லீஸ் மெயிட்னர்
லீஸ் மெயிட்னர் ( Lise meitner இடாய்ச்சு: [ˈmaɪtnɐ] ; 7 நவம்பர் 1878 - 27 அக்டோபர் 1968) ஒரு ஆஸ்திரிய-சுவீடிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கம் மற்றும் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்தவர். மெயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஓட்டோ ராபர்ட் ஃப்ரிச் ஆகிய விஞ்ஞானிகள் தலைமையிலான சிறிய குழு, யுரேனியம் அணுக்கருவைப் பிளக்கும் போது அது கூடுதலாக நியூட்ரான்களை உறிஞ்சிக்கொள்கிறது என்ற ஆய்வு முடிவை 1939 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிட்டனர்.[4][5] யுரேனியம் அணுவை இரண்டு சிறிய அணுக்கருவாக பிளக்கும் பொழுது கூடவே, நிறைந்த ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற செயல்முறைகளை மெயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஓட்டோ ராபர்ட் ஃப்ரிச் ஆகிய விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனர். அணு உமிழ்வு மூலம் அணு உலைகளால் வெப்பம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[6] இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு, 1945 ல் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களின் அடிப்படைகளில் இதுவும் ஒன்று. மெயிட்னர் பெரும்பாலான நேரங்களை ஜெர்மனியின் பெர்லினில் தனது அறிவியல் அனுபவத்தைப் பெறுவதற்காகச் செலவழித்தார், அங்கு அவர் இயற்பியல் பேராசிரியராகவும், கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டில் இயற்பியல் துறைத் தலைவராகவும் இருந்தார்; ஜெர்மனியில் இயற்பியல் முழுநேரப் பேராசிரியராகப் பணியாற்றிய முதல் பெண்மணி மெயிட்னர் ஆவார். நாஜி ஜேர்மனியின் யூத-எதிர்ப்பு நியூரம்பெர்க் சட்டங்கள் காரணமாக 1930 களில் இந்த பதவிகளை அவர் இழந்தார். 1938 இல் அவர் சுவீடன் சென்று அங்கு அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்து, இறுதியில் ஸ்வீடிஷ் குடியுரிமையைப் பெற்றார். மெயிட்னர் அவரது வாழ்வில் தாமதமாகத்தான் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். 1944 இல் ஓட்டோ ஹான் வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆனால் மெயிட்னருடன் ஓட்டோ ஹான் இவ்விருதைப் பகிர்ந்து கொள்ளவில்லை . இது வேதியல் அணுகுமுறையில் மெயிட்னருடைய நீண்ட கால கூட்டுப் பணியாளர் ஓட்டோ ஹானுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. 1990 களில், ஓட்டோஹானுக்கு நோபல் பரிசைத் தீர்மானித்த அக்குழுவின் கோப்புகள் மீண்டும் பார்வையிடப்பட்டன. அந்தத் தகவல்களின் அடிப்படையில் பல அறிவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் நோபல் பரிசுக்கான மெயிட்னரின் விலக்கு "அநீதி" என்று குறிப்பிட்டனர். இறப்புக்குப் பின்னர் மெயிட்னருக்கு பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் ஒரு வேதியல் தனிமத்திற்கு 109 மெய்ட்னீரியம் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது .[7][8][9][10][11] நோபல் பரிசு வழங்கப்படாத போதிலும், 1962 ஆம் ஆண்டில் லிண்டாவ் நோபல் பரிசு பெற்றோர் கூட்டத்தில் கலந்துகொள்ள லீஸ் மீட்னர் அழைக்கப்பட்டார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia