மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை
சுவாமி ராம்தேவ் (English:Swami Ramdev), (Hindi:स्वामी रामदेव) அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்தியஇந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர்[1]. இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
சர்ச்சைகள்
பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன.[2][3]
இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.[3][4].பின்னர் அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து கொடுக்கப்பட்ட ஆய்வுபொருட்களில் மூலிகைகள் மட்டுமே இருப்பதாக அறியப்பட்டது.[5].
இவரது கூற்றான, ஆயுர்வேதம் எய்ட்ஸ்,புற்று நோய் இவற்றை குணமாக்கும்[6][7] என்பதை பின்னர் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மறுத்ததில் நோயின் கடுமையை நோயாளிகள் எதிர்கொள்ள முடியும் என்று மட்டுமே தாம் கூறியதாக பின்வாங்கினார்[8][9][10].
கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம்
ராம்தேவ் 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் ஜன லோக்பால் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.[11] ஊழலை கட்டுப்படுத்தவும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.
பெப்ரவரி, 2011இல் கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும் ஒழிக்கவும் பின்வரும் வழிகளைப் பரிந்துரைத்தார்[12] :
₹ 500, ₹1000 பணத்தாள்களை திரும்பப் பெறுதலும் செல்லாததாக்குவதும் - இது கணக்கில் இல்லாத பணத்தை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் மற்றும் சட்டவிரோத கையூட்டுக்களுக்கு பணப்போக்குவரத்தை தடுக்கும்.[13][14]
ஐ.நா ஊழலுக்கெதிரான நெறிமுறைக்கு உடன்படுதலும் ஏற்றுக்கொள்ளுதலும் - 2006 முதல் நிலுவையில் உள்ளது.
இந்திய குற்றவியல் சட்டத்தில் ஊழல் புரிந்தோருக்கு மரண தண்டனை வழங்க இடமளித்தல்.
வரி ஏய்ப்பு மையங்களில் இருந்து ஊழல் நபர்கள் பணத்தைக் கையாடுவதைத் தடுக்க கொடுக்கல் வாயில்களை அணுகியும், கண்காணித்தும் தடுத்தும் செயற்திட்டமாக்கல்.
எந்த வெளிநாட்டு வேலை/உறவினரல்லாதவர்கள் வெளிநாட்டு வங்கிகளின் கடனட்டை அல்லது செலவட்டை கொண்டிருந்தால் அவர்களது கணக்குகளை ஆராய்வது.
எந்தவொரு வங்கியும் வரி ஏய்ப்பு மையமொன்றில் செயல்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது.
இவற்றினை செயல்படுத்துவது குறித்த நடைமுறைக் கேள்விகள் எழுந்துள்ளன.[15]
பெங்களூருவில் ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் வலிமையான ஆன்மீக "பாரத"த்தை உருவாக்கிடவும் தாம் சூன் 4 முதல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மக்கள் இயக்கம் ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதற்காக தமது யோகா பயிற்சிக்கூட்டங்களில் பரப்புரை ஆற்றி வந்தார். இதனை தமது பாரத் சுவாபிமான் யாத்திரையின் இரண்டாம் கட்டமாக அறிவித்தார்.[16]