யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு (UEFA Europa League) /juːˈeɪfə jʊˈroʊpə ˈliːɡ/, பழைய பெயர் யூஈஎஃப்ஏ கோப்பை (UEFA Cup) /juːˈeɪfə ˈkʌp/, ஆனது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஆண்டுக்கொருமுறை, தகுதிபெறும் கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்பெறும் போட்டியாகும். இது 1971-இல் தொடங்கப்பட்டது. யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு அடுத்தபடியாக இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கால்பந்து கழகங்கள் அவற்றின் நாடுகளில் கூட்டிணைவு மற்றும் உள்நாட்டுக் கோப்பைகளில் செயல்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போட்டிக்குத் தகுதிபெறும். முன்னதாக யூஈஎஃப்ஏ கோப்பை என்று அறியப்பட்ட இது 2009-10 பருவத்திலிருந்து போட்டியின் அமைப்பு முறை மாற்றப்பட்ட பிறகு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று அழைக்கப்படுகிறது.[2][3] ஐரோப்பிய கால்பந்து கட்டுப்பாட்டமைப்பின் ஆவணப்படுத்தல் காரணங்களுக்காக, யூஈஎஃப்ஏ கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகிய இரண்டுமே ஒன்றாகவே கருதப்படுகின்றன. வழக்கத்தில் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.[4] 1999-ஆம் ஆண்டு யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை, யூஈஎஃப்ஏ கோப்பையுடன் ஒன்றுசேர்க்கப்பட்டது.[5] 2004-05 பருவத்தில் தோற்றால் வெளியே சுற்றுக்கு முன்னர் குழு நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. 2009-இல் பெயர் மாற்றத்தோடு கூடவே, யூஈஎஃப்ஏ இன்டர்டோடோ கோப்பையும் இணைக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை உயர்ந்ததோடு போட்டியின் அமைப்புமுறையும் மாற வழிவகுத்தது. யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வாகையாளர்கள் யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை ஆட தகுதிபெறுவார்கள். இதுவரை 26 வெவ்வேறு கால்பந்து கழகங்கள் இதனை வென்றுள்ளன, அவற்றுள் 12 கழகங்கள் இதனை ஒருமுறைக்குமேல் வென்றுள்ளன. இப்போட்டியில் அதிகமுறை வென்றவர்கள் யுவென்டசு, இன்டர்நேசனல் மற்றும் லிவர்பூல் ஆகியவையாகும். அவையாவும் தலா 3 முறை இப்போட்டியை வென்றுள்ளன.[6] உசாத்துணைகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia