ரீலேப்ஸ் (இசைத்தொகுப்பு)
ரீலேப்ஸ் (Relapse) என்பது அமெரிக்க ராப் இசைக் கலைஞரான எமினெம் வெளியிட்ட ஆறாவது இசைப்பதிவக இசைத்தொகுப்பு ஆகும். இது இண்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் மே 15, 2009 அன்று வெளியானது. என்கோர் (2004) இசைத்தொகுப்புக்குப் பின் தூக்க மாத்திரைக்கு அடிமையானதிலும் சிந்தனை ஸ்தம்பிப்பு பிரச்சினையாலும் இசைப் பதிவிலேயே ஈடுபடாது போய் சுமார் ஐந்து வருட காலங்கள் கழித்து இந்த இசைத்தொகுப்பு வெளிவந்தது. இந்த இசைத்தொகுப்பிற்கான இசைப் பதிவு அமர்வுகள் 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு இசைப்பதிவு அரங்குகளில் நடந்தது. தயாரிப்பு பிரதானமாக டாக்டர். ட்ரி, மார்க் பேட்சன், மற்றும் எமினெம் ஆகியோரால் கையாளப்பட்டது. கருத்துரீதியாக ரீலேப்ஸ் , அவரது போதையிலிருந்தான மறுநிவாரணம், ஒரு கற்பனையான மறுவீழ்வுக்குப் பிந்தைய ராப் ஆகியவை குறித்து பேசியது. இந்த இசைத்தொகுப்பு அமெரிக்காவின் பில்போர்டு 200 பாடல் வரிசையில் முதலிடத்தில் அறிமுகமானது. தனது முதல் வாரத்தில் 608,000 பிரதிகள் விற்றது. 2009 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஒன்றாய் அமைந்த இது அமெரிக்காவில் 1.9 மில்லியன் பிரதிகளுக்கும் அதிமாய் விற்றதோடு இந்த பாடல்வரிசைகளில் வெற்றி பெற்ற மூன்றி தனிப்பாடல்களை உருவாக்கியிருந்தது. ரீலேப்ஸ்அநேக இசை விமர்சகர்களிடம் இருந்து கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்த இசைத்தொகுப்பு 52வது கிராமி விருதுகளில் சிறந்த ராப் இசைத்தொகுப்புக்கான கிராமி விருதை அவருக்குப் பெற்றுத் தந்ததோடு, இருவர் அல்லது குழு மூலமான சிறந்த ராப் பாடலுக்கான விருதை ”கிராக் எ பாட்டில்” தனிப்பாடலுக்குப் பெற்றுத் தந்தது. பின்புலம்2005 ஆம் ஆண்டு சமயத்தில், எமினெம் தனது சொந்த இசைக்கு இசைப்பதிவு செய்வதில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பினார். மற்ற ராப் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக தனது சொந்த இசைவெளியீட்டு நிறுவனமான ஷேடி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள கலைஞர்களுக்கு, தயாரிப்பாளராக அவர் விரும்பினார்.[1] ஆனாலும், அயற்சியாலும் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையானதாலும் 2005 ஆம் ஆண்டின் கோடையில் ஏங்கர் மேனேஜ்மேண்ட் பயண நிகழ்ச்சியின் ஐரோப்பிய பயணத்தை ரத்து செய்து விட்டு எமினெம் ஒரு ஓய்வுக்காலத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.[2] அடுத்த வருடத்தில், இவர் தனது முன்னாள் மனைவியான கிம்பர்லி ஸ்காட்டை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் பதினோரு வாரங்களே நீடித்த நிலையில் மீண்டும் அவர்கள் விவாகரத்து[3] பெற்றனர். அச்சமயத்தில் அவரது நெருங்கிய நண்பரும் சக ராப் கலைஞருமான டிஷான் “புரூஃப்” ஹோல்டான் டெட்ராயிட்டில் ஒரு நைட்கிளப்பிற்கு வெளியே நடந்த மோதலில் சுடப்பட்டு உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியுற்றிருந்த எமினெம் மீண்டும் மருந்துகளுக்குள் வீழ்ந்து விட்டதோடு ரொம்பவும் ஒதுங்கி விட்டார்.[3][4][5] 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில், புரூஃபின் மரணம் தன் மீது ஏற்படுத்திய பாதிப்பை எமினெம் விவரித்தார். எமினெம் இசைத்தொகுப்பு வெளியிடவிருப்பது குறித்த ஊகங்கள் 2007 ஆம் வருடத்தின் மத்திய காலம் தொடங்கியே 50 செண்ட் மற்றும் சுடாட் குவோ ஆகிய கலைஞர்களிடம் இருந்து வந்த அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன. 50 செண்ட் ஷேடி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளவர். சுடாட் குவோ முன்னாள் உறுப்பினர்.[6][7] அத்துடன் இண்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் முதலில் எமினெமின் இசைத்தொகுப்பை வெளியிட விரும்புவதால் தங்கள் குழுவின் மூன்றாவது இசைப்பதிவக இசைத்தொகுப்பு வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாக டி12 ஹிப் ஹாப் குழுவின் உறுப்பினரான ராப் கலைஞர் பிஸாரெ கூறியிருந்தார்.[8] தி அல்கெமிஸ்ட், பிஷப் லேமாண்ட், கேஷிஸ், மற்றும் ஓபி ட்ரைஸ் ஆகிய ஷேடி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பல்வேறு இசைக் கலைஞர்களும், எமினெம் ஒரு புதிய இசைத்தொகுப்பில் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியிருந்தனர்.[9][10][11][12] செப்டம்பர் 12, 2007 அன்று வானொலி நிலைய பேட்டியின் போது வந்த அழைப்பு ஒன்றிற்கு பதிலளித்த எமினெம், தான் முன்னர் ஸ்தம்பித்துப் போயிருந்ததாகவும் உடனடியான வருங்காலத்தில் தான் எதுவும் புதிய பாடல்களை வெளியிடுவேனா என்பதே தனக்கு உறுதியாய்த் தெரியாதிருந்தது என்றும் கூறினார். அதன்பின் அதனை விரிவாகப் பேசிய அவர், அச்சமயத்தில் தான் இசைப் பதிவில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதாகவும் தனது தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.[13] ஆயினும், 2007 ஆம் ஆண்டு டிசம்பர் சமயத்தில் மெதடோன் அதிகமாய் பயன்படுத்தியதால் எமினெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[14] 2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தனது போதை அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கு 12 படி மீட்சித் திட்டத்தை எமினெம் பயிற்சி செய்யத் துவங்கினார். ஏப்ரல் 20, 2008 முதல் தனக்கு முழுத் தெளிவு திரும்பி இருப்பதாக அவர் தெரிவித்தார்.[14] இசைப்பதிவு2005 ஆம் ஆண்டில் தூக்க மாத்திரைக்கு அடிமையானதில் இருந்து மீள்வதற்கு எமினெம் சிகிச்சை பெறத் துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரீலேப்ஸ் இசைத்தொகுப்பின் ஆரம்ப இசைப்பதிவு கட்டங்களில், இசைத்தட்டு தயாரிப்பாளரும் நெடுங்காலம் டெட்ராயிட்டில் உடன் பழகியவருமான பாஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஜெஃப் பாஸ், எமினெம் உடன் இருபத்தி ஐந்து இசைத்தடங்களில் பணியாற்றினார்.[4][15] புரூஃபின் மரணம் எமினெமை “சிந்தனை ஸ்தம்பிப்பு” காலகட்டம் ஒன்றிற்குள் தள்ளியது. தான் எழுதிய எதுவுமே பதிவு செய்ய உகந்தவை அல்ல என்று அவர் கருதினார்.[16] இதனை சரிக்கட்டும் வகையில், இவர் “ஒரு கதையை எழுதுவதற்குப் பதிலாக, தனது எண்ணத்தில் உதிப்பதை ராப் பாடலாக உருவாக்க” அனுமதிக்கும் ஒரு தயாரிப்பு உற்பத்தியை பின்பற்ற முடிவு செய்தார்.[15] அதன்பின் எமினெம் சுதந்திரபாணியைப் பின்பற்றினார். ஒரு சமயத்தில் ஒரு வரியை பாடி பதிவு செய்வார். குறுக்கீடு வந்து விட்ட பின் அடுத்த வரியை பின்னர் பாடி பதிவு செய்வார்.[16] அதே சமயத்தில் அவரை அறியாமலேயே கூடுதலான பாடல்களை எமினெம் சேகரிக்கத் துவங்கியதாக அவரது பாடல் உரிமைகள் மேற்பார்வையாளரான ஜோயல் மார்டின் குறிப்பிடுகிறார். மற்ற கலைஞர்களின் இசை வேலைகளுக்காக எண்ணி இவர் பதிவு செய்வார் அல்லது உருவாக்குவார். ஆனால் அது இறுதியில் அவர் ரொம்பவும் விரும்பும் சொந்த இசைத்தடங்களாய் வந்து முடியும்.[15] எமினெம் தயாரிப்பில் உருவான “பியூட்டிஃபுல்” மட்டும் தான் அவர் தெளிவாக இல்லாத அந்த மூன்று வருடங்களில் பதிவு செய்யப்பட்டு ரீலேப்ஸ் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரே பாடல் ஆகும்.[17] 2007 ஆம் ஆண்டில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபெர்ண்டேல் நகரத்தில் இருக்கும் எஃபிஜி இசைப்பதிவகத்தை எமினெம் விலைக்கு வாங்கினார். அத்துடன் பாஸ் பிரதர்ஸ் உட்பட 54 சவுண்ட் ஸ்டுடியோ இசைப்பதிவகத்தில் இருந்த தனது முந்தைய தயாரிப்பு குழுவினர் அநேகமானோருடன் தனக்கு இருந்த தொழில் உறவை முறித்துக் கொண்டார்.[15][18] அதன் பின் தயாரிப்பாளர் டாக்டர்.ட்ரி உடன் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை அவர் பதிவு செய்வதைத் தொடர்ந்தார். ரீலேப்ஸ் தயாரிப்புக்கு இரண்டு மாதங்களை செலவிட தான் எண்ணியிருந்ததாக 2007 செப்டம்பரில் டாக்டர்.ட்ரி தெரிவித்திருந்தார்.[19][20] டாக்டர்.ட்ரி உடன் சேர்ந்து வேலை செய்தது தயாரிப்பைக் காட்டிலும் பாடல் எழுதுவதில் கவனத்தை செலுத்துவதற்கு எமினெமை அனுமதித்தது. தயாரிப்பு பகுதியை பெரும்பாலும் டாக்டர்.ட்ரி பார்த்துக் கொண்டார்.[19] டாக்டர்.ட்ரியை தயாரிப்பின் அநேக பகுதிக்கு தெரிவு செய்ததை எமினெம் நியாயப்படுத்துகையில், தங்கள் இருவருக்கும் வெகுநாட்கள் சேர்ந்து பணிபுரிந்த வரலாறு இருக்கிறது என்றும், தானும் டாக்டர்.ட்ரியும் மட்டுமே பகிர்ந்து கொள்வதான ’இசை ரசாயனம்’ தங்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.[21][22] அதற்குப் பின் ஒரு வருட காலம் வரை எஃபிஜி இசைப்பதிவகத்தில் இசைத்தொகுப்பு தயாரிப்பு வேலைகள் நடந்தன. அதன்பின் இசைப்பதிவு அமர்வுகள் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோவுக்கு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகர்த்தப்பட்டன.[4][16] அதற்குள்ளாக, பாடல் எழுதுவதை விட அதனைப் பதிவு செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் மட்டத்திற்கு வேகமாக எமினெம் பாடல் வரிகளை எழுதத் துவங்கியிருந்தார். தனது புதிய கற்பனைத் திறன் ஓட்டத்திற்கு தெளிவான நிலை தான் காரணம் என்று கூறிய அவர், கடந்த காலங்களில் போதை மருந்து உபயோகத்தால் “தடுத்துக் கொண்டிருந்த” அடைப்பில் இருந்து இப்போது மனம் விடுபட்டிருப்பதாக ஒப்புக் கொண்டார்.[14][16] டாக்டர்.ட்ரி தனது தாளங்களின் ஒரு தொகுப்பை ஒரு குறுந்தகடில் எமினெமிடம் கொடுப்பார். அவர் இசைப்பதிவகத்தில் ஒரு தனியறையில் அமர்ந்து அதனைக் கேட்டு தனக்கு ரொம்பவும் பிடித்தமான தன்னை ரொம்பவும் ஊக்கப்படுத்துகிற ஒன்றைத் தேர்வு செய்வார். அதன் பின் இவர் வரிகள் எழுதத் தொடங்குவார். அதே சமயத்தில் டாக்டர்.ட்ரி மற்றும் அவரது தயாரிப்பு ஊழியர்கள் தொடர்ந்து புதிய இசையை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். போதுமான பாடல்களுக்கு வரிகள் எழுதியாயிற்று என உணர்ந்தவுடன், ஒரு நாள் முழுவதையும் அர்ப்பணித்து தனது பாடல்களை எமினெம் பாடித் தீர்ப்பார். அடுத்து வரும் நாட்களில் அவரது குரலே கம்மிப் போய் விடும் அளவுக்கு இது இருக்கும். அந்த சமயத்தில் புதிய பாடல்களுக்கு அவர் வரிகள் எழுதத் தொடங்குவார்.[16][23] அடுத்த ஆறு மாதங்களுக்கு இதே நடைமுறை தொடர்ந்தது. இதனால் ரீலேப்ஸ் 2 என்கிற ஒரு இரண்டாவது இசைத்தொகுப்பிற்கு தேவையான பாடல்கள் எமினெமுக்குக் கிடைத்தன.[24] இந்த இசைப்பதிவு சமயத்தில், ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்கென தயாரிக்கப்பட்ட சில பாடல்கள் இணையத்தில் கசிந்தன. “கிராக் எ பாட்டில்” பாடலின் முழுமையுறாத பதிப்பும் இதில் அடங்கும்.[21] அதன்பின் டாக்டர்.ட்ரி மற்றும் 50 செண்ட் ஆகிய கூடுதல் பாடகர்களுடன் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த பாடல் முழுமை பெற்றது.[4][25] இண்டர்ஸ்கோப் நிறுவனத்தின் பன்னாட்டு உரிமையாளரான பாலிடோர் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கே அந்த சமயத்தில் இந்த இசைத்தொகுப்பு குறித்த எந்த தகவலும் தெரிந்திருக்கவில்லை.[4] ஏப்ரல் 23 அன்று எமினெம் கூறுகையில், ரீலேப்ஸ் இசைத்தொகுப்பின் இறுதிப் பிரதி தன்னிடமும் அநேகமாக டாக்டர்.ட்ரியிடமும் மட்டும் தான் இருக்கிறது என தெரிவித்தார். சட்டவிரோத பிரதிகளைத் தடுப்பதற்காக வெளியீட்டு தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன் வரை எமினெமின் இசைத்தட்டு நிறுவனங்களிடமே கூட இந்த இசைத்தொகுப்பு இருக்காது என அவரது மேலாளர் பால் ரோஸன்பெர்க் மேலும் தெரிவித்தார்.[26] இசைதனது போதை மருந்துக்கான மறுநிவாரணம் தான் ரீலேப்ஸ் இசைத்தொகுப்பின் பின்னால் இருக்கும் கருப்பொருள் என்றும், தான் மீண்டும் போதைக்கு ஆட்பட்டு விட்டதைப் போன்ற கருப்பொருளுடன் ராப் இசைக்கப் போவதாகவும் XXL இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் எமினெம் விவரித்தார்.[16] இந்த இசைத்தொகுப்பிற்கான பாதிப்பு எமினெமின் சொந்த போதை மருந்து விடயங்களில் இருந்தும், அத்துடன் குற்றங்கள் மற்றும் தொடர் கொலைகாரர்கள் அடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப் படங்களில் இருந்தும் வந்திருக்கின்றன என்றும், “தொடர் கொலைகாரர்கள் மற்றும் அவர்களது வெறி மற்றும் மனோ நிலைகள்” குறித்து எமினெம் ஆர்வத்துடன் இருந்தார் என்றும் பேட்டி கண்ட டேட்வோன் தாமஸ் தெரிவித்தார்.[14][27] தொடர் கொலைகாரர்கள் குறித்த தனது கருத்தை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு 2009 ஆம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில் எமினெம் விவரித்தார். ”டாக்டர் வெஸ்ட்” என்னும் நையாண்டியுடன் ரீலேப்ஸ் துவங்குகிறது. நடிகர் டொமினிக் வெஸ்ட் போதை மருந்து மறுநிவாரண ஆலோசகராய் குரல் கொடுக்கிறார். இவரது நம்பகமின்மை காரணமாக எமினெம் மீண்டும் போதை மருந்துக்கு அடிமையாகிறார். அவரது பித்தன் பாத்திரம் திரும்புகிறது.[28][29] இந்த நையாண்டியில் இருந்து “3 ஏ.எம்.” வருகிறது. இதில் எமினெம் தன்னை பின்னிரவுகளில் வீடுகளில் புகுந்து தொடர்கொலை புரியும் ஒரு வெறிபிடித்த கொலைகாரனாக விவரிக்கிறார்.[30][31] இசைத்தொகுப்பு வெளிவரும் முன்னதாக “3 ஏ.எம்.” மட்டும் ஒரு தனிப்பாடலாக வெளியிடப்பட்ட போது, அந்த பாடல் இசைத்தொகுப்பின் ஒட்டுமொத்த நிழல் தொனியை பிரதிபலித்ததாய் தான் நம்பியதாக எமினெம் குறிப்பிட்டார்.[22] “மை மாம்” பாடலில், தனது தாயின் போதை மருந்து ஆட்பாட்டு பழக்கங்களைப் பின் தொடரும் இக்கலைஞர், அதனால் தானும் அவரைப் போல போதைக்கு ஆட்பட்டதாய் விவரிக்கிறார்.[14][32] ”இன்ஸேன்” பாடலில் தனது குடும்ப கதைகளை எமினெம் தொடர்கிறார். இதில் குழந்தைப் பருவ கொடுமைக்கு பலியானவராக தன்னை அவர் கற்பனை செய்கிறார்.[29] எமினெமைப் பொறுத்த வரை, “இன்ஸேன்” பாடலின் இலக்கு கேட்பவர்களை அருவருக்கச் செய்வதாய் அமைய வேண்டும். பாடலின் முதல் வரிகளை தான் சிந்தித்த பிறகு தான் (”மூளையில் உறுப்புடன் நான் பிறந்தேன், தலையில் புணரப்பட்டு”) தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் அவர் கூறினார்.[23] அவரது முன்னாள் பெண்நண்பியாகக் கூறப்படும் மரியா கரே மற்றும் அவரது தற்போதைய கணவர் நிக் கேனான் ஆகியோர் தான் “பேக்பைப்ஸ் ஃபிரம் பாக்தாத்” பாடலில் இலக்கானார்கள். இந்த பாடலில் ஒரு மகுடி சுழற்சிக்கு எமினெம் ராப் செய்கிறார்.[33][34] பல வருடங்களாக “மனரீதியாக”[23] காணாது போயிருந்த நிலையில் தன்னை மறு அறிமுகப்படுத்திக் கொள்ளும் “ஹலோ” பாடலுக்குப் பிறகு, “ஸேம் ஸாங் & டான்ஸ்” பாடலில் இவர் தனது முரட்டுத்தனமான கற்பனைகளைத் தொடர்கிறார். இப்பாடலில் அவர் லிண்ட்ஸே லோஹன் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸை கடத்திக் கொலை செய்கிறார்.[32][33] ”இப்பெண்கள் நடனம் ஆடுவார்கள், ஆனால் அவர்களுக்கு எதற்கு தாங்கள் ஆடிக் கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது” என்கிற வகையான பிரதிபலிப்பை உணர்த்தும் வரிகளை எழுதுவதற்கான உந்துதலை “ஸேம் ஸாங் & டான்ஸ்” பாடலின் உற்சாகமான தாளம் எமினெமுக்கு அளித்தது.[23] இசைத்தொகுப்பின் “வீ மேட் யூ” என்னும் ஒன்பதாவது தடத்தில், எமினெம் பல்வேறு பிரபலங்களையும் கிண்டலடிக்கிறார். அத்துடன் “பாப் நட்சத்திர தொடர் கொலைகாரரின்” பாத்திரத்திலும் நடிக்கிறார்.[35] “பிரபலங்கள் மீதான தாக்குதல்” தனிநபர் மீதான தாக்குதல் அல்ல என்றும், தான் தான் வரிகள் எழுதுகையில் சந்தத்திற்கு ”பொருந்துகிற பெயர்களை தெரிவு செய்ததாகவும்” எமினெம் தெரிவித்தார்.[36] ”மெடிசின் பால்” பாடலில் எமினெம் மறைந்த நடிகர் கிறிஸ்டோபர் ரீவை கிண்டல் செய்கிறார். தனது ரசிகர்கள் “சிரிக்க வேண்டும், பின் சிரித்ததற்காக வருத்தப்பட வேண்டும்” என்ற எண்ணத்துடன் இதனை உருவாக்கினார்.[23][32] அடுத்த தடம் ஸ்டே வைடு அவேக். இதில் பெண்களை பாலியல் தாக்குதல் செய்வது குறித்து எமினெம் ராப் செய்கிறார். “ஓல்டு டைம்’ஸ் ஸேக்” பாடலில் டாக்டர் ட்ரியும் ஒரு கவுரவப் பாத்திரம் ஏற்கிறார். இது ஒரு சோடிப் பாடல். “ரசனையாய் இருக்கும், ஆனாலும் பழைய காலங்களை நினைவூட்டும்” என்று எமினெம் தெரிவித்தார். ட்ரியும் இவரும் இடையிடையே மாறி மாறி ராப் பாடுவார்கள்.[23] இந்த பாடலைத் தொடர்ந்து “மஸ்ட் பீ தி கஞ்சா” பாடல் வருகிறது. இதில் எமினெம் இசைப்பதிவு இசைப்பதிவகத்தில் வேலை பார்ப்பது ஒரு போதை மருந்து போல என நம்பி அதற்கு அடிமையாகிறார்.[23] எமினெம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ”மிஸ்டர் மாதர்ஸ்” நையாண்டிக்குப் பிறகு, “தேஜா வூ” பாடல் 2007 போதைப் பழக்கம் குறித்தும் இசையில் இருந்து அவர் விலகி இருந்த சமயத்தில் அவரது போதை மருந்து சார்பு குறித்தும் பேசியது.[14][23] கடந்த ஐந்து வருட காலங்களில், தனது மகளே தன்னைப் பார்த்து பயந்து போகும் அளவுக்கு இது தன்னை எவ்வாறு பாதித்திருந்தது என்பதையும் இந்த பாடலில் எமினெம் விளக்குகிறார்.[23][32][37] தனக்கும், தன்னைப் போல் இருட்டிலிருக்கும் எவருக்கும் அதில் இருந்து மீள முடியும் என உணர்த்துவதற்கு “பியூட்டிஃபுல்” நிச்சயமாக இசைத்தொகுப்பில் இடம்பெற வேண்டும் என்று எமினெம் கருதினார்.[23] டாக்டர் ட்ரி மற்றும் 50 செண்ட் உடன் இணைந்து செய்த “கிராக் எ பாட்டில்” பாடலுக்கு அடுத்து “அண்டர்கிரவுண்ட்” பாடலுடன் ரீலேப்ஸ் முடிவடைகிறது. தனக்கு கெட்டவன் என்கிற பெயர் கிட்டி அதனால் தனது வரிகளின் பச்சையான உள்ளடக்கம் குறித்து கவலை கொள்ள அவசியமில்லாமல் போனதற்கு முந்தைய “தி ஹிப்ஹாப் ஷாப்” காலங்களை (ஹிப் ஹாப் ஷாப் என்பது டெட்ராயிட்டில் உள்ள ஒரு ஆடைக் கடை. இதில் எமினெம் உள்ளிட்ட உள்ளூர் ராப் கலைஞர்கள் சண்டை போட்டு[38] விளையாடிக் கொண்டிருப்பார்கள்) நினைவுகூரும் விஷயங்களை இந்த இசைத்தொகுப்பின் இறுதித் தடத்தில் கொண்டுவர எமினெம் விழைந்தார்.[23] என்கோர் வரையான எமினெமின் ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் இடம் பிடித்த கென் கேனிஃப் இசைத்தொகுப்பின் நிறைவு இசைப் பத்தியில் மிகையான ஓரினச்சேர்க்கை பாத்திரமாக இடம்பெறுகிறார். வெளியீடும் விளம்பரமும்
2007 ஆம் ஆண்டில், இந்த இசைத்தொகுப்பு குறித்து விவாதிக்கையில் கிங் மாதர்ஸ் என்கிற பெயரில் இதனை ஷேடி ரெக்கார்ட்ஸ் நிறுவன ராப் கலைஞர் கேஷிஸ் குறிப்பிட்டதோடு, அது அந்த வருடத்தின் பின்பகுதியில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார்.[11] ஆயினும் எமினெமின் விளம்பர நிர்வாகி டெனிஸ் டெனஹி இதனை பின்னர் மறுத்தார். 2007 ஆம் ஆண்டில் வெளியிட எந்த இசைத்தொகுப்பும் திட்டமிடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். அத்துடன் 2007 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி தலைப்பு எதுவும் கூட உறுதியாகவில்லை என்றும் அவர் கூறினார்.[39] அதன் பின் ஒரு வருட காலத்திற்கு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை. அதன்பின் தி வே ஐ ஆம் என்கிற எமினெமின் சுயசரிதை வெளியீட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில், ரீலேப்ஸ் என்கிற பெயரில் ஒரு இசைப்பதிவக இசைத்தொகுப்பு வெளியிட தான் கொண்டிருக்கும் திட்டங்களை எமினெம் உறுதிப்படுத்தினார். அந்த விருந்தின் போது, “ஐ எம் ஹேவிங் எ ரீலேப்ஸ்” என்கிற ஒரு பாடலையும் ரசிகர்களுக்கு அவர் பாடிக் காண்பித்தார்.[40] இசைத்தொகுப்பின் வெளியீட்டுத் தேதி குறித்த விடயத்தில், 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நன்றிகூறும் நாளான நவம்பர் 27 தினத்தில் ரீலேப்ஸ் இசைத்தொகுப்பை விநியோகிக்க வர்ஜின் மெகாஸ்டோர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக ரோலிங் ஸ்டோன் இதழ் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் பதிப்பில் செய்தி வெளியிட்டது.[41] அக்டோபர் 27 அன்று பேசிய இண்டர்ஸ்கோப் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் அந்த சமயத்தில் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், ஏதேனும் இணையதளத்தில் வெளியீட்டு தேதிகள் எதுவும் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார்.[42][43] நவம்பர் 16, 2008 அன்று டோடல் ரெகவஸ்ட் லைவ் இறுதி நிகழ்ச்சியின் போதான தொலைபேசி நேர்காணலில், 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்ரீலேப்ஸ் இசைத்தொகுப்பு வெளியாகும் என எமினெம் உறுதிபடத் தெரிவித்தார். இசைத்தொகுப்பிற்கான பாடல்களை தெரிவு செய்வதில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.[44] இரண்டு மாதங்களுக்கு முன்பே கசிந்து விட்டிருந்த “கிராக் எ பாட்டில்” பாடல் இறுதியாக சட்டப்பூர்வமாய் கட்டணம் செலுத்தி எண்மருவிப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் பாடலாகவும், அத்துடன் விளம்பர தனிப்பாடலாகவும் பிப்ரவரி 2, 2009 அன்று வெளியானது. அத்துடன் அமெரிக்க பில்போர்டு ஹாட் 100[45][46] வரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. இந்த பாடலுக்கான இசைக் காணொளி மே மாதம் முதல் சூன் ஆரம்ப மாதம் வரை பல பாகங்களாக வெளியிடப்படுகிறது என்றும் எமினெமின் மேலாளர் பால் ரோஸன்பெர்க் தெரிவித்தார். வெளியீட்டின் போது, இந்த பாடல் ரீலேப்ஸ் இசைத்தொகுப்பில் இடம்பெறுமா பெறாதா என்பது குறித்து பல்வேறு முரண்பாடான தகவல்கள் வெளியாயின.[47][48] ஆரம்ப குழப்பம் எல்லாம் இருந்தபோதும், இசைத்தொகுப்பில் இந்த தனிப்பாடல் இடம்பெறவிருப்பதை யுனிவர்சல் மியூசிக் குழுமத்தின் ஒரு செய்திக் குறிப்பு உறுதி செய்தது.[24] மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி இதேபோல் வெளிவந்த செய்திக் குறிப்புகளில், ரீலேப்ஸ் இசைத்தொகுப்பின் பிராந்திய வெளியீட்டு தேதிகளை யுனிவர்சல் வெளிப்படையாக்கியது. இசைத்தொகுப்பு மே 15, 2009 சமயத்தில் இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் கிடைக்கும் என்றும், மே 18 அன்று அநேக ஐரோப்பிய நாடுகளிலும் பிரேசிலும் கிடைக்கும் என்றும், அடுத்த நாளில் இது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆண்டின் இறுதியில் ரீலேப்ஸ் 2 என்கிற எமினெமின் இன்னொரு இசைத்தொகுப்பும் வெளியிடப்பட இருப்பதாகவும் இந்த இசைத்தட்டு நிறுவனம் அறிவித்தது. தானும் டாக்டர் ட்ரியும் இணைந்து ஏராளமான இசையைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இரண்டு இசைத்தொகுப்புகளை வெளியிடுவது தனது இசை அனைத்திற்குமான அணுகலை ரசிகர்களுக்குக் கிடைக்கச் செய்யும் எனவும் எமினெம் விளக்கினார்.[24] ”கிராக் எ பாட்டில்” வெளியான பிறகு ஏப்ரல் 7 என்று “வீ மேட் யூ” தனிப்பாடலின் இசைக் காணொளி ஒளிபரப்பானது. ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 13 அன்று இது விற்பனைக்குக் கிடைக்கப் பெற்றது.[49][50][51] ஏப்ரல் 28 அன்று, இசைத்தொகுப்பின் மொத்தத்தில் மூன்றாவது தனிப்பாடலான “3 ஏ.எம்.” மீண்டும் கட்டணப் பதிவிறக்கமாக வெளியிடப்பட்டது.[52] “3 ஏ.எம்.” தனிப்பாடலுக்கான இசைக் காணொளி சிண்ட்ரோம் இயக்கத்தில் டெட்ராயிட்டில் படம்பிடிக்கப்பட்டது.[22][53] இசைத்தொகுப்பு வெளியாவதற்கு முன்னதாக இன்னும் இரண்டு தனிப்பாடல்களும் விநியோகம் செய்யப் பெற்றன. “ஓல்டு டைம்’ஸ் ஸேக்” மற்றும் “பியூட்டிஃபுல்” ஆகியவை ஐட்யூன்ஸ் ஸ்டோரில் முறையே மே 5 மற்றும் மே 12 அன்று விற்பனைக்கு வந்தன.[54] இசைத்தொகுப்பின் விலைமிகு பதிப்பை வாங்கினால் “மை டார்லிங்” மற்றும் “கேர்ஃபுல் வாட் யூ விஷ் ஃபார்” ஆகிய தனிப்பாடல்கள் கிடைக்கப் பெற்றன.[55][56] முன்னதாக ஏப்ரல் 4, 2009 அன்று, சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 2009 என்சிஏஏ இறுதிச் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் எமினெம் இடம்பெற்றிருந்தார். இந்த பாகத்தில் அவர் “லவ் லெட்டர் டூ டெட்ராயிட்” என்கிற உச்சரிப்பு வார்த்தையை ஒப்பித்தார். அதே நாளின் இன்னொரு சமயத்தில், ஹிப் ஹாப் குழுவான ரன்-டி.எம்.சி.யை எமினெம் ராக் அண்ட் ரோல் கலைப்புகழ்க் கூடத்தில் சேர்த்துக் கொண்டார். இவை எல்லாமே ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்கான “திட்டமிட்ட விளம்பர உந்துதல்” எனக் கூறப்பட்டது.[57] மே 31[58] அன்று நடந்த 2009 எம்டிவி மூவி விருதுகள் விழாவில் எமினெம் நேரலை நிகழ்ச்சி செய்தார். வைப் மற்றும் XXL ஆகிய ஹிப்ஹாப் பத்திரிகைகளின் 2009 ஜூன்[16][59] மாதத்து பதிப்பில் அட்டைப்படத்தில் அவர் தோன்றினார். இரண்டாவதாய் எமினெம் மற்றும் மார்வெல் காமிக்ஸ் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது.[60] இசைத்தொகுப்புடன் சேர்த்து ஒரு ஐபோன் விளையாட்டும் மே 19, 2009 அன்று வெளியிடப்பட்டது.[61] நெவர் ஸே நெவர் சுற்றுப்பயண சமயத்தில், சக குழு உறுப்பினர்களான சுவிஃப்டி மற்றும் குனிவா (டி12) ஆகியோர் ஒரு பண்பலை வானொலிக்கு ஒரு நேரலை நேர்காணல் அளித்தனர். அதில் அவர்கள் ரீலேப்ஸ் குறித்து பேசினர்.[62] ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்காக டி12 பல தடங்களை பதிவு செய்ததாகக் கூறிய குனிவா ஆனால் அவை இசைத்தொகுப்பில் இடம்பெறுமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாது என்றார்.[62] அதன்பின், ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்கு அடுத்து ரீலேப்ஸ் 2 இசைத்தொகுப்பாக 2009 ஆம் ஆண்டில் எமினெம் இரண்டு இசைத்தொகுப்புகள் வெளியிட இருப்பதை சுவிஃப்டி பின் உறுதிப்படுத்தினார்.[62] ரீலேப்ஸ்: ரீஃபில் என ரீலேப்ஸ் டிசம்பர் 21, 2009 அன்று மறுவெளியீடு செய்யப்பட்டது. இதில் “ஃபாரெவர்” (ஆரம்பத்தில் மோர் தான் எ கேம் ஒலித்தடத்தில் இடம்பெற்றிருந்தது) மற்றும் “டேகிங் மை பால்”, அத்துடன் முன்னர் வெளியாகாத ஐந்து தடங்களுடன் சேர்ந்து ஏழு கூடுதல் தடங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. ரீலேப்ஸ் 2 வெளியாகும் வரை இந்த ரீஃபில் இசைத்தொகுப்பு ரசிகர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கும் என்று நம்புவதாய் எமினெம் தெரிவித்தார்.[63] கலைவேலைரீலேப்ஸ் இசைத்தொகுப்பின் அட்டை வடிவமைப்பு முதன்முதலில் எமினெமின் டுவிட்டர் கணக்கில் ஏப்ரல் 21, 2009 அன்று வெளியிடப்பட்டது.[5] ஆயிரக்கணக்கான மருந்துகள் தரைக்கற்களாய் இருக்க அதில் எமினெமின் தலை இருப்பது போல் அது காட்சியளித்தது. அட்டையில் ஒரு பரிந்துரை மருந்தின் பெயர்ச்சீட்டு போல் இருக்க, அதில் நோயாளியின் பெயர் எமினெம் என்றும் பரிந்துரை செய்த மருத்துவரின் பெயர் டாக்டர் ட்ரி என்றும் அச்சிட்டிருக்கும்.[5] இந்த அட்டை பரிந்துரை மருந்துகளுடன் இந்த ராப் கலைஞர் போராடி வருவதையும் அவற்றுக்கு அடிமையாகி இருப்பதையும் குறிப்பிடுவதாக எம்டிவி செய்திகளின் கில் காஃப்மேன் தெரிவித்தார். சொந்த வாழ்க்கை விடயங்களை தனது கலைப் படைப்பில் புகுத்தும் எமினெமின் பழக்கத்தையும் இது வெளிப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.[5] இசைத்தொகுப்பின் துணைப்புத்தகமும் பின் அட்டையும் பரிந்துரை மருந்துச்சீட்டின் வடிவத்திலேயே இருந்தது. புத்தகத்தின் பின்னால் புரூஃபிற்கு அர்ப்பணிப்பு இருந்தது. அதில் தான் தெளிவுடன் இருப்பதாகவும், தான் அவருக்காக ஒரு பாடல் எழுத முயன்று, அவற்றில் எதுவுமே நன்றாய் இல்லை என்பதால் மொத்த இசைத்தொகுப்பையும் அவருக்காக அர்ப்பணிப்பதாகவும் எமினெம் அதில் விளக்கியிருந்தார். இந்த குறுந்தகடே மருந்து பாட்டிலின் மூடி வடிவத்தில் தான் இருந்தது. பழுப்பு நிற வடிவத்தில் பெரிய சிவப்பு எழுத்துகளாய் “கீழே தள்ளி திறக்கவும்” என பொறிக்கப்பட்டிருக்கும்.[64] வரவேற்புவர்த்தகரீதியான செயல்திறன்2009 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஒன்றாய் இருந்த நிலையில்,[65][66][67][68][69] ரீலேப்ஸ் அந்த வருடத்தின் மிக அதிக விற்பனையான ஹிப் ஹாப் இசைத்தொகுப்பாகவும் அமைந்தது.[70] வெளியான சமயத்தில், அமெரிக்க பில்போர்டு 200 வரிசையில் முதலிடத்தில் அறிமுகமான இந்த இசைத்தொகுப்பு, முதல் வாரத்தில் 608,000 பிரதிகள் விற்றது.[71] அமெரிக்கா தவிர, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, டென்மார்க் மற்றும் நியூசிலாந்து[72] உட்பட இன்னும் பல நாடுகளில் ரீலேப்ஸ் இசைத்தொகுப்பு வெளியான முதல் வாரத்தில் முதலிடத்தைப் பிடித்தது. ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்தது.[72][73] இரண்டாவது வாரத்திலும் இசைத்தொகுப்பு முதலிடத்தில் தொடர்ந்ததோடு இன்னும் 211,000 பிரதிகள் விற்று. மொத்த விற்பனை எண்ணிக்கையை 819,000 ஆக உயர்த்தியது. இது அந்த வருடத்தின் ஐந்தாவது பெரிய மிகப்பெரும் இசைத்தொகுப்பு விற்பனை ஆகும்.[74] மூன்றாவது வாரத்தில் ரீலேப்ஸ் இரண்டாமிடத்திற்கு இறங்கியது. இன்னுமொரு 141,000 பிரதிகள் விற்றதால் மூன்றே வாரங்களில் அமெரிக்காவில் மட்டுமான மொத்த விற்பனையை 962,000 என்கிற எண்ணிக்கைக்கு உயர்த்தியது.[75][76][77][78][79][80] இது தான் 2009 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த விற்பனையான ராப் இசைத்தொகுப்பு ஆகும்.[81] அமெரிக்காவில் இந்த இசைத்தொகுப்பு 1,891,000 பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்திருக்கிறது.[82] விமர்சனரீதியான வரவேற்புஇசைத்தொகுப்பு வெளியான சமயத்தில், அநேக இசை விமர்சகர்களிடம் இருந்து பொதுவாக கலவையான வரவேற்பு கிட்டியது. மெடாகிரிடிக் 59/100 மதிப்பெண்கள் வழங்கியது.[83] லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எழுத்தாளர் ஆன் பவர்ஸ் இது ”புத்திசாலித்தனமான படைப்பு” என்று கூறினாலும் கலவையான திறனாய்வு வரவேற்பையே அதற்கு அளித்தார்.[84] NME ' எழுத்தாளர் லூயிஸ் பாட்டிசன் ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்கு 5/10 தரமதிப்பீட்டை அளித்தார்.[85] விமர்சகர் ராபர்ட் கிறிஸ்ட்கௌ இந்த இசைத்தொகுப்பிற்கு பி மதிப்பீட்டை அளித்தார்.[86][87] எமினெமின் பாடல் வரிகளையும் கிறிஸ்ட்கௌ எதிர்மறையாய் விமர்சித்தார். பரபரப்பூட்டும் தன்மை தான் அதில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.[86] வில்லேஜ் வாய்ஸ் ' தியோன் வேபர் பாடல் வரிகளை வறுத்தெடுத்து விட்டார். ரோலிங் ஸ்டோன் எழுத்தாளர் ராப் ஷெஃபீல்டு இந்த இசைத்தொகுப்பிற்கு ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்தார். கூடுதல் வலியுடனான, நேர்மையான, முக்கியமான இசைத்தட்டு என்று அவர் வர்ணித்தார். எமினெமின் புகழ்பெற்ற மூன்றாவது இசைத்தொகுப்பான தி எமினெம் ஷோ இசைத்தொகுப்பிற்கு இணையாக தான் இதனைக் காண்பதாக அவர் தெரிவித்தார்.[32][33] எமினெமின் மருந்துக்கு அடிமையான பழக்கத்தை நேர்மையுடன் காட்டியிருப்பதை தி டெய்லி டெலகிராஃப் பாராட்டியது.[88] எண்டர்டெயின்மெண்ட் வீக்லி 'யைச் சேர்ந்த லீய் கிரீன்ப்லாட் இந்த இசைத்தொகுப்பிற்கு ஏ மதிப்பீட்டை அளித்தார்.[34] வைப் ' இதழின் பெஞ்சமின் மெடோஸ்-இன்கிராம் எமினெமின் எழுத்து ஆற்றலை பாராட்டினார்.[89] இதற்கு நேரெதிராய், பாப்மேட்டர்ஸ் இதழின் ஆலன் ரண்டா ரீலேப்ஸ் இசைத்தொகுப்பிற்கு 3/10 மதிப்பெண்களை அளித்தார். ஸ்புட்னிக்மியூசிக்கின் ஜான் A. ஹேன்சன் இந்த இசைத்தொகுப்பிற்கு 5 நட்சத்திரங்களுக்கு 1 என மதிப்பீடு அளித்தார். எமினெமின் பாடல் வரிகளில் விடயம் ஒன்றுமில்லையென அவர் உணர்ந்தார்.[90] 52வது கிராமி விருதுகள் விழாவில் சிறந்த ராப் இசைத்தொகுப்பிற்கான கிராமி விருதினை இந்த இசைத்தொகுப்பு வென்றது.[91] இசைத்தொகுப்பு தரவரிசைகள்இசைத்தொகுப்பு தரவரிசை நிலைகள் மற்றும் விற்பனை
வெளியீட்டு வரலாறு
குறிப்புகள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia