விட்னி எலிசபெத் ஊசுட்டன் (விட்னி எலிசபெத் ஹூஸ்டன், Whitney Elizabeth Houston, ஆகத்து 9, 1963 – பெப்ரவரி 11, 2012) ஓர் அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் நடைமேடை அழகியும் ஆவார். இவர் இசைவட்டுத் தயாரிப்பிலும் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்றிருந்தார். எக்காலத்திற்குமான மிகுந்த விருதுகள் பெற்ற பெண் கலைஞராக 2009ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றிருந்தார்.[3] விட்னி ஊசுட்டன் இரு எம்மி விருதுகளையும் ஆறு கிராமி விருதுகளையும் 30 பில்போர்டு இசை விருதுகளையும் 22 அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். 2010ஆம் ஆண்டுவரை தமது வாழ்நாளில் மொத்தம் 415 விருதுகள் பெற்றார். இசைத்தொகுப்புகள், தனிப்பாடல்கள் மற்றும் ஒளிதங்களாக 170 மில்லியன் விற்றுள்ள ஊசுட்டன் உலகில் மிகவும் கூடுதலாக விற்கப்படும் இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கினார்.[4][5]
விட்னி ஊசுட்டன் அவரது அழகான, கம்பீரமான குரலுக்காக அறியப்பட்டார். அவரது ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ, ஐ வான்ன டான்ஸ் வித் சம்படி(ஹூ லவ்ஸ் மி) போன்ற பாடல்கள் பரவலாக அறியப்பட்டவை. அமெரிக்க நாட்டுப்பண்ணாகிய த ஸ்டார் ஸ்பாங்கிள்டு பானரை அவரது பாணியில் பாடி தனிப்பாடலாக விற்பனை வரைபடங்களில் உச்சத்தை எட்டினார்.[6] இவரது இசைத்தொகுப்புகள் த பாடிகார்டு, விட்னி ஹூஸ்டன், விட்னி என்பன விற்பனையில் சாதனை படைத்தவை.
இவர் "த பொடி கார்ட்", "வெயிட்டிங் டு எக்சேல்", த பிரீச்சர்ஸ் வைஃப், 1997 இல் வெளிவந்த ""சின்ட்ரெல்லா" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 2012 இல் வெளிவரவிருக்கும் "ஸ்பார்க்கிள்" என்ற படத்திலும் நடித்திருந்தார்.
அவரது மரணத்திற்கு முந்தைய சில ஆண்டுகளாக போதைமருந்துப் பழக்கத்தி்ற்கு ஆளாகியிருந்தார். பெப்ரவரி 11, 2012 அன்று கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பெவர்லி ஹில்டன் ஓட்டலில் அறியப்படாத காரணங்களால் மரணமடைந்தார்.[7]
மேற்கோள்கள்
↑"Whitney Houston". Filmbug. January 1, 2000. Retrieved January 2, 2012.