யோகான் கோட்லீப் கான்
யோகான் கோட்லீப் கான் (Johan Gottlieb Gahn, 19 ஆகத்து 1745 – 8 திசம்பர் 1818) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் உலோகவியல் வல்லுநர் ஆவார். இவர் 1774 ஆம் ஆண்டில் மாங்கனீசு தனிமத்தைக் கண்டுபிடித்தார்.[1] 1762 முதல் 1770 வரையிலான காலத்தில் கான் உப்சாலாவில் கல்வி கற்றார்.[2] அங்கு, தோர்பெர்ன் பெர்க்மான் மற்றும் காரல் வில்லெம் சீலெ முதலான வேதியியலாளர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. 1770 இல் இவர் சுவீடனிலுள்ள பாலன் நகருக்கு குடியேறினார். இவ்வூரில், தாமிரம் உருக்குதலை மேம்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார். துத்தம், கந்தகம் மற்றும் அடர்சிவப்பு சாயம் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உருவாக்குவதில் இவர் பங்கேற்றார். சுவீடனின் அரசுத்துறை கனிம வாரியத்தில் வேதியியலாளராக 1773 முதல் 1817 வரை பணியாற்றினார். தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் இவர் மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் பெர்க்மான் மற்றும் வில்லெம் சீலெவிடம் அவற்றைப்பற்றி தயக்கமின்றி உரையாடினார். மாங்கனீசு ஈராக்சைடை கரிமம் உபயோகித்து மாங்கனீசாக ஒடுக்கியது இவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதுவே மாங்கனீசை தனிமமாக முதன்முதலில் தனிமைப்படுத்திய முறையுமாகும். 1874 ஆம் ஆண்டில் சுவீடனின் இராயல் அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவீடன் நாட்டு சுரங்கத் துறையில் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். கானைட்டு (ZnAl2O4) என்ற ஆக்சைடு தாதுப்பொருள் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia