ஸ்டார் (Star) என்பது இயக்குநர் இளன் எழுதி இயக்கிய தமிழ் மொழியில் 2024இல் வெளியான காதல் நாடகத் திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.[3] இதில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகராக வேண்டும் என்ற தனது கனவைப் பின்தொடர்ந்து பல்வேறு தடைகளைச் சந்திக்கும் கலை என்ற இளைஞனைப் பற்றி இந்தப் படம் கூறுகிறது.
கதைச் சுருக்கம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கலை என்பவனுக்கு திரையுலகில் ஒரு நடிகனாக வர வேண்டும் என்பது மட்டுமே அவனது ஆசை. ஒரு புகைப்படக் கலைஞரான அவனது அவனது தந்தை பாண்டியன் அவனது கனவுகளுக்கு துணையாக நிற்கிறார். கலை தனது லட்சியங்களை அடைந்து வெள்ளித்திரையில் தன்னை நிரூபித்தானா? என்பதே படத்தின் கதை.[4]
தயாரிப்பு
ஆரம்பத்தில், ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[5] ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக கவின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6] இந்த படம் ஆகஸ்ட் 2023 இல் ‘கவின்ஸ் நெக்ஸ்ட் ’ என்ற தற்காலிக தலைப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.[7] முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி ஜூன் 2023 இல் தொடங்கியது.[8] இது பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டு, 2024 ஆண்டு பிப்ரவரியின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது.[9] இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,[10][11] எழில் அரசூ கே ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
திரைப்படம் 10 மே 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[12][13] கவின் மற்றும் லாலின் நடிப்பு, ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை ஆகியவற்றிற்காக பாராட்டுகளுடன், விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிலிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[14][15][16] ஆனால் இளனின் திரைக்கதை விமர்சிக்கப்பட்டது.[17]
வெளியீடு
ஸ்டார் திரைப்படம் 10 மே 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[18][19]