ரோகிணி நிலேகனி (Rohini Nilekani பிறப்பு 1960) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர், கொடையாளி ஆவார்.[1] இவர் தண்ணீர் மற்றும் நலவாழ்வு சிக்கல்களில் கவனம் செலுத்துவதற்காக 2001 இல் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அறக்கட்டளையான அர்க்கியம் அறகட்டளையின் நிறுவனர் ஆவார்.[2][3] துவக்கக் கல்வியில் கவனம் செலுத்தும் அக்சரா அறக்கட்டளையின் தலைவராகவும் இவர் உள்ளார்.[4] இலாப நோக்கற்ற கல்வி தளமான இகேஸ்டெப் (EkStep) இன் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக ரோகிணி பணியாற்றுகிறார்.[5][6] இவர் ரோகினி நிலேகனி ஃபிலாண்ட்ரோபீஸ் அமைப்பின் தலைவர் ஆவார்.[7]
துவக்கக் கால வாழ்க்கை
ரோகிணி இந்தியாவின்மும்பையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை ஒரு பொறியாளர், தாயார் ஒரு இல்லத்தரசி. இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.[8]
தொழிலும் வேலையும்
தனது படிப்பை முடித்த பிறகு, ரோகிணி தற்போது செயல்பாட்டில் இல்லாத பம்பாய் இதழில் 1980 இல் செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் பெங்களூரில் சண்டே இதழில் பணியாற்றினார்.[4]
1998 இல், அவர் தனது முதல் புதினமான ஸ்டில்போர்னை வெளியிட்டார். இது பெங்குயின் புக்ஸ் பதிப்பகம் மூலம் வெளியானது. ஸ்டில்போர்ன் ஒரு மருத்துவ பரபரப்பூட்டும் புதினமாகும். அது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[6] இவர் 2004 இல் இணைந்து நிறுவிய சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிடும் இலாப நோக்கற்ற வெளியீட்டு நிறுவனமான பிராந்தம் புக்ஸ் மூலம் தான் சிறுவர்களுக்காக எழுதிய சிருங்கேரி தொடர் என்ற குழந்தைகளுக்கான கதைகளை வெளியிட்டார் [6]
ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 2012, செப்டம்பர் 28 அன்று புது தில்லியில்சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நிர்மல் பாரத் யாத்ரா' குறித்து விளக்கினார். நடிகை வித்யா பாலன் மற்றும் ரோகிணி நிலேகனி ஆகியோரும் காணப்படுகின்றனர்.
இவரது இரண்டாவது புத்தகம், அன்காமன் கிரவுண்ட் ஆகும். அதே பெயரில் 2008 ஆண்டு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவரின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அபுனைவு நூல் இது ஆகும். அன்காமன் கிரவுண்ட் 2011 இல் பென்குயின் புக்சால் வெளியிடப்பட்டது.[6][9] 2001 ஆம் ஆண்டில், ரோகிணி நிலேகனி தண்ணீர், நலவாழ்வு சிக்கல்களில் பணியாற்றும் ஒரு இலாப நோக்கற்ற அர்க்கியம் அறக்கட்டளையை நிறுவினார் இதற்கு இவர் தனிப்பட்ட முறையில் நிதியளித்து வருகிறார்.[4]
நிலேகனி சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அசோகா அறக்கட்டளையின் (ATREE) அறங்காவலர் குழுவில் உள்ளார்.[10] இவர் 2012 மே முதல் இந்திய (வணிகப்) போட்டி ஆணையத்தின் புகழ்பெற்ற நபர்கள் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார் [11] 2011 சூலையில், இவர் இந்தியாவின் பொதுத் தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12] இவர் 2017 இல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு கௌரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.[13]
இவர் 2021 செப்டம்பரில் அர்க்கியம் அறக்கட்டளையின் தலைவர் பொற்றுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் [14] நிலேகனி தற்போது காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், நீதி, நிர்வாகம், விலங்குகள் நலன் ஆகியவற்றில் பணியாற்றும் 80 குடிசார் சமூக அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.[15]
நிலேகனி ஒரு கொடையாளியும் ஆவார். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளைக்கு (ATREE) ₹ 50 கோடியை அளிக்க ஒப்புக்கொண்டார்.[16] 2013 திசம்பரில், ரோகிணியும் அவரது கணவர் நந்தன் நிலெக்கணியும், தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவுக்கு அதன் புது தில்லி வளாகத்தில் புதிய இந்திய மையத்தைக் கட்டுவதற்காக ₹ 50 கோடி நன்கொடையாக அளித்தனர்.[17] 2013 ஆகத்தில், இவர் இன்ஃபோசிசில் 5.77 லட்சம் பங்குகளை விற்று சுமார் ₹ 164 கோடி பணத்தை இலாபநோக்கமற்ற பணிகளுக்கு செலவிட திரட்டினார்.[18] 2010 மற்றும் 2014 இல் போர்ப்ஸ் இதழால் ஆசியாவின் பரோபகார நாயகர்களில் ஒருவராக இவரது பெயர் இடம்பெற்றது.[19][20] காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், சுதந்திரமான ஊடகங்கள், நிர்வாகம், விலங்குகள் நலவாழ்வு ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 80 குடிசார் சமூக அமைப்புகளை இவர் ஆதரிக்கிறார்.[15] 2022 மார்ச்சில் ஃபோர்ப்ஸ் இந்தியா லீடர்ஷிப் விருதுகளில் கிராஸ்ரூட் பிளாந்தொரபிஸ்ட் விருதைப் பெற்றார் [15] 2020-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதநேயவாதி விருதை அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (அசோசெம்) இடம் பெற்றுள்ளார்.[21]
2022 அக்டோபரில், எடல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு நற் செயல்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில் ஆண் மற்றும் பெண் கொடையாளிகளுக்கான தரவரிசை இடம்பெற்றுள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் ₹ 120 கோடி நன்கொடை அளித்ததன் மூலம் பெண் கொடையாளிகள் பட்டியலில் ரோகிணி நிலேகனி முதலிடம் பிடித்தார். இவரது நன்கொடைகள் முதன்மையாக கல்வி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளது.[22] 2022 நவம்பரில், கிரன் மசும்தார் ஷா மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ரோகிணி நிலேகனி இணைந்து பெங்களூர் அறிவியல் காட்சியகத்துக்கு (SGB) ₹ 51 கோடியை நன்கொடையாக வழங்கினர்.[23]
2023 ஏப்ரலில், ரோகிணி நிலேகனி ஃபிலாண்ட்ரோபிஸ் அறக்கட்டளை மூலம், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்திற்கு ( நிம்மான்ஸ் ) ₹ 100 கோடி நன்கொடையாக வழங்கினார்.[7][24]
தனிப்பட்ட வாழ்க்கை
ரோகிணி நந்தன் நிலெக்கணியை மணந்தார். 1977 இல் தனது கல்லூரியில் நடந்த வினாடி வினா போட்டியில் அவரை சந்தித்தார். இந்த தம்பதிக்கு சான்கவி, நிகார் என இரு பிள்ளைகள் உள்ளனர்.[25] இவரது மகள் சான்கவி நிலேகனி, தாய்வழி நலவாழ்வுத் துறையில் பணியாற்றும் ஆஸ்திரிகா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.[26]