யூரிமெடோன் சமர்
யூரிமெடான் சமர் (Battle of the Eurymedon) என்பது ஏதென்சின் டெலியன் கூட்டணியைச் சேர்ந்த கிரேக்க நகர அரசுகள் மற்றும் பாரசீகப் பேரரசான முதலாம் செர்கசுக்கு இடையே நீர் மற்றும் நிலத்தில் நடந்த இரட்டைப் போராகும். இது கிமு 469 அல்லது 466 இல், சின்ன ஆசியாவின் பம்ஃபிலியாவில் உள்ள யூரிமெடன் ஆற்றின் (இப்போது கோப்ரூகி ) முகத்துவாரத்தில் நடந்தது. இது டெலியன் கூட்டணியின் போர்களின் ஒரு பகுதியாகும். மேலும் இது கிரேக்க-பாரசீகப் பெரும் போர்களின் ஒரு பகுதியாகும். கிரேக்கத்தின் மீதான முதல் மற்றும் இரண்டாவது பாரசீக படையெடுப்புகளில் (முறையே கி.மு. 492 – 490 மற்றும் 480 – 479 ) கிரேக்க கூட்டணி வெற்றிபெற்றது. தங்கள் மீது போர் தொடுத்த பாரசீகத்துடனான போரைத் தொடர ஏதென்ஸ் மற்றும் ஏஜியன் தீவுகளின் பல நகர அரசுகளுக்கு இடையே டெலியன் கூட்டணி உருவாக்கப்பட்டது. இரண்டாவது படையெடுப்புக்கு முடிவுரை எழுதிய பிளாட்டீயா மற்றும் மைக்கேல் போர்களுக்குப் பிறகு, கிரேக்க நட்பு நாடுகள் செஸ்டோஸ் மற்றும் பைசான்டியம் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதலை மேற்கொண்டன. போருக்கான பொறுப்பை பின்னர் டெலியன் கூட்டணி ஏற்றுக்கொண்டது. மேலும் அடுத்த தசாப்தத்தில் ஏஜியன் தீவுகளில் இருந்த பாரசீகத்தின் தளங்களைத் தொடர்ந்து தாக்கப்பட்டன. கிமு 469 அல்லது 466 இல், பாரசீகர்கள் கிரேக்கர்களுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதலுக்காக பெருமளவில் இராணுவத்தையும் கடற்படையையும் திரட்டத் தொடங்கினர். யூரிமெடனுக்கு அருகில் ஒன்று கூடி, ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றி, சின்ன ஆசியாவின் கடற்கரையை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இது ஆசிய கிரேக்கப் பகுதிகளை மீண்டும் பாரசீகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறினால் ஏஜியன் கடலில் கிரேக்கர்கள் மீதான கடற்போர் பயணங்களைத் தொடங்குவதற்கு கடற்படைத் தளங்களை பாரசீகர்களுக்கு மீண்டும் உருவாக ஏதுவாகும். பாரசீகத்தின் இந்த ஏற்பாடுகளைக் கேள்விப்பட்ட ஏதெனியன் தளபதி சிமோன் 200 கப்பல்களை எடுத்துக்கொண்டு பம்ஃபிலியாவில் உள்ள ஃபாசெலிசுக்கு வந்தடைந்தார். அந்த நகர அரசு இறுதியில் டெலியன் கூட்டணியில் இணைய ஒப்புக்கொண்டது. இதனால் பாரசீக போர் திட்டத்தின் முதல் நோக்கத்தை திறம்பட தடுக்கப்பது. சிமோன் பின்னர் யூரிமெடான் அருகே பாரசீகப் படைகளை முன்கூட்டியே தாக்குவதற்காக நகர்ந்தார். ஆற்றின் முகத்துவாரத்தில் பயணம் செய்த சிமோன், அங்கு கூடியிருந்த பாரசீக கடற்படையை விரைவாக விரட்டினார். பாரசீக கடற்படையின் பெரும்பகுதி கரையொதுங்கியது. மேலும் மாலுமிகள் பாரசீக இராணுவத்தின் தங்குமிடத்திற்கு தப்பி ஓடினர். பின்னர் சிமோன் கிரேக்க கடற்படையை தரையிறக்கி பாரசீக இராணுவத்தைத் தாக்கி, அப்படைகளை முறியடித்தார். கிரேக்கர்கள் பாரசீக முகாமைக் கைப்பற்றி, பலரை கைதிகளாக்கி அழைத்துச் சென்றனர். மேலும் 200 பாரசீக போர்க் கப்பல்களை அழித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் இரட்டைத் தோல்வியானது பாரசீகர்களை பெரிதும் மனச்சோர்வடையச் செய்ததாகத் தெரிகிறது. மேலும் குறைந்தது கிமு 451 வரை ஏஜியன் கடலில் பாரசீக போர் தொடர்களை இந்நிகழ்வு தடுத்தது. குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia