1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குனூஇயங்குதளம் இன்று வரை வெளியிடப்படவில்லை. மாறாக குனூ மென்பொருட்கள் லினக்சு கருனியுடன் இணைக்கப்பட்டு குனூ/லினக்சு திறந்த மூல இயக்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது.
இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்தவை.
கர்வா சௌத் என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.
முத்து வீரியம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.
இடையறா இயக்கம் எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.
2004 இல் நடைபெற்ற கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து நிகழ்வுக்குப் பின்னர் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மயன் செங்கோண முக்கோண விதியின் (படம்) படி ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தை வர்க்கம், வர்க்க மூலம் போன்றவற்றின் உதவி இல்லாமலேயே தோராயமாகக் கண்டுபிடிக்க முடியும்.
துலா என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் எனப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனப்படுகின்றன.
செப்புக்கு (படம்) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும்.
சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எயிற்பட்டினம் என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
ஐந்தொகை என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.
தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகனங்களின் பதிவெண்களில் "TN" என்ற முன்னொட்டுக்குப் பின் வரும் இரு எண்ணிலக்கங்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொருத்து மாறுகின்றன.
மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.
நாச்சோ (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.
1969 இல் எழுதப்பட்ட கந்தன் கருணை நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.
வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை ஷபாத் (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.
இன்சாஸ் ரக துப்பாக்கி இந்திய சிறு படைக்கல அமைப்பால் இந்திய இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது.
பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை கொக்கோகம் என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக பெர்சி கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.
திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட திப்புவின் புலி (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.
அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே ஒரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் கூட்டுத் தொடர் எனப்படுகிறது.
மகடூஉ முன்னிலை என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.
அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடுவல்லரசு எனப்படும்.
ஹரிதாஸ் திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.
”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயுமெத்தேன் (CH4).
ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் முதலெழுத்து செய்யுள் எனப்படுகிறது.
சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட டொயோடா உற்பத்தி முறைமை உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது
1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை பிரெட்டன் வுட்சு முறைமை என்றழைக்கப்பட்டது.
நகரும் கற்கள் (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.
பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சைமன் குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
தமிழ்நாடு சட்டமன்ற கீழவையின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.
ஜுனூன் தமிழ் என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.
அழ. வள்ளியப்பா இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான சூரியனின் வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.
தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால்நர்மதை, தபதி,மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
இலங்கைச் சிங்கம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.
வரையறுக்கப்பட்ட போர் எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.
பனாமா கால்வாய் அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும்.
உலகப் புத்தகத் தலைநகரம் என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.
புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.
ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!
1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட சுயாட்சிக் கட்சி, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.
டி. ஈ. லாரன்சு (படம்) முதல் உலகப் போரில்ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்று பரவலாக அறியப்படுகிறார்.
விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான எம். வி. வெங்கட்ராம் ஆவார்.
தென்னை, பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் இனிப்புச் சுவையுடைய ஆல்ககோல் அற்ற திரவமே பதநீர் எனப்படுகிறது.
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய் (படம்).
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் சுரதா.
சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
கணித தீபிகை நூலை எழுதிய பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ய என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க0 என்று மாற்றினார்.
முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் பில்லி பௌடன்மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.
டார்வினின் புடைப்பு என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.
சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகின்றது.
2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற நாக்கு முக்கா என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.
இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான கானு சன்யால் பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.
சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை உயிர்காப்பு உடன்பிறப்பு எனப்படுகிறது.
ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் மாக்னா கார்ட்டா.
பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் கொடுந்தமிழ் நாடு என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய அல் கபோன் கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.