யூனியன் கார்பைட்
![]() யூனியன் கார்பைடு நிறுவனம் (Union Carbide Corporation) (2001 இலிருந்து) டொவ் கெமிக்கல் கம்பனிக்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இது தற்போது 2,400க்கும் கூடுதலான பணியாளர்களைக் கொண்டுள்ளது.[2] யூனியன் கார்பைடு வேதிப் பொருட்களையும் பல்லுறுப்பிகளையும் தயாரிக்கின்றது; இவை மற்ற தொழிற் முனைவோரால் மேலும் மாற்றப்பட்டு நுகர்வோரை அடைகின்றன. சில தயாரிப்புப் பொருள்கள் கூடிய அளவில் தயாரிக்கப்படுகின்றன; வேறு சில சிறு சந்தைகளின் தேவைகளை சந்திக்கும் குறிப்பிட்ட பொருள்களாகும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பொருட்கள் வண்ணப்பூச்சு தயாரிப்பு, பொதியாக்கல், கம்பி,வடத் தொழில், வீட்டு நுகர்வுப் பொருட்கள், தனிநபர் பேணல், மருந்துகள், தானுந்துகள், துணித் தயாரிப்பு, வேளாண்மை, எண்ணெய் மற்றும் வளித் துறைகளில் பயனாகின்றன. இந்நிறுவனம டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் அங்கமாக இருந்தது.[3] 1917இல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை எரிவளி நீர்மங்களான எத்தேன், புரொப்பேன் போன்றவற்றிலிருந்து விலை குறைந்த முறையில் எத்திலீன் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தனர். இதுவே தற்கால, பெட்ரோலிய வேதிகள் தொழிலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. விற்பதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தின் அங்கமாக எவரெடி மின்கல நிறுவனமும் கிளாடு பைகள் நிறுவனமும் இருந்தன; சிமோனிசு தானுந்து மெழுகு, பிரெசுடோன் உறைதல் தடுப்பி போன்ற பொருட்களையும் தயாரித்து வந்தது. பெப்ரவரி 6, 2001இல் டொவ் கெமிக்கல் கம்பனியால் கையகப்படுத்துவதற்கு முன்னதாக இவற்றையும் மின்னியல் வேதிப் பொருட்கள், பாலியூரிதின் இடைப்பொருட்கள், தொழிலக வளிகள், கரிமப் பொருட்கள் தயாரிப்பையும் விற்று விட்டது.[4] மேலும் காண்கமேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia