தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
வெள்ளை ரோசா (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது.
ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).
பிரமிட்டுகளின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
மனித வடிவிலான ரோபோ இயந்திரத்துக்கான அடிப்படைத் தொழில்நுட்பங்களை 1495ஆம் ஆண்டு லியொனார்டோ டா வின்சி வரைந்து வைத்திருந்தார்.
தோகோ என்பது லியான்கார்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியை முன்நடத்திச் சென்ற நாய். இந்த அணியின் மிக நீண்ட பயணம் 1925 இல் அலாசுக்காவில் டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க நோய்க்கு எதிர் மருந்தைக் கொண்டு செல்வதற்காக அமைந்தது.
சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளியதாய்க் கூறப்படும் பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும்.
எகிப்தின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே காயல்பட்டினம் நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பெண்கள் நடந்து செல்வதற்கென்றே தனியாக வீதிகளும் உள்ளன.
9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன் எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டான சுடோக்கு யப்பான் நாட்டில் 1986 ஆம் ஆண்டில் அறிமுகமானது.
காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.
டி. பி. ராஜலட்சுமி தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின்முதல் மனிதர் 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர். கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது.
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி13ம் நூற்றாண்டில் கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கொனார்க் சூரியன் கோயில் (படம்) சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டது.இக்கோயிலைக் கட்டப் பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டது.
நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் வெந்நீரூற்றுகள் உலகில் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் அமெரிக்காவிலுள்ளவயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் எனும் இடத்தில் இருக்கின்றன.
சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பீக்கிங் மனிதன் என்றழைக்கின்றனர்.
பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும்.
கடுவேகக் கெடு பிரசவம் எனும் நிலையில் நிறைமாதமாய் இருக்கும் பெண் பிரசவமேற்படப் போவதை உணராமலேயே குழந்தை பெற வாய்ப்புண்டு.
பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான ஏரியாகும். உருசியாவின் தென் சைபீரியா மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஏரி பூமியினை சுற்றியுள்ள மொத்த நன்னீர் நிலைகளில் 20 சதவிகித நன்னீரினை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒரு கடதாசியை 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்கமுடியாது என்பதை அறிவீரா?, அது எவ்வளவு மெலிதாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்க இயலாது.
மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் பங்கேற்றுப் பட்டம் வென்ற முதல் இலங்கைத் தமிழர் யாழ் நூல் இயற்றிய சுவாமி விபுலாநந்தர் ஆவார்.
1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
கொலம்பஸ் இறந்த வேளையிலும் தான் கண்டறிந்தது ஆசியாவின் கிழக்குக்கரை தான் என்று உறுதியாக நம்பினார்.
பொதுவாக எல்லா நொதிகளும்புரதங்களே என்று பலகாலமாய் நம்பப்பட்டு வந்தது. பின்னரே ரிபோசைம் எனும் நியூக்ளிக் அமிலங்களும் நொதிகளாய்ச் செயல்படுவது கண்டறியப்பட்டது.
பரமார்த்த குரு கதைகள் நூலை எழுதிய வீரமா முனிவர் தான் தமிழின் முதல் அகரமுதலியான சதுரகராதியைத் தொகுத்தார். அதற்கு முன் நிகண்டுகள் எனப்படும் கவிதை வடிவிலான அகரமுதலிகளே இருந்தன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் தன் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு முறையேனும் ரோட்டா வைரசு வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகிறது.
அஸ்கிதகுதரம் முதலியன 8 பிற்றில் இயங்குபவை. ஒருங்குறியோ 16 பிற்றில் இயங்குகிறது. எனவே தான் அது உலக மொழிகளுக்கெல்லாம் இடமளிக்கிறது.
புவியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈா்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'புவியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது
நெப்பந்தஸ் எனப்படும் குடுவைத் தாவரம் ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். ஊட்டச்சத்தற்ற சதுப்பு நிலத்தில் வாழும் இது பூச்சிகள் மூலமே நைதரசனைப் பெற முடிகிறது.
கௌதம புத்தா் ஞானம் பெற்ற போது அமா்ந்ததாகக் கூறப்படும் போதி மரம் உண்மையில் ஓா் அரச மரமாகும்.
பாண்டா கரடியின் முதன்மை உணவு மூங்கில் ஆகும். எனவே மௌடம் ஏற்படும் போது அவை பெரிதும் அல்லற்படுகின்றன.
தமிழ்ச் சிற்பப்பாட்டு என்றழைக்கப்படும நூல் நெடுநல்வாடை. இதை இயற்றியவர் நக்கீரர். இது அகப்பொருள் பற்றி பேசினாலும் புறப்பொருள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறத்திலிருக்கும். காரணம் சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் இல்லை.
கண்பார்வை இல்லாதவர்களுக்கும் கனவு வரும். பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு கருப்பு வெள்ளைக் கனவுகள் தான் வரும்.
யூ எசு பி (படம்) எனப்படும் பல்தொடர் இணைப்பியைக் கண்டுபிடித்தவர் இன்டெல் நிறுவனத்தின் அஜய் பட்.
உலகிலேயே மிக உயரமாக வளரக் கூடிய புல் மூங்கில் ஆகும்.
இந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சில் ஏறிய மொழி தமிழ் மொழி ஆகும். அச்சடிக்கப்பட்ட நூல் விவிலியம்.
மாக்னசு காள்சன் (படம்) என்ற நார்வே நாட்டு சதுரங்க வீரர் மிகக்குறைந்த வயதிலேயே (19-வயது) உலக சதுரங்கக் கூட்டமைப்பு (பீடே) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்; காரி காஸ்பரோவ், தன் 22-வது வயதில் முதலிடம் பெற்றார்.
டாக்காவில் நடைபெற்ற 11-வது தெற்காசிய விளையாட்டுகள் - 2010இன் சின்னத்தில் (mascot) தீப்பந்தத்தை ஏந்திய வண்ணாத்திக்குருவி வைக்கப்பட்டிருந்தது.
செருமனியின் வேந்தர் (அ) பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் ; பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் பின்னர் செருமனியின் முதல் பெண் வேந்தர் இவரே.
வளர்ந்த மனிதருக்கு எலும்புகளின் எண்ணிக்கை 206. ஆனால், பிறக்கும் போது 270 எலும்புகள் இருக்கும்; வளர வளர அவை ஒன்றிணைந்து 206 ஆக எண்ணம் மாறுகின்றது.
உரூபாய் தாள்கள் செய்யப்படுவது மரக்கூழினால் அல்ல; மாறாக, பருத்தியினால் அவை ஆனவை. எனவே தான், காகிதத்தைப் போல தண்ணீரில் உரூபாய் தாள்கள் உருக்குலைந்து போவதில்லை.
அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது சூரியன்.
இந்தியாவின் தேசிய மரம் ஆல் (ஆலமரம்); தேசியப் பழம் மாம்பழம் (படம்); விளையாட்டு - வளைகோற் பந்தாட்டம் (ஆக்கி); ஆறு - கங்கை; நாட்காட்டி - சக யுகத்தை அடிப்படையாகக் கொண்டது; நீர்வாழ் விலங்கு = ஆற்று பறளா(ஆற்று டால்பின்).
ஐசுலாந்து எரிமலை எய்யாபியாட்லயாகுட்டின் எரிமலை வெடிப்புமை எண் (Volcanic Explosivity Index - VEI) (எவெஎ) நான்கு. இந்தோனேசியத் தீவொன்றில் இருக்கும் தம்போரா எரிமலை 1815- இல் வெடித்ததில் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் இறந்தனர்; தம்போராவின் எவெஎ (VEI) - ஏழாக இருந்தது.
மனித வயிற்றில் செரிப்பிக்கும் காடிகள் (அமிலங்கள்) துத்தநாகத்தையே கரைக்கும் அளவிற்கு வீரியமானவை. வயிற்றுச்சவ்வில் உள்ள உயிரணுக்கள் மிக விரைந்து தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன; இதனால் வயிற்றில் சுரக்கும் காடிகளுக்கு உயிரணுக்களைக் கரைக்கும் அளவிற்கு காலநேரம் இருப்பதில்லை.
தமிழ் நாடு சட்டப் பேரவைத் தொகுதிகள் மொத்தம் 234. ஆனால், அரசமைப்புச் சட்டப்பிரிவின் 333- ஆம் கூறுப்படி, ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 235.
இலங்கையின் நிருவாகத் தலைநகராக ஸ்ரீ செயவர்த்தனபுரம் கோட்டை 1982-இலிருந்து இருந்து வருகிறது; வணிகத் தலைநகரான கொழும்பு அதற்கு முன்னர் இலங்கையின் தலைநகராக இருந்தது.
அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பகுதி மூளையிலுள்ள முகுளம் ஆகும்; இது முள்ளந்தண்டின் உச்சியில் உள்ளது.
தமிழகத்தின் மரபுக்கலைகளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும் ( படம் ) நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.
கடலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் மாபெரும் பாதிப்பிற்குள்ளான ஹெய்ட்டி மக்களுக்கு உதவுவதற்காக வீ ஆர் த வோர்ல்ட் 25 ஃபார் ஹெய்ட்டி என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது.
ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு ஒளியாண்டு எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.
பூமி உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.
வவ்வால்கள் புறவொலி அலை களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வலைகள் தடைகளின் மீது பட்டு, வவ்வால்களுக்கேத் திரும்பி வருகின்றன. இதன் மூலம் வழி அறியும் வவ்வால்கள் இருளிலும் பறக்கின்றன.
பெப்ரவரி 29 அன்று பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி” எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
கல்திட்டைகள் (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.
1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
துருக்கி யைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோய். இங்கு வசிப்பவர்கள் சீழ்க்கை அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக சீழ்க்கை மொழி வழக்கத்தில் இருக்கிறதாம்.
தனித்தனியே எடைபோடப்பட்ட ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதை ஆர்க்கிமிடிசு தத்துவத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
சூரியவொளி யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.
ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis (Plegadis falcinellus) என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.
தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட பரிதிமாற்கலைஞர் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.
லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்.
ஒரு மின்னல் கீற்று வளிமண்டலத்தை 50,000 டிகிரி பாரன்ஹைட் வரையில் சூடேற்றுகிறது.
முதல் சிப்கோ இயக்கம் (1974)கார்வாலில் நடைபெறவில்லை; 1730 -ஆம் ஆண்டில் ஜோத்பூர் மாவட்டத்தின் கேஜார்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்கள் அவர்களின் புனித மரமான கேஜ்ரியைக் (வன்னி மரம்) கட்டியணைத்தவாறு உயிர் துறந்தனர்.
காவலூரிலுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறிய கோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. [1]
சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் திலாப்பியா வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
லூதியானாவில் தான் இந்தியாவிலேயே அதிகளவில் மெர்செடிஸ் மகிழுந்து வைத்திருப்பவர்கள் உள்ளனர்.[2]
உலகின் விருப்பமான பழம் தக்காளி. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம். [3]