2011 நோர்வே தாக்குதல்கள்2011 நோர்வே தாக்குதல்கள் என சூலை 22,2011 அன்று நோர்வேயில் அரசு அலுவலகங்கள் மீதும் அரசியல் கட்சியொன்றின் வேனிற்கால முகாம் மீதும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரட்டைத் தீவிரவாத வன்முறைகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவதாக மத்திய ஐரோப்பிய வேனில் நேரப்படி 15:25:19 மணிக்கு மகிழுந்து ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திற்கு வெளியே அரசுச் செயலகக் கட்டிட வளாகத்தில் வெடித்தது.[1][2] இந்த குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். இரண்டாவது தாக்குதல் முதல் நிகழ்விற்கு இரண்டுமணிக்கூறுகளுக்கு பின்னர் உதோயா தீவில் நோர்வேயின் தொழிலாளர் கட்சி தனது இளைஞரணிக்காக ஏற்பாடு செய்திருந்த வேனிற்கால முகாமில் நடந்தது. காவல்துறையினரைப் போன்று உடையணிந்திருந்த நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் கூடியிருந்தவர்களைச் சரமாறியாக சுட 69 பேர் கொல்லப்பட்டனர்.[3][4] இவர்களில் நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் அண்மித்த நண்பர்களும் நாட்டரசி மெட் மாரிட்டின் ஒன்றுவிட்ட சகோதரரும் அடக்கமாகும்.[5] இந்த பெருந்திரள் கொலைக்குக் காரணமாக 32 அகவை நிரம்பிய வலதுசாரி தீவிரவாதி ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்கை நோர்வே காவல்துறை கைது செய்தது[6][7]; பின்னர் அலுவலக வளாக குண்டு வெடிப்பிற்கும் இவரே காரணம் என குற்றம் சாட்டியது.[8] ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் நோர்வேக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டன. உதோயாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, பதியப்பட்ட வரலாற்றில் ஒரு தனிமனிதனால் கூடுதலான மக்கள் கொல்லப்பட்ட ஓர் நிகழ்வாகும்.[9] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
ஒளிப்படங்கள்
|
Portal di Ensiklopedia Dunia