வெசுப்பாசியான்
வெசுப்பாசியான் (Vespasian, 17 நவம்பர் 9 – 23 சூன் 79[1]) என்பவர் கிபி 69 முதல் கிபி 79 வரை உரோமைப் பேரரசராக இருந்தவர். நான்கு பேரரசர்களின் ஆண்டில் இவர் நான்காவதும், கடைசியுமான பேரரசர் ஆவார். இவருடன் இவரது வம்சம் பிளாவியன் வம்சம் என அழைக்கப்படுகிறது. இவரின் வம்சம் உரோமைப் பேரரசை 27 ஆண்டுகள் ஆண்டனர். வெசுப்பாசியான் குதிரை சவாரி செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இக்குடும்பம் யூலியோ-குளோடியப் பேரரசர்களின் கீழ் உரோமை செனட்டர் பதவிக்கு உயர்ந்தார்கள். வெசுப்பாசியான் கிபி 51 இல் உரோமை ஆட்சியாளராகப் பதவியில் இருந்தாலும், அவரது படைத்துறை வெற்றிகளே அவரை மேலும் உயர் பதவிகளுக்கு கொண்டு வந்தது. கிபி 43 இல் பிரித்தானியா மீது உரோமர்களின் ஆக்கிரமிப்பின் போது ஒரு படையணிக்கு இவரே தலைமை தாங்கிச் சென்றார்.[2] கிபி 66 இல் யூதக் கிளர்ச்சியின் போது யூதேயா மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[3] வெசுப்பாசியான் யூதக் கிளர்ச்சியின் போது எருசலேமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதனால் உரோமைப் பேரரசு ஓராண்டு காலத்துக்கு உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. இக்காலப்பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்படுகிறது. கால்பா, ஓத்தோ ஆகியோர் சிறிது காலமே பதவியில் இருந்தனர். கிபி 69 ஏப்ரலில் விட்டேலியசு ஒரே ஆண்டில் மூன்றாவது பேரரசராகப் பதவியேற்றார். உரோமை எகிப்து, யுடேயா ஆகிய மாகாணங்களின் உரோமைப் படையினர் 69 சூலை 1 இல் வெசுப்பாசியானை பேரரசராக அறிவித்தனர்.[4] தனது பேரரசுப் பதவிக்காக வெசுப்பாசியான், சிரிய ஆளுநர் மூசியானுசு போன்றோருடன் நெருக்கமானார். தனது மகன் டைட்டசை எருசலேமின் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தலைமை தாங்க அனுமதித்தார். வெசுப்பாசியான் எகிப்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 69 டிசம்பர் 20 அன்று பேரரசர் விட்டேலியது தோல்வியைத் தழுவினார். அடுத்த நாள் 69 டிசம்பர் 21 அன்று வெசுப்பாசியான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.[5] வெசுப்பாசியான் கிபி 79 இல் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் டைட்டசு பேரரசராக முடி சூடினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia