ஸ்மோலென்ஸ்க் சண்டை (1941)
ஸ்மோலென்ஸ்க் சண்டை (Battle of Smolensk) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கவச படைமோதல். இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும். இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் நடு இன் ஒரு பகுதியான 2வது, 3வது பான்சர் குரூப் படைப்பிரிவுகள் மூன்று வார இடைவிடா முன்னேற்றத்துக்குப் பின் ஸ்மோலென்ஸ்க் நகரை அடைந்தன. இரு கிடுக்கிகளாக டினீப்பர் ஆற்றைக் கடந்து ஸ்மோலென்ஸ்க் நகரை சுற்று வளைக்க ஜெர்மானிய தளபதிகள் திட்டமிட்டனர். அதுவரை தொடர்ந்து பின்வாங்கி வந்த சோவியத் படைகள் ஸ்மோலென்ஸ்க்கில் ஜெர்மானியர்களை எதிர்த்துத் தாக்கின. நான்கு சோவியத் களப் படைப்பிரிவுகள் இத்தாக்குதலில் ஈடுபட்டன. ஜுலை முதல் வாரத்தில் துவங்கிய இத்தாக்குதல் ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தியது ஆனால் தடுத்து நிறுத்தவில்லை. வடக்கில் ஹெர்மன் ஹோத் தலைமையிலான 3வது பான்சர் குரூப்பும் தெற்கில் ஹெய்ன்ஸ் குடேரியன் தலைமையிலான 2வது பானசர் குரூப்பும், கிடுக்கியின் இரு கரங்களாக செயல்பட்டு தாக்கும் சோவியத் படைகளை சுற்றி வளைக்க முயன்றன. ஜூலை மாத இறுதிக்குள் சோவியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு, ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. ஒரு இறுதி கட்ட தாக்குதல் மூலம் பல சோவியத் படைப்பிரிவுகள் ஜெர்மானியக் கிடுக்கியிலிருந்து தப்பினர். எனினும் ஏறத்தாழ மூன்று லட்சம் சோவியத் வீரர்கள் அவ்வளையத்தில் சிக்கிக் கொண்டு சரணடைந்தனர். குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia