல்" இது மொழிப் பயன்பாடு தொடர்பிலான கோட்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டது. கடந்த மூன்று அல்லது நான்கு பத்தாண்டுகளில் வளர்ச்சிபெற்ற மூன்றாவது பிரிவு, மொழியியல் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி மானிடவியலின் பிற துணைத்துறைகள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்தது. இவை ஒன்றன்பின் ஒன்றாக உருவானபோதும், மூன்று கருத்தாக்கங்களுமே இன்றும் பயன்பாட்டில் உள்ளன.[3] ஆர்வப் பரப்புதற்கால மொழியியல் மானிடவியல், மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கருத்தாக்கங்கள் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக அடையாளங்கள்; பரவலாகப் பகிரப்படும் கருத்தியல்கள்; தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பாடல்களில் பயன்படும் உரையாடல்களின் அமைப்பும் பயன்பாடும் போன்றவை இதற்குள் அடங்கும். மானிடவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்தல் ஆகிய மூன்றாவது கருத்தாக்கத்துடன் தொடர்புடைய பல விடயப்பரப்புக்கள் தற்கால மொழியியல் மானிடவியல் ஆய்வுகளுக்கான வாய்ப்புக்கள் செறிந்த பகுதியாகும். அடையாளம்மொழியியல் மானிடவியலில் இடம்பெறும் பெருமளவு வேலைகள், சமூகபண்பாட்டு அடையாளங்கள் தொடர்பில், மொழியியல் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளாக உள்ளன. மொழியியல் மானிடவியலாளரான டொன் குலிக் என்பவர் அடையாளம் தொடர்பில் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக, பல்வேறு பின்னணிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் முதலாவதான பப்புவா நியூகினியாவிலுள்ள கப்புன் என்னும் ஊரில் செய்யப்பட்ட ஆய்வைக் கொள்ளலாம்.[4] கப்புன் ஊரில் புழக்கத்தில் உள்ள இரண்டு மொழிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவ்வூர்ச் சிறுவர்கள் தொடர்பில் ஆய்வு செய்தார். மேற்குறித்த இரண்டு மொழிகளுள் ஒன்று அவ்வூரில் மட்டும் பேசப்படுவதும், அதனால், கப்புன் மக்களின் அடையாளத்தைச் சுட்டுவதுமான மரபுவழி மொழியான தையாப் மொழி, மற்றது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியான தொக் பிசின் மொழி. தையாப் மொழியைப் பேசுவது உள்ளூர்த்தன்மையைக் காட்டுவது மட்டுமல்லாமல், "பிற்பட்ட" தன்மையையும், அதேவேளை தனிப்பட்ட சுதந்திரத்தை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்ட ஒரு அடையாளத்தையும் காட்டுகிறது. தொக் பிசின் மொழியைப் பேசுவது, நவீனமான, கிறித்தவ (கத்தோலிக்கம்) அடையாளத்தைக் கொடுக்கிறது. இவ்வடையாளம் தனிப்பட்ட சுதந்திரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மன உறுதியுடனும் ஒத்துழைப்புக்கான திறமையுடனும் தொடர்புள்ள அடையாளமாக உள்ளது. சமூகமயமாக்கம்தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொழியியல் மானிடவியலாளர்களான எலினர் ஓக்சும், பாம்பி சியெஃபெலினும் மானிடவியல் விடயமான சமூகமயமாக்கம் பற்றி, மொழியியல் முறைகளையும், பிற இனவரைவியல் முறைகளையும் பயன்படுத்தி ஆராய்ந்தனர். சமூகமயமாக்கம் என்பது, குழந்தைகளும், சிறுவர்களும், அந்நியரும் சமூகத்தின் உறுப்பினராவதற்கும், அச்சமூகத்தின் பண்பாட்டில் பங்குபெறுவதற்குக் கற்றுக்கொள்வதற்குமான வழிமுறையாகும். பண்பாட்டுமயமாக்கமும், சமூகமயமாக்கமும், மொழியைப் பழகும் வழிமுறைக்குப் புறம்பாக இடம்பெறுவதில்லை என அவர்கள் கண்டுபிடித்தனர். சிறுவர்கள் மொழியையும், பண்பாட்டையும் ஒரு ஒருங்கிணைந்த வழிமுறையூடாகவே கற்றுக்கொள்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia